தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மீன் பிடித்திருவிழா பிரபலமான விழாவாகும். குறிப்பாக புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது
நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதற்காகவும், நன்றாக விளைச்சல் வேண்டும் என்பதற்காகவும், மக்கள் மகிழ்ச்சி யோடு இருக்கவேண்டும் என்பதற்காகவும் கிராம மக்கள் முழக்கமிட்டு கண்மாய் நீரில் மீன் பிடிக்கச் செல்கின்றனர். மீன் பிடித்தால் நல்ல மழை பெய்யும் என்றும், மீன்பிடித் திருவிழா நடத்தாவிட்டால் வறட்சி ஏற்படும் என்பதும் கிராம மக்களின் நம்பிக்கையாகும்..
மேலும், வணிக நோக்கமின்றி வீட்டுத்தேவைக்காக ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி மீன் பிடிப்பது கிராம மக்கள் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உணர்த்தக்கூடிய முக்கிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள பெரிய கண்மாயில் 400 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கதாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஒரு காலத்தில் சோழப்பேரேரி என அழைக்கப்பட்ட இந்தக் கண்மாயில் மீன்பிடித்திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே ஆலத்தூர் அருகேயுள்ள பெரிய கண்மாயில் நடைபெறும் மீன்பிடி விழாவிற்கு முன்பாக கண்மாயின் கரையிலுள்ள பிடாரியம்மன், மடை கருப்பர் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்துகின்றனர். இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மீன் பிடித்துச்செல்கின்றனர்
கிராமத்து கண்மாயில் முழங்கால் அளவிற்கு நீர் இருக்கும் நிலை வந்தவுடன், மீன்பிடி விழா தொடர்பாக அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து ஒரே நேரத்தில் கரையில் காத்திருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊர் பெரியவர்கள் துண்டை வீசி அனுமதியளித்தவுடன் வேகமாக கண்மாய்க்குள் இறங்கி மீன்வலை, சேலை, வேட்டி மற்றும் கச்சா மூலம் மீன்களை பிடிக்கின்றனர். பெரும்பாலும், கெண்டை, கெழுத்தி, அயிரை, விரால், ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் பிடிக்கப்படுகின்றன.
இந்நிலையில், புதுக்கோட்டைமாவட்டம், பொன்னமராவதியி லிருந்கு வேந்தன்பட்டி செல்லும் வழியில் உள்ள ஏனாதி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை கோலகலமாக நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்று மீன்களை பிடித்தனர்.