Close
நவம்பர் 21, 2024 12:15 மணி

தமிழ் தொல்குடியின் பெருமை நிரூபிக்கப்படக் காரணமாக அமைந்த கீழடி

அயலகத்தமிழர்கள்

கீழடி

கீழடிக்கு காலை 10 மணியளவில் சென்றோம். ஒரு சிறிய கிராமம். தென்னந்தோப்புகளுக்கு இடையில் இயற்கை கொஞ்சும் அழகில், அகழ்வராய்ச்சி தளம் இருந்தது. தனியாக யாரிடமும் சென்று தனியாக அனுமதியோ அல்லது அனுமதி சீட்டோ பணமோ கட்டவேண்டியதில்லை. வெறும் காலி மனை போல தான் இருக்கிறது.

பொது மக்களான நமக்கு அப்படி தான் தோன்றும் – ஆனால் ஆர்வம் இருப்பவர்களுக்கு இந்த இடம் கண்டிப்பாக ஒரு புதிய அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.

கீழ் – என்ற தமிழ்ச்சொல்லிற்கு கீழ்ப்பக்கம் , கீழ்ப்புறம், கீழ்த்திசை, கீழ்மட்டம் ஆகிய பொருள் தவிர முக்கியமாக – ‘தொன்மை’ என்ற பொருளையும் குறிக்கும் என்பதை புரிந்து கொண்டாலே ‘கீழடி’ – என்பது ஓர் காரணப் பெயர் என அறிந்து கொள்ள முடியும்.

குறிப்பிட்ட அவ்விடத்தில் ஓர் பண்டைய நகர் இருந்தது என்பது இந்த நூற்றாண்டைச் சேர்ந்த நமக்கு வேண்டுமானால் வியப்பூட்டும் புதிய செய்தியாக இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட அந்த இடத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்கைச் சீற்றங்களால் சிதைந்து புதையுண்ட ஓர் ஊர் இருந்தது என்பது, காலகாலமாக செவிவழிச் செய்திகளால் கடந்து
பின்னர் வந்த தலைமுறையினருக்கு நிச்சயம் தெரிந்திருந்து, அதன் காரணமாக வைக்கப்பட்ட பெயராக இருக்கவே அதிக வாய்ப்புண்டு.

தமிழர்களை நாடோடிகளாக குறுக்கி, சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் தமிழருக்கும் தொடர்பில்லை என்று நிரூபிக்க முயற்சி செய்து வந்தவர்களுக்கு, தமிழரின் தற்கால குடியிருப்பு பகுதிகளிலேயே ஒரு நகர நாகரிக அமைப்பு கண்டெடுக்கப்பட்டு தமிழ் தொல்குடியின் பெருமை நிரூபிக்கப்பட காரணமாக அமைந்தது கீழடி என்றால் அது மிகையல்ல.

சிந்து வெளி காலத்தால் முற்பட்டதாக இருந்ததால் தமிழர்களுக்கு தொடர்புடைய நகர நாகரீகம் எதுவும் தமிழர் வாழ்விடங்களில் கிடைக்க பெறாத காரணத்தால் தமிழர்களுக்கும் சிந்து வெளி நாகரீகத்திற்கும் உள்ள தொடர்பு தெரியாதிருந்தது. தற்போது கீழடியில் கிடைக்கப்பெறும் அகழ்வாய்வு முடிவுகள் ஒரு நகர நாகரீகம் இருந்ததை உறுதிபடுத்துகிறது. இது தமிழர்களின் நாகரிக தொடர்ச்சியை அறிந்து கொள்ள உதவும் வரலாற்று ஆதாரங்களாகும் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

கீழடி அகழ்வாய்வு தமிழர் பண்பாட்டை, நாகரிகத்தை தொன்மையான பண்பாடாக நிறுவ ஒரு முக்கிய சான்றாகும். உலகின் பிற தொன்மை பண்பாடுகள், இனங்கள், பெரிதும் அழிந்தோ, மாறியோவிட்டன. எனவே, ‘தொன்மை’ என்றவுடன் இடிபாடுகளும் புதைபொருள்களுமே நம் மூளைக்குள் மின்னலிடும். ஹரப்பா, மொஹஞ்சதாரோ போன்ற தளங்களில் இருப்பது போன்ற கட்டட அமைப்பு கீழடியிலும் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக பண்பாடுகள், நாகரிகங்கள் ஆற்றங்கரை யோரத்தில் தோன்றி வளர்ந்திருக்கின்றன. தமிழரின் மையமாக மதுரையும், பாண்டிய நாடும் விளங்கியதால் மதுரையின் முக்கிய ஆறான வைகையாறே நமது பண்பாட்டிற்கான தாய்மடி என்ற நோக்கில்தான் வைகை ஆற்றங்கரைப் பண்பாட்டைத் தேடும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வகையில் கண்டறியப்பட்டதுதான் கீழடி தளம்!

