Close
நவம்பர் 22, 2024 12:20 காலை

போக்குவரத்து கழகத்தில் வாரிசு பணிக்கு பதிவு செய்துள்ள அனைவருக்கும் வேலை: ஏஐடியுசி வலியுறுத்தல்

தஞ்சாவூர்

போக்குவரத்துக்கழக ஏஐடியுசி ஓய்வூதியர் சங்க கூட்டம் தஞ்சை மாவட்ட த் தலைவர் மல்லி.ஜி.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

போக்குவரத்து கழகத்தில் வாரிசு பணிக்கு பதிவு செய்து பல ஆண்டுகளாகக் காத்திருக்கும்  அனைவருக்கும் கால தாமதமின்றி  வேலை வழங்க வேண்டுமென  ஏஐடியூசி ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி ஓய்வூதியர்கள் சங்கத்தின் நிர்வாககுழு கூட்டம்  தஞ்சை மாவட்ட அலுவலகத்தில் சங்கத் தலைவர் மல்லி.ஜி.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். மாநில குழு முடிவுகள் குறித்து சம்மேளனத்தின் துணைத் தலைவர் துரை. மதிவாணன், தேசிய குழு முடிவுகள் குறித்து தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார்,. மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.

 கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியின் போது இறந்துவிட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் வாரிசு பணிக்கு பதிவு செய்து பல ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கின்றனர். தற்போது இவர்களில் ஓட்டுனர், நடத்துனர் ,தொழில்நுட்ப பணியாளர் பணிக்கு மட்டும் வாரிசு பணிக்கு தேர்வு செய்ய அழைக்கப்படுகின்றனர்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக வாரிசு பணிக்கு பதிவு செய்து காத்திருக்கின்ற அனைவருக்கும் அவரவர் கல்வித் தகுதிக் கேற்ப வாரிசு பணி வழங்கப்பட வேண்டும், கடந்த 2016-ஆம் ஆண்டு 110 விதியின் கீழ் கும்பகோணம் மண்டலம் உள்ளிட்டு அனைத்து மண்டலங்களிலும் வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு ஆறு வருடங்களாக காத்திருக்கின்ற அனைவருக்கும் பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு அறிவிக்க வேண்டும், குளிர்சாதன பேருந்து உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் ஓய்வு பெற்றவர்கள் துணையுடன் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு கடந்த 2015 ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வு கோரிக்கையில் தமிழ்நாடு அரசும், கழக நிர்வாகங்களும் உரிய தீர்வு காண வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற ஆகஸ்ட் 9-ஆம் தேதி  ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் சென்னையில் நடைபெறும் பெருந்திரள் போராட்டத்தில் திரளானோர்பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top