Close
நவம்பர் 22, 2024 11:33 காலை

சொட்டு நீர்ப் பாசனம் தெளிப்பு நீர்ப் பாசனம் அமைக்க அரசு மானியம்: ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல்

புதுக்கோட்டை

சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைந்த நீரில் அதிக மகசூல் பெற நுண்ணீர் பாசனம் அமைக்க அரசு மானியம் வழங்கப் படுகிறது.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் சொட்டு நீர்ப் பாசனமும் தெளிப்பு நீர்ப் பாசனமும் அமைத்து குறைந்த நீரில் அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம்.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் நுண்ணீர் பாசனத் திட்டமானது “ஒரு துளி நீரில் அதிகப் பயிர்” என்ற குறிக்கோளுடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் நுண்ணீர்ப் பாசனக் கருவிகளான சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழைத்தூவான் அமைத்திட சிறு, குறு விவசாயிகளுக்கு 100%  மானியமும், இதர விவசாயிகளுக்கு 75%  மானியமும் வழங்கப்படுகிறது.

நுண்ணீர் பாசன திட்டத்தில் நடப்பு நிதி ஆண்டிற்கு அரசிடமிருந்து 800 எக்டேர் பரப்பிற்கு வேளாண் துறை மூலம் பதிவு செய்திட இலக்கு பெறப்பட்டு, விவசாயிகளைத் தேர்வு செய்து பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தாமாகவே www.tnhorticulture.tn.gov.in என்ற வலைத் தளத்தில் MIMIS என்ற இணைப்பில் பதிவு செய்ய வேண்டும்.

அல்லது விவசாயிகள் தங்கள் பகுதியின் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் கணினிச் சிட்டா, அடங்கல், சிறு குறு விவசாயி சான்று, ஆதார் அட்டை நகல், நில வரை படம், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மண் மற்றும் நீர் பரிசோதனை மாதிரி முடிவுகள் போன்ற ஆவணங்களைக் கொடுத்து இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

நுண்ணீர்ப் பாசன முறையில், குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிக அளவுப் பரப்பில் சாகுபடி செய்யலாம். இதனால் நீர் விரயம் குறைவதோடு பயிருக்குத் தேவையான நீர் நேரடியாகப் பயிரின் வேர்ப் பகுதிக்குச் செல்வதால் களைகளின் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படுகிறது.

செட்டுநீர் பாசன முறையில் பயிர்களுக்கு தேவையான சத்துகளை கொடுப்பதற்கு நீரில் கரையும் உரங்களை பயன்படுத்தி சொட்டு நீர் பாசன அமைப்பின் மூலம் உள்ள உரக் கலன்கள் அல்லது வெஞ்சுரி எனப்படும் அமைப்பின் மூலம் வழங்கலாம்.

இதனால் உரம் விரயமாவது குறைகிறது, உரச்செலவு குறைகிறது. பயிருக்கு தேவையான உரங்களை சரியான நேரத்தில் பயிரின் வேர் பகுதிக்கு அருகில் வழங்குவதன் மூலம் பயிர் வளர்ச்சி அதிகரித்து மகசூல் அதிகரிக்கிறது. மேலும் உரம் வைத்திட ஆகும் ஆட்கள் கூலி செலவும் குறைகிறது. கூடுதல் மகசூலும் கிடைக்கும்.

எனவே,  நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கூடுதல் விவரங்களுக்கு உடன் தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா  தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top