Close
நவம்பர் 22, 2024 7:08 காலை

தஞ்சை தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

தஞ்சாவூர்

தஞ்சை தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கலைப்போட்டிகள்

பள்ளி, கல்லூரி மாணாக்கர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப் பெற்று பரிசுகள் வழங்கப் பெற்று வருகின்றன.

அதனடிப்படையில் 2022-23ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலானகவிதை, கட்டுரை,பேச்சுப் போட்டிகள் 11, 12 -ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு 05.07.2023 (புதன்கிழமை) அன்றும், கல்லூரி மாணாக்கர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 07.07.2023 (வெள்ளிக்கிழமை) அன்றும் தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள்:

1.பள்ளி மாணாக்கர்களுக்கான போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகையான பள்ளிகளில் (அரசு,உதவி பெறும், தனியார்) 11 அல்லது 12 -ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

2. கல்லூரி மாணாக்கர்களுக்கான போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகையான கல்லூரிகளில்; (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலைக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் முதலியன) பயிலும் மாணாக்கர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

3. ஒவ்வொரு போட்டிக்கும் பள்ளி, கல்லூரிகளிலிருந்து ஒரு மாணாக்கர் வீதம், 3 போட்டிகளுக்கு 3 மாணாக்கர்கள் அனுப்பப் பெற வேண்டும்.

4. போட்டி நடைபெறும் நாளன்று காலை 9.30 மணிக்குள் வருகை  தரவேண்டும்.

5.போட்டிகளுக்கான தலைப்புகள் பங்கேற்கும் மாணாக்கர்களுக்கு போட்டி நடைபெறும் நேரத்தில் தெரிவிக்கப் பெறும். போட்டிகளுக்கான தலைப்புகள் பெரும்பாலும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்நாடு குறித்த வகையில் அமையும்.

6.போட்டி முடிவுகள் போட்டி நடைபெறும் நாளன்றே தெரிவிக்கப் பெறும். போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முறையே முதற் பரிசுரூ.10,000- ம், இரண்டாம் பரிசுரூ.7,000-ம், மூன்றாம் பரிசுரூ.5,000 -ம் வழங்கப் பெறும்.

7. போட்டிகளில் பங்கேற்கும் மாணாக்கர்கள்தாங்கள் பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியர்- கல்லூரி முதல்வரின் அனுமதிக் கடிதத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

8.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்கள்; கடவுச்சீட்டு அளவிலான3 நிழற்படங்களை போட்டி நடைபெறும் நாளன்றே அளித்திட வேண்டும்.

9. போட்டிகளில் பங்கேற்கும் மாணாக்கர்களின்விவரங்கள் பள்ளி,கல்லூரி மூலமாக வரும் 30.06.2023-க்குள் தஞ்சாவூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (tamilvalar.tnj@gmail.com) அனுப்பப் பெறவேண்டும்.

இப்போட்டிகள் தொடர்பாக மேலும் விவரம் அறிய விரும்புவோர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலும், 04362-271530 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப்  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top