புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 6 -வது ஆண்டாக(2023) நடத்தும் புதுக்கோட்டை புத்தகத்திருவிழா ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 6 புதுக்கோட்டை நகர்மன்றத்தில்(28.07.2023 முதல் 06.08.2023) 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இப்புத்தகத் திருவிழா குறித்து பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் பொதுஇடங்களில் புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற மாபெரும் நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது.
புத்தகத் திருவிழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று அதிக அளவிலான புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா புத்தகத் திருவிழா தொடர்பான விவரக் கையேடுகளை அண்மையில் வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, மாவட்டம் முழுதும் உள்ள பள்ளிகளில் கையேடுகள் விநியோகிக்கும் இயக்கம் தொடங்கியுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை அருகேயுள்ள மேலப்பட்டிஅரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மாணவ ,மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை ஆசிரியர்கள் வழங்கினார்கள்.
புத்தகத் திருவிழாவுக்குக்கு அவசியம் செல்வோம். தங்களது பெற்றோர்களையும் அழைத்து வருவோம். புத்தகங்களை வாங்குவோம். அதற்காக இப்போதிருந்தே பணத்தை சேமிக்கத் தொடங்கியுள்ள தாகவும் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.