Close
செப்டம்பர் 20, 2024 5:35 காலை

மணிப்பூர் கலவரம்… தஞ்சையில் மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரம் ஒன்றிய அரசே பொறுப்பு  என தஞ்சையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் குற்றச்சாட்டியது.

கடந்த மே மாத முதல் மணிப்பூர் மாநிலம் இரண்டு இன மக்கள் இட ஒதுக்கீடு பிரச்சனை தொடர்பாக கலவரமாக வெடித்து, மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக் கின்றது.

மணிப்பூரில் கலவரத்தை அடக்கி, அமைதியை நிலை நாட்ட வேண்டிய மாநில பாஜக அரசு இரண்டு இன மக்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது. குறிப்பாக பழங்குடி இன மக்களை எதிரியாக சித்தரித்து வருகிறது. ஒன்றிய அரசு கலவரத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர எந்த வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

பற்றி எரியும் மணிப்பூர் கலவரத்திற்கு பாஜக ஒன்றிய அரசே பொறுப்பு என்று மக்கள் அதிகாரம் சார்பில் தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்  (18.7.23) தஞ்சாவூர் ரெயிலடி முன்பு மாவட்ட செயலாளர் தேவா தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன் தொடக்கி வைத்துப் பேசியதாவது:  ஆர் எஸ் எஸ் சாலும், மணிப்பூர் பாஜக அரசாலும் கொக்கி பழங்குடி மக்களுக்கு எதிராக தூண்டி விடப்பட்ட கலவரங்களும் படுகொலைகளும் 75 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.

இதுவரை 250க்கும் மேற்பட்ட மாதா கோயில்கள், பல்லாயிரக்கணக்கான குக்கி மக்களின் குடியிருப்புகள் தீக்கிரையாக்கப்பட்டு இருக்கின்றன, நாசம் செய்யப் பட்டிருக்கின்றன,. 150 பேர் படுகொலை செய்யப்பட்டிருக் கிறார்கள். 3000 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். 60,000 மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

75 நாட்களாக இன்டர்நெட் முடக்கப்பட்டு மணிப்பூரே தகவல் தொடர்பு இன்றி இருளில் மூழ்கிக் கிடக்கிறது. வதந்திகள் மட்டுமே வலம் வருகின்றன.  மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சுகிறார்கள், இவ்வளவு கொடூரமான சூழ்நிலை நிலவுகின்ற போதும் அங்கு ராணுவமும், காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல, பெரும்பான்மை மேய்த்தி மக்களின் பிரதிநிதிகளாக கூறிக் கொள்ளும் ஆர்எஸ்எஸ்  அமைப்புக்கு மாநில காவல்துறையே ஆயுதங்களை வழங்கி படுகொலைகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

மாநில முதல்வரே தன் மக்களில் ஒரு பிரிவினருக்கு எதிராக வெறுப்புணர்வையும், வன்முறையை தூண்டி வருகிறார். ஆனால் இது பற்றி பிரதமர் மோடி வாய் திறக்கவே இல்லை. ஒரு முறை பெயருக்கு மணிப்பூர் சென்று வந்த உள்துறை அமைச்சர் கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கோ, பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதிக்கிறார்கள்.

இது அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்படுகின்ற வன்முறை என்று மணிப்பூரில் உள்ள அறிவாளிகள்,பழங்குடி மக்கள் தலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்கள். அவ்வாறு உண்மையை வெளிப்படுத்தும் அறிஞர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அச்சுறுத்தப் படுகிறார்கள்.

குறிப்பாக குக்கி சோன் பழங்குடி மக்களை அந்நியர்கள் என்றும், ஆக்கிரமிப்பாளர்கள், போதைப் பொருள் வியாபாரிகள் என்றும் அவதூறு பிரசாரம் செய்து மணிப்பூரை இரண்டாக பிளவு படுத்தி விட்டார்கள்.

மணிப்பூர் பழங்குடி மக்கள் மாநில ஒன்றிய அரசின் மீது முழுவதுமாக நம்பிக்கை இழந்து விட்டார்கள். தங்களுக்கு தனியான நிர்வாக முறை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது, ஆனாலும் கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு மோடி அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் முழுக்க, முழுக்க கலவரங்களை தொடரச் செய்து பழங்குடி மக்களை அச்சுறுத்தி வெளியேற்றி, கனிமங்கள் நிறைந்த மலைப்பகுதி முழுவதையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளி களுக்கும் தாரைவாக்கும் தேசத்துரோக நடவடிக்கையே மணிப்பூர் கலவரமாகும்.

பாஜக அரசே நடத்தும் இந்த கலவரங்கள், நாடு முழுவதும் சிறுபான்மை மக்களை எதிரிகளாக சித்தரித்து, மோதல்களை தூண்டுவதைப் போலவே, வடகிழக்கு மாநிலங்களிலும் இன மோதலை தூண்டிவிட்டு வடகிழக்கு மாநிலம் முழுவதையும் ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அந்த மக்களின் உரிமைகளை பறித்து அவற்றை கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடுவதற்கான நீண்ட சதியின் ஒரு வெளிப்பாடே மணிப்பூரில் நடக்கும் கலவரங்கள்.

இதற்கு முழுக்க முழுக்க அமித்சாவும், மோடியும் பொறுப்பேற்க வேண்டும். இந்த ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை,. நாட்டில் அமைதி என்பதையும், அடிப்படையான ஜனநாயக உரிமைகளையும் மக்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

எனவே ஆர் எஸ் எஸ், பாஜக மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு எதிர்க்கட்சிகளை இடி,சிபிஐ போன்ற அமைப்பு களை பயன்படுத்தி அச்சுறுத்தும் நடவடிக்கை மூலம் பணிய வைக்க முயற்சிக்கிறது. மணிப்பூரில் நடப்பது ஒரு மாநிலத்தின் பிரச்சினை என்று யாரும் ஒதுங்கி இருக்க முடியாது.

இது நாடு முழுவதும் இதே பாணியில் சாதி மத மோதல்களை தூண்டுவதன் மூலம் மக்களைப் பிளவு படுத்தி மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு எல்லா கீழ்த்தரமான முயற்சிகளையும் ஆர் எஸ் எஸ், பாஜக தொடங்கிவிட்டது. எனவே ஆர் எஸ் எஸ் பாஜகவை  முறியடிப்பதற்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டும்.

உடனடியாக மணிப்பூரில் அமைதியை நிலை நாட்டுவதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கலவரங்கள் உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.அங்கு மாநில காவல் துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்ட நிலையில் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்  காளியப்பன்.

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழக மாநில இணை பொதுச் செயலாளர் ராவணன், தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் கோ.திருநாவுக்கரசு, பெரியாரிய உணர்வார்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப் பாளர் துரை.மதிவாணன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஏ.யோகராஜ், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அ.ரெ. முகிலன், மக்கள் அதிகாரம் திருவாரூர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம்.

ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சிவா, விசிறி சாமியார் முருகன் எழுத்தாளர் சாம்பான் உள்ளிட்டு பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். முடிவில் மக்கள் அதிகாரம் மாவட்ட தலைவர் அருள் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top