பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
ஈதுல் அல்ஹா என்னும் ஈகைத் திருநாளாம் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகையாக இன்று உலகெங்கும் உவப்புடன் கொண்டாடப்ப டுகின்றது.
தன் ஒரே பிள்ளை என்றும் பாராமல் மூன்று முறை கனவில் கண்டதையே இறைவனின் கட்டளை என்று கருதி, தள்ளாத வயதில் பெற்றெடுத்த இஸ்மாயிலை, நபி இப்ராஹிம் (அலை) பலியிட முன்வந்த தியாகம் இன்றளவும் உலகெங்கும் நினைவு கூரப்படுகின்றது. இஸ்லாமிய வரலாற்றின் திருப்பு முனையாக நடைபெற்றது இந்த நிகழ்வு.
நிறம், சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்பு களைத் தகர்த்து, ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற உணர்வுடன், அரபா பெருவழியில் மானுட சமுத்திரமாக மக்கள் சங்கமித்து, வழக்க வழிபாடுகளில் திளைத்திருக்கும் மகோன்னதம் இன்று அரங்கேறுகிறது; ஈகை உணர்வால், வையகத்தை அய்யமின்றி வாகை சூடலாம் என்று அறிவிக்கின்றது.
தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத் துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.
தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.
புதுக்கோட்டையில் ஈத்கா பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் புத்தாடை அணிந்து திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பண்டிகை வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
இதேபோல குர்பானி கொடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் சிலர் வீடுகளில் பிரியாணி சமைத்து நண்பர்களுக்கு வழங்கினர்.
அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப் பட்டி, காலாடிப்பட்டி, பரம்பூர், வயலோகம், குடுமியான்மலை, பெருமநாடு, புல்வயல், மாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவு துவா நடைபெற்றது.
இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக் கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
இதேபோல் முக்கண்ணாமலைப்பட்டி பள்ளிவாசல் திடலில் திரளான முஸ்லிம்கள் ஒன்றுகூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. அதில் ஊர் நன்மை, உலக நன்மை, மழை பெய்ய வேண்டியும் இறைவனிடம் துவா கேட்கப்பட்டது.
முக்கண்ணாமலைப்பட்டி தவ்ஹீத் ஜமாத் சார்பில் திடலிலும், அன்னவாசல் பல்லூரணி அருகே உள்ள திடல் போன்ற இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
கீரனூர் பகுதி முஸ்லிம்கள் திருச்சி சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதிவழியாக ஜும்மா பள்ளிவாசலை அடைந்தனர். அங்கு சிறப்பு பிரார்த்தனை செய்து, ஏழை, எளியவர்களுக்கு குர்பானி வழங்கினர்.
திருவரங்குளம், மேட்டுப்பட்டி, கைக்குறிச்சி, குளவாய்ப்பட்டி, வல்லத்திராகோட்டை, மழவராயன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிவாசலில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
பொன்னமராவதியில் கேசராபட்டி, இந்திராநகர், நாட்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
ஆலங்குடி ஈத்கா மைதானத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் அனைவரும் வாழ்த்துக்களை ெதரிவித்து கொண்டனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்