புதுக்கோட்டை அருகே பழங்குடியினர் குடியிருப்பில் மண்டிக்கிடக்கும் புதர்களில் பாம்புகள் பதுங்கியிருந்து அச்சுறுத்துவதாகவும் உ.யிருக்கு ஆபத்து அதிகரித்துள்ள தாகவும் கூறி, வட்டாட்சியர் அலுவலகச் சாலையில் அந்த மக்கள் புதன்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், செம்பாட்டூர் அருகே வள்ளிநகரில் தொட்டி நாயக்கர் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இங்கு சுற்றிலும் புதர் மண்டிக் கிடப்பதாலும், தெருவிளக்கு இல்லாததாலும் பாம்புத் தொல்லையால் அப்பகுதி மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஓர் இளைஞர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் டி. சலோமி தலைமையில், அப்பகுதி மக்கள் புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் குறித்து தகவலறிந்து வந்த வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் உடனடியாக அப்பகுதியில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு புதர்களை அகற்றி மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.