புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீடு வழங்காமல் தாமதம் செய்த காரணத்தால் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்றப் பணியாளர்கள் ஜப்தி செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் செங்களாக்குடியைச் சேர்ந்த சரவணன் (42) என்பவர், கடந்த 2021 இல் பால் விநியோகம் செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி சென்றபோது, மணப்பட்டியில் இருந்து வந்த அரசு நகரப் பேருந்து மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சரவணன், திருச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து வழக்கில், உயிரிழந்த சரவணன் குடும்பத்துக்கு ரூ. 27.68 லட்சம் இழப்பீடு வழக்க வேண்டும் என அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இழப்பீடு வழங்கப்படாததைத் தொடர்ந்து, அரசுப் பேருந்தை ஜப்தி செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த நீதிமன்றப் பணியாளர்கள், இலுப்பூர் நகரப் பேருந்து ஜப்தி செய்து நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றனர்.இதனால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.