மனம் விட்டு பேசும்போதுதான் மன அழுத்தம் குறையும் என்றார் மாவட்ட மனநல அலுவலர் இரா.கார்த்திக் தெய்வநாயகம்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் – வாசகர் பேரவை ஆகியவை இணைந்து நடத்திய மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் அவர் பேசியதாவது:
மன அழுத்தம் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. ஏதோ ஒரு காரணத்தினால் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. அதற்காக அதையே நினைத்து மனதை உடையவிடக்கூடாது. மன அழுத்தத்தைக் கையாள கற்றுக் கொண்டவர்கள்தான் தலை சிறந்தவர்கள். நேர மேலாண்மை, நாளொன்றுக்கு 8 மணி நேரம் தூக்கினால் மன அழுத்தம் ஏற்படாது.
மேலும், ஓவியம் வரைதல், பாடல் பாடுதல், கட்டுரை எழுதுதல் போன்ற தங்களுப் பிடித்ததை செய்யும்போதும், நெருங்கி யவர்களிடம் மனம் விட்டு பேசும்போதும் மன அழுத்தம் குறையும். அதுபோன்று யாரிடமாவது மனம் விட்டுப் பேச வேண்டுமென விரும்பினால் 14416 எனும் கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
போதைப்பொருள் பயன்படுத்தத் தொடங்கினால் மூளையை பாதிக்கும். போதைப் பொருள் பயன்படுத்துவோரில் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றுகூட கணிக்க முடியாத அளவுக்கு பாதிப்பின் தாக்கம் இருக்கிறது.
இதுபோன்ற சிக்கல்களை தீர்ப்பதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பதற்றம் வந்தால் கவனச் சிதறல் ஏற்பட்டு, படித்ததெல்லாம் மறந்துவிடும். எனவே, மற்றவர்களை ஒப்பிடாமல் ஒவ்வொருவரும் தங்களுக்கு எந்த முறையில் படிக்கப் பிடிக்கிறதோ அதையே பின்பற்ற வேண்டும்.
வெறுப்பின்றி படித்தால் வெற்றி பெறலாம். 10 சதவீதம் மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு இருக்கிறது. இதுபோன்ற மாணவர்களைக் கண்டறிந்து ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம்.
வாசகர் பேரவை செயலாளர் சா.விஸ்வநாதன் தனது உரையில்..
மாணவர்களே அடுத்த 17 வயது முதல் 27 வயது வரை – பத்தாண்டுகள் உங்கள் வாழ்க்கையில் முக்கியமான காலம். இறையன்பு சொல்வது போல் இந்த பத்தாண்டுகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த காலம்தான் உங்கள் வாழ்வின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியது. இந்த காலத்தில் நாம் தெரிவுசெய்து படிக்கும் பாடங்கள், பழக்கப்படுத்திக்கொள்ளும் பழக்க வழக்கங்கள் நம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.
ஆகவே இந்த கால கட்டத்தில் சரியான பாடத்தைத் தேர்வு செய்து முறையாகப்படித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்.
சர்வோதயத்தில் “எந்த வேலையும் இழிவானத்தல்ல “என்று சொல்வது போல் எந்தப் பாடமும் மதிப்புக் குறைந்தததல்ல.
எப்படிப்படிக்கிறோம் என்பது தான் முக்கியம். பாடங்களைத் தேர்வு செய்யும்போது உங்களுடைய விருப்பம், ஆற்றலுக் கேற்ப தேர்வு செய்ய வேண்டும்.பெற்றோர்கள் மற்றவர் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்தால் உங்களால் முழுமையாக கற்க இயலாமல் போகலாம்.
இன்று உயர்கல்வி படிப்பதற்கு நிதி ஒரு தடையல்ல. மத்திய மாநில அரசுகள் தரும் உதவித்தொகைகள் ஏராளம். அரசுக் கல்லூரிகளைத் தேர்வு செய்தால் முழுமையாக இலவசமாக வே படித்துவிடலாம். படிக்கின்ற பாடத்தை நன்றாகப் படிப்பதோடு கூடுதல் தகுதிகளை வளர்த்துக்கொண்டால் உடன் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆகவே சரியான பாடத்தைத் தெரிவு செய்யுங்கள். அர்ப்ப ணிப்பு உணர்வுடன் படியுங்கள். வாழ்க்கை பிரகாசமாகும் நிச்சயம் என்றார் முன்னாள் பேராசிரியரும், வாசகர் பேரவையின் செயலாளருமான சா.விஸ்வநாதன்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் யோகராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவித் தலைமை ஆசிரியர் முத்துக்குமார், கவிஞர்கள் சு.மதியழகன், அறிவொளி கருப்பையா, கீழாத்தூர் தமிழரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.