Close
செப்டம்பர் 20, 2024 3:33 காலை

புத்தகம் அறிவோம்… மது விலக்கு…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்.. மதுவிலக்கு- ராஜாஜி

இந்தியாவில் மதுவின் தீமைகளைப் பற்றி அதிகம் பேசிய தலைவர்கள் மகாத்மா காந்தியும் ராஜாஜியும் தான். இந்தியாவில் மதுவிலக்கு இயக்கத்திற்கு நிகரற்ற தலைவராக சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி விளங்குகிறார் என்று ஜவர்ஹர்லால் நேரு குறிப்பிட்டிருக்கிறார்.
1937 ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்த போது முதன்முதலில் மதுவிலக்குச் சட்டம் சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, இந்த சட்டத்தின்படி சேலம், கடப்பை, சித்தூர், வட ஆற்காடு ஜில்லாக்களில் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத்தின்படி மேற்கண்ட ஜில்லாக்களில் கள், சாராயம், சீமைச் சாரயம், அபினி, கஞ்சா போன்ற லாகிரிப் பொருட்கள் விற்கும் கடைகள் மூடப்பட்டன. பின்னர் ராஜாஜி பதவி விலகிய பின்னர் ஆங்கிலேய அரசாங்கத்தால் மீண்டும் 1944ல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
அதற்க்கு சொல்லப்பட்ட காரணம், இப்போதும் அரசு சொல்லும் காரணங்கள்தான். கள்ளச்சாராயம் பெருகிவிட்டது. அரசிற்கு வரி வருவாய் குறைந்துவிட்டது. மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை என்பதுதான். (இன்று வழங்கப்படும் இலவசங்கள் எல்லாம் மது வருவாயில் இருந்துதான் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.)
1943 முல்லை முத்தைய நடத்திய கமலா பிரசுராலயத்திற்காக ராஜாஜி எழுதிக் கொடுத்த நூல் தான்”மதுவிலக்கு -கள் ஒழிக”. தற்போது 2013 -ல் முல்லை பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. மதுவிலக்கு பற்றி அனைத்து விவரங்களையும் கொண்ட நூல் என்று பதிப்பகத்தார் குறிப்பிடுகின்றனர். உண்மையும் கூட.
மதுவிலக்குக்கு ஆதரவாகவும், அரசுத்தரப்பின் மதுக் கொள்கையை விமர்சித்தும் ராஜாஜி வைக்கும் ஆணித்தரமான வாதங்கள், இன்றைக்கும் பொருத்தமாக இருக்கின்றன என்பதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பு.
மதுபானம் பற்றிய எல்லா விவரங்களையும் ராஜாஜி துள்ளியமாக பட்டியலிடுவதுடன் மருத்துவ ரீதியாக அதனால் ஏற்படும் தீமைகளையும், பொருளாதார ரீதியா ஏற்படும் இழப்புகளையும் சமூக ரீதியாக ஏற்படும் சீரழிவுகளையும் தர்க்க ரீதியாக விவாதித்திருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்கிறார் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன். அவரின் வேண்டுகோளை ஏற்றே இந்த பதிப்பு வந்துள்ளது.
மதுரசாயனம், பொருள் நஷ்டம், கள்ளும் ஆரோக்கியமும், களைப்புக்கும் ஆகாது, மருந்துக்கு உதவாது, சீலக் கேடு, மிதக்குடிப்பேச்சு, கலால் வருமானம், அபினி கஞ்சா, விதண்டாவாதங்கள் என்று 10 தலைப்புகளில் இந்நூல் அமைந்துள்ளது.
மதுவின் தீமைகளைச் சொல்வதற்கு பல அறிஞர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் கருத்துக்களை எடுத்துச் சொல்லி தன் வாதத்திற்கு வலு சேர்க்கிறார் ராஜாஜி.லிவர்பூல் பல்கலைக்கழக பேராசிரியர் ஜான்ஹே எழுதியிருக்கிறார்.. நோயாளிகளில் யாருக்கு மதுபான வழக்கமுண்டோ அவர்களுக்கு வியாதியைத் தடுக்கும் பலம் குறைவு.
மதுவினால் 7 வகையான நோய்கள் – மயக்கம், புலம்பல், பைத்தியம், தூக்கமின்மை, நரம்புத்தளர்ச்சி, வலிப்பு, பக்க நோய்-வரும் என்றும் இதனால் 21 வகையான உடல் உபாதைகள் உருவாகும் என்றும் பட்டியலிடுகிறார் ராஜாஜி.
இறுதியாக ஒரு செய்தியைச் சொல்கிறார்… சமுதாயத்திற்கு பெரும் நஷ்டத்தை உண்டாக்கக் கூடிய ஒரு வியாபாரத்தை நடக்கச் செய்து அதில் ஒரு பங்கை சமுதாயம் மறுபடி பெருவதைக்காட்டிலும் வேறு வரிகள் போட்டுக்கொண்டு அரசாங்க நிர்வாகத்தை நடத்துவது மேன்மையான வழி.
ஏழைக் குடும்பங்களைக் கெடுக்கும் ஒரு வியாபாரத்தை வைத்துக்கொண்டு மற்றவர்கள் அதிலிருந்து வரும் லாபத்தில் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு சுகம்பெறுவது தருமமல்ல: ராஜநீதியுமல்ல.( பக்.66). இந்த நூலில் அட்டைப்படத்தில் தொடங்கி உள்ளேயிருக்கும் படங்களுக்கான கருத்தைத் தந்தவர் ராஜாஜியே.
பின்குறிப்பு: கலைஞர் கருணாநிதி சாராயக்கடைகளைத் திறக்க முற்பட்டபோது அவர் வீடு தேடிச்சென்று “திறக்க வேண்டாம்” என்று கெஞ்சியவர் ராஜாஜி.
# பேராசிரியர் விஸ்வநாதன்- வாசகர் பேரவை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top