கீழடி பண்டைய தமிழர்களின் எளிமையான கிராமப்புற வாழ்க்கைக்கு சான்றாக அமைகிறது. கீழடியை வைத்து மொத்த பழந்தமிழர் நாகரீகத்தை பறைசாற்ற முடியாது. காரணம் கீழடி என்பது முந்தைய தலை நகரோ அல்லது முக்கிய நகரோ இல்லை. அது சாதாரண சிற்றூர் தான்.

கீழடி ஊர் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது.அங்கு மண்பாண்டங்களும் மண்ணால் செய்த சில சுடுமண் சிலைகளுமே கிடைத்துள்ளது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உடைந்த சிறு பொருட்கள் கிடைத்துள்ளது. இது எதுவுமே அதிசயத்தக்க வகையிலோ பிரமிக்கும் வகையிலோ பெரிதாய் கிடைக்கவில்லை. இதை வைத்து தமிழர் பெருமை எழுத ஒன்றுமே இல்லை. நாகரிகம் அடையாத நாட்டை தோண்டினாலும் நாலு ஓடு சில்லுகளும், உடைந்த பானையும் கிடைக்கும். அது பெருமையல்ல.

தமிழரின் பெருமையை உலககிற்கு உணர்த்தும் வகையில் காஞ்சி, தஞ்சை, மாமல்லபுரம், மதுரை,திருவரங்கம், சிதம்பரம் என பல ஊர்கள் உள்ளன. உலகம் வியக்கும் வண்ணம் ஆய்வு இருக்க வேண்டும் என்றால் பூம்புகார் கடல் பரப்பை ஆய்வு செய்யவேண்டும். பழையார், உறையூர், திருவாரூர், காஞ்சி, மதுரையை தோண்டி பார்க்க வேண்டும். அங்கே உலகப் பெரும் புதையல்களாய் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 2 ஏக்கர் பரப்பில் 31 ஆயிரம் சதுர அடியில் சுமார் 18 கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் பாரம்பரிய செட்டிநாடு கட்டட வடிவில் உருவாக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை பற்றி பார்ப்போம்.

தமிழக தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தளத்தில் 2018-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. அகழாய்வுகள் மூலம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பொருட்களை உலகத் தமிழர்கள், பொதுமக்கள் காணும் வகையில் தமிழக மரபுசார் கட்டடக்கலை அடிப்படையில், கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

கீழடி அருங்காட்சியகத்தில் ‘மதுரையும் கீழடியும்’, ‘வேளாண்மையும் நீர் மேலாண்மையும்’, ‘கலம் செய்கோ’, ‘ஆடையும் அணிகலன்களும்’, ‘கடல் வழி வணிகம்’, ‘வாழ்வியல்’ என்னும் 6 தலைப்பின் அடிப்படையில் தனித்தனி கட்டிடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள் ளன.

தமிழர்களின் தொன்மை, பண்பாடு, நாகரிகம், கல்வியறிவு, எழுத்தறிவு, உலகின் பல்வேறு பகுதிகளில் கொண்டிருந்த வணிகத் தொடர்பு ஆகியவற்றினை பறைசாற்றும் வகையில் உலகத் தமிழர்கள் பெருமை கொள்ளும் வகையில், கீழடி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அருங்காட்சியகத்தில் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பண்பாட்டின் பண்டைய கால நதிக்கரை நாகரிக வாழ்வியலை தேடி மேற்கொண்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானம்.

யானை தந்தத்தாலான பொருட்கள், மண்பாண்டங்கள், விரல் அளவு பானை, ஆட்டக்காய்கள், முதுமக்கள் தாழிகள், மணிகள், வட்டச் சில்லுகள், ஆட்டக் காய்கள், சுடுமண் சிற்பம், நாணயங்கள், தங்க அணிகலன்கள் ஆகியவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள் ளன. நவீன விளக்குகளுடன் கூடிய கண்ணாடி பேழைகள் கொண்டு உலக தரத்தில் பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முப்பரிமாண அனிமேஷன் உள்ளிட்டவற்றால் ஒளி மற்றும் ஒலி வடிவில் தொல்பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக உள்ளது. பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறையை நேரடியாக பார்த்து உணரக்கூடிய அளவில் உள்ளது.

கீழடி அருங்காட்சியகத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து விட்டு வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

திருச்சியிலிருந்து (இங்கிலாந்து) சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top