Close
நவம்பர் 23, 2024 1:30 மணி

எம் சாண்ட் குவாரிகள் முடக்கம்… தமிழ் மாநில காங்கிரஸ் கண்டனம்

ஈரோடு

தமாகா இளைஞரணி தலைவர் எம். யுவராஜா.

எம்சாண்ட் குவாரிகளை முடக்கி விட்டு மணல் குவாரிகளை அமைத்து   திமுக அரசு லஞ்சத்தில் மிதப்பதாக  தமிழ்மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் எம். யுவராஜா வெளியிட்ட அறிக்கை:

கனிம வளங்களை காக்கும் நோக்கில் அப்போதைய அதிமுக அரசு மணல் குவாரிகளை தவிர்த்து எம்-சாண்ட்டை குறைந்த விலைக்கு கட்டுமான பணிக்கு கொண்டு வந்தது. திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன், மற்ற துறைகளைப் போலவே கல் குவாரிகளுக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி, திமுக அரசின் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளும்,

கனிம வளத்துறை அதிகாரிகளும் குவாரிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி, பல்வேறு புகார்களைக் கூறி, தொழிலை முடக்கும் விதமாக நியாயமின்றி அபராதம் விதிக்கும் போக்கு தொடங்கி உள்ளது. மேலும், கல்குவாரி தொழில் செய்வோர் அந்த துறை அமைச்சரை சந்திக்க நிர்பந்திக்கப்பட்டு அதன் மூலம் திமுக அரசு கோடிகளை வாரிக் குவிக்கவும் திட்டமிட்டுள்ளது.

திமுக அரசு எதிலும் கவனம் செலுத்துவதில்லை, எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. எம்சாண்ட் குவாரிகளை முடக்கி மீண்டும் மணல் குவாரிகள் அமைக்கும் வாய்ப்பை திமுக அரசு உருவாக்கியுள்ளது. இதனால், தமிழகமெங்கும் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கட்டுமானத் தொழில் முழுமையாக நின்றுவிட்டது.

இதனால் வீடு கட்ட நினைக்கும் சாதாரண ஏழை, எளிய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அரசால் கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் முற்றிலுமாக தடைபட்டு விட்டது. தமிழ் நாடு முழுவதும் குவாரி தொழிலை நம்பியுள்ள வாகன தொழில் மற்றும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களும்; கடன் வாங்கி வீடு கட்டும் ஏழை, எளிய, நடுத்தர மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது அக்கறை இருந்தால் இந்த திமுக அரசு மக்களின் நலன் காக்க அவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் திட்டங்களை வகுக்க வேண்டும். ஆனால் மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, என்று மக்களின் கழுத்தை இறுக்கி பிடிக்கும் அளவுக்கு திறமை இல்லாத அரசாக செயல் படுகிறது.

மாநில அரசு கல்குவாரி மற்றும் எம். சாண்ட் ஆகியவற்றிற்கு நேர்மையாக வரி விதித்தால், அவ்வரியினை செலுத்தி நேர்மையாக தொழில் செய்ய தாங்கள் தயாராக இருப்பதாக கல் குவாரி உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் மாநில அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும். குவாரி வருமானம் தனி நபர்களுக்குச் செல்லாமல், அரசுக்குச் செல்லும்.

கட்டுமானப் பொருட்களின் விலையும் நிலையாக இருக்கும். இதனால், வீடு உட்பட அனைத்து கட்டுமானப் பணிகளும் தடையின்றி நடைபெறும். தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

எனவே, இந்த திமுக அரசு, குறிப்பாக கனிம வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள், கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்திடம் பேசி, இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top