வேங்கைவயல் விவகாரம்: மரபணு பரிசோதனைக்கு 8 பேரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இவ்வழக்கின் தீர்ப்பு வருகிற 4 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் தலித் குடியிருப்பின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிச. 26 -ஆம் தேதி வெளி உலகுக்கு தெரியவந்தது.
இதுதொடர்பாக தற்போது விசாரணை நடத்திவரும் சிபி சிஐடி போலீஸார், தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவின் மரபணுவுடன் வேங்கைவயல் மற்றும் இறையூர் பகுதி மக்களின் மரபணுவுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிவு செய்தனர்.
இதுதொடர்பாக கடந்த ஏப்ரலில் 11 பேருக்கு மரபணு பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்க நீதிமன்ற அனுமதி பெறப்பட்டது. ஆனால், 3 பேர் மட்டுமே ரத்த மாதிரிகளைக் கொடுக்க வந்தனர். மீதமுள்ள 8 பேர் வரவில்லை. இது தொடர்பாக அனைவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில், மனுதாரர்களின் கருத்தையும் விசாரணை நீதிமன்றத்தில் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டது.
இதன்படி புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடு மைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் 8 பேரும் வெள்ளிக்கிழமை ஆஜரானார்கள்.
அவர்களிடம், சிபி சிஐடி போலீஸார் மரபணு பரிசோதனை செய்யக் கோருவது குறித்து சனிக்கிழமை பிற்பகலில் ஆஜராகி கருத்துகளைத் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப் பட்டது. அதன்படி 8 பேரும் நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் சனிக்கிழமை பிற்பகல் மீண்டும் ஆஜரானார்கள்.
மரபணு பரிசோதனையில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், பாதிக்கப்பட்ட தங்களையே குற்றவாளிகளாக சித்தரிக்க போலீஸார் முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர்.
சிபி சிஐடி தரப்பில் இவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்க தாங்கள் முயற்சிக்கவில்லை என்றும், இந்த வழக்கில் இதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இதுகுறித்த உத்தரவை வரும் வரும் 4 .7.2023 -அன்று அறிவிப்பதாக நீதிபதி எஸ். ஜெயந்தி அறிவித்தார்.