புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் முறையாக தார் சாலை அமைக்கப்படவில்லை என்று நகர்மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சி நகர் மன்ற கூட்ட அரங்கில் நகர் மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் தலைமையில் துணைத்தலைவர் எம். லியாகத்அலி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
இந்நிலையில் 29 -ஆவது வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினர் சுப. சரவணன் கூறியதாவது: புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் நகர்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் தார் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தத்தார்ச் சாலைகள் தரமற்ற முறையில் போடப்படுகிறது.
தார் சாலைகள் தரமான முறையில் போடப்பட வேண்டும். இல்லை என்றால், தார் சாலையே அமைக்க வேண்டாம் என்றும் நகர் மன்ற தலைவரிடம் புகார் கூறினார்.
திமுக ஆட்சியில் திமுக கவுன்சிலரே நகராட்சி நிர்வாகத்தை குற்றம் சாட்டி பேசியது நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து 34 வது வார்டு காங்கிரஸ் கட்சி நகர் மன்ற உறுப்பினர் ராஜா முகமது பேசியது: தனது வார்டு பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் கால்நடைகளை கடிப்பதினால் கால்நடைகள் உயிரிழக்கும் நிலை உள்ளது.
இதே போன்று மனிதர்களையும் நாய்கள் இரவு நேரங்களில் துரத்தி செல்வதால் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் கீழே விழுந்து காயமடையும் சூழ்நிலை நீடித்து வருகிறது. உடனடியாக தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனக்குறிப்பிட்டார். பின்னர்இறந்து போன கால்நடைகளின் உருவப் படத்தினை பிளக்ஸ் பேனரை அரங்கில் கொண்டு வந்து காண்பித்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.