Close
நவம்பர் 21, 2024 10:37 மணி

தூய்மை பணியாளர் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி பணியாளர் களையும் பணிநிரந்தரம் செய்யக்கோரி ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழில் சங்கத்தினர்

தூய்மை பணியாளர் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென ஏஐடியூசி உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு உள்ளாட்சித் துறைகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பணிநிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி உள்ளாட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சை மாவட்டத்தில் மூன்று இடங்களில்  புதன்கிழமை நடைபெற்றது .

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் வெ.சேவையா தலைமை வகித்தார். ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், மாவட்டசெயலாளர்கள் துரை.மதிவாணன்,  ஆர்.பி.முத்துக் குமரன்,  மாநகர செயலாளர் ஆர்.பிரபாகர், நிர்வாகிகள்  ஆலம்கான், ஜி.கணபதி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட இளைஞர் பேரவை பொறுப்பாளர் வ.பிரேம்குமார் நிவாஸ், மற்றும் விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல் கும்பகோணம் மாநகராட்சி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் தலைமையில் சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர் மு.அ.பாரதி, கோ.மணிமூர்த்தி, சுந்தரராஜன், நாராயணன் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை நகராட்சி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி கே.செல்வராஜ் தலைமை வகித்தார்.

தஞ்சாவூர்
கும்பகோணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் உள்ளாட்சி தொழிலாளர் குறைதீர் ஆணையம் அமைக்க வேண்டும்.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்களில் அவுட்சோர்சிங், தினக்கூலி மற்றும் சுய உதவிக் குழு முறைகளை ரத்து செய்து, பணியாற்றும் அனைவரையும் உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தூய்மை பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் .தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை (நிலை) எண் 152, நாள் 23.01.2023 மற்றும் அரசாணை (நிலை) எண் 139, நாள் 03.01.2023) உள்ளிட்ட வெளிச்சந்தை முறையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் அனைத்து அரசாணைகளையும் உடனே ரத்து செய்ய வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் நிரந்தர வேலை மற்றும் காலம் முறை ஊதியத்தை பறிக்கும் அனைத்து தொழிலாளர் விரோத அரசாணைகளையும் உடனே ரத்து செய்ய வேண்டும்.

இரண்டுஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர் அனைவரையும் உடனே பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச கூலி சட்டத்தை அமல்படுத்தி, தின கூலியாக தினசரி ரூ.650/- முன் தேதியிட்டு வழங்க வேண்டும்.
தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு மாதாந்திர சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதிக்குள் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஆகியோர் வழியாக  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top