Close
செப்டம்பர் 20, 2024 3:39 காலை

ஹெச் ஐ வி உள்ளோர் நலச்சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டத்தில் நம்பிக்கை சுவரொட்டி வெளியீடு

புதுக்கோட்டை

'நம்பிக்கையுடன் வாழ' என்ற போஸ்டரை வெளியிட்ட வாசகர் பேரவை செயலர் விஸ்வநாதன்

புதுக்கோட்டை மாவட்ட ஹெச்ஐவி உள்ளோர் நலச்சங்கத்தின் 2022-2023ஆம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் நேற்று மச்சுவாடியில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.

மாவட்டம்தோறும் இருக்கும் இவ்வமைப்பின் மூலம் ஹெச்ஐவி உள்ளோர்களைக் கண்டறிவது, அவர்களுக்கு நல் ஆலோசனைகளை வழங்குவது, தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுப்பது, அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுத் தருவது, புரவலர்கள் மூலமாக உதவிகளைப் பெற்றுத்தருவது என்று பல பணிகள் நடைபெறுகிறது.

தலைவர் ராமசாமி கடந்த ஆண்டில் செய்த பணிகளை விரிவாக எடுத்துக் கூறினார். அமைப்பின் செயலர் அழகேசன் எதிர்கால திட்டங்களை எடுத்துக் கூறினார். பொருளாளர் அம்சவல்லி வரவு செலவு அறிக்கை வாசித்தார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட புதுக்கோட்டை மாவட்ட இந்திய ரெட்கிராஸ் சங்க இணைச்செயலர் சா.விஸ்வநாதன், “ART மருத்துவரின் ஆலோசனைப்படி ART சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டால் தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியுடன் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழலாம்” என்ற வாசங்கங்கள் அடங்கிய ‘நம்பிக்கையுடன் வாழ’ என்ற போஸ்டரை வெளியிட்டுப் பேசினார்.

ஹெச்ஐவி உள்ளவர்கள் முறையாக உணவும், மாத்திரையும் எடுத்துக்கொண்டால் நீண்டகாலம் உயிர் வாழலாம் என்பதற்கு படத்தில் இருக்கும் ராமசாமியே உதாரணம். உயிர் போகும் தருவாயில் இருந்தவர் 25 ஆண்டுகளைக் கடந்து இன்னும் நலமுடன் வாழ்ந்து கொண்டிருப்பதோடு ஆயிரக்கணக்கான ஹெச்ஐவி தொற்றாளர்களுக்கு உதவக் கூடியவராகவும், வழிகாட்டியாகவும் இருந்து கொண்டிருக்கிறார்.

நோய் வந்துவிட்டதே என்று வருந்துவதை விட்டு சரியான வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டு நீண்டகாலம் வாழ முயற்சி எடுக்கவேண்டும் என்று பொதுக்குழுவில் கலந்துகொண்ட உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.

புதுக்கோட்டையில் இந்த அமைப்பின் மூலம் 3393 பேர் கண்டறியப்பட்டு முறையான மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சைகளும், மாத்திரைகளும் அரசு வழங்கும் உதவிகளும் பெற்று வழங்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top