சிவகாசியில் பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர் – ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதலாவதாக எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற முது மொழிக்கேற்ப பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பூங்கொத்துகள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.
இதனையடுத்து தாங்கள் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்த பெற்றோர் மற்றும் முதியோர்களுக்கு மரியாதை செய்யும் வகையில், பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்களின் கால்களில் நீர் ஊற்றி கழுவி, சந்தனம் குங்குமம் பூசி, பூக்களை தூவி பாத பூஜை செய்தனர். பாத பூஜை செய்த மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர்கள் பூக்கள் தூவி வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்து பள்ளி முதல்வர் கூறும்போது, பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்கள் தங்களது நிலை உயர்வதற்கு காரணமாக இருக்கும் பெற்றார்களுக்கும், முதியவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் மரியாதை செய்ய வேண்டும்.
தங்களது வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர் களை எப்போதும் மறக்கக்கூடாது. முன்னோர்கள், மூத்தோர்கள், உடன் இருக்கும் சக மனிதர்களுக்கு மரியாதை வழங்க வேண்டும். கல்வியில் சிறந்ததும், முதன்மையான தாகவும் இருப்பது ஒழுக்கம் என்பதை எங்களது பள்ளி மாணவர்களுக்கு கற்றுத் தருகிறோம் என்றார் அவர். .