பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஒத்துழைப்புதர வேண்டும் என்ற குரல்களும் எதிரொலிக்கிறது.
மணிப்பூரில் நடக்கும் அநியாயங்களை கேட்கும்போது குலை நடுங்குகிறது .அங்கு சில பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் காணும்போது உடலும் உள்ளமும் பதறுகிறது.
இவர்களை மனித மிருகங்கள் என்று சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் மிருகங்களை அவமானப் படுத்துவது போல ஆகிவிடும். ஏனெனில் எந்த மிருகமும் வல்லுறவில் ஈடுபடுவதில்லை. பெண் மிருகத்தை கூட்டாகப் புணர்வதில்லை. தன் இனத்தின் குட்டி விலங்குகளை காம இச்சைக்கு பயன்படுத்திக் கொள்வதில்லை.
மிருகங்களை விடவும் கீழானவர்களாக நடந்து கொண்டவர் கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. கொடூரமாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
பாரதத் தாயின் பிள்ளைகளாகிய ஒவ்வொரு இந்தியனும் இந்த மனிதாபிமானமற்ற, ஈவு இரக்கமற்ற கொடுமைக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் ,சமூக ஊடகங்களில் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் பலரும் இந்திய தேசியக்கொடி மற்றும் பாரதத் தாயை இழிவுபடுத்தும் விதமாக புகைப்படங்கள் ஓவியங்கள் கேலிசித்திரங்கள் வெளியிடுவது வருத்தத்திற்குரியதாக இருக்கிறது.
அது நம் ஒட்டுமொத்த தேசத்தையும் அவமானப்படுத்தும் செயலாக இருக்கிறது. நம் தாய் திருநாட்டில் ஒரு பெண் வன்கொடுமை செய்யப்படுவது, மானபங்கப் படுத்தப்படுவது என்பது அந்த பாரத தாய்க்கே இழைக்கப்பட்ட அநீதி என்பதில் சந்தேகம் இல்லை.
எனினும், எதிர்ப்பு என்ற பெயரில் பாரதத் தாயை இழிவு படுத்தும் விதமாக கேலிச்சித்திரங்கள் ஓவியங்கள் போன்றவற்றை சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் பதிவிடுவதை சமூகப் பொறுப்புள்ள ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். .
ஏனெனில் இதுபோன்ற சித்திரங்கள் கார்ட்டூன்கள் பெண்கள் ஒரு முறை மானபங்கப் படுத்தப்பட்டதை சித்தரிப்பதாக கூறிக்கொண்டு , நாம் பெற்ற தாயை பலமுறை மானப் பங்கப்படுத்துவது போல உள்ளது.
நம்முடைய குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்றால் அந்தப் பிரச்சனையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். வேரோடு அறுத்து எறிய வேண்டும். ஆனால் அதே நேரம், நம்முடைய குடும்பத்தை அடுத்தவர்கள் எள்ளி நகையாடும் விதமாக விட்டு விடக்கூடாது. இது இங்கு நடக்கும் கொடுமைகளுக்கும் நம் தாய் திருநாட்டுக்கும் பொருந்தும்.
அதே நேரம், இது போன்ற சம்பவங்கள் நடந்தால் அது மிகப்பெரிய பேசு பொருளாகிறது. சமூக ஊடகங்களில் வைரல் ஆகிறது. கதை கட்டுரைகளுக்கு அதுவே கருவாகிறது. தலைப்புச் செய்தி மின்னல் செய்தி என்று பரபரப்பு ஏற்படுகிறது.
இதற்கெனவே காத்திருந்தது போல கவிதைகள் எழுதித் தள்ளப்படுகின்றன. ஆனால் இந்த பிரச்னையை கவிதைக்கான கருவாக மட்டும் கடந்து போய் விடக்கூடாது , எழுத தெரிந்தவர்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நல்ல content ஆக கிடைத்து விடுகிறது. கண்டனத்தை கூட அழகு பூசி content ஆக்கிக் கொள்கிற மனப் பக்குவத்தை விட்டுவிட்டு பகிரங்கமாக கண்டனங்களை தெரிவிக்க களத்தில் இறங்க வேண்டும் என்பதை வேண்டுகோளாகவே வைக்கிறேோம்.
இனம், மொழி, சாதி, மதம் என்று பிளவுபட்டுக் கிடக்கிறோம். யாருக்கோ நடந்தது எங்கோ நடந்தது என்று இன்று நாம் கடந்து செல்வோமானால் … இது நாளை நம் வீட்டுப் பெண்களுக்கும் நடக்கும். பாதிக்கப்பட்டது நம் பிள்ளைகள் என்ற எண்ணம் வேண்டும் .சில நாட்கள் மட்டுமே பரபரப்பாக பேசிவிட்டு கடந்து சென்றிட இது ஒன்றும் விபத்தில்லை.
சமூக பொருளாதார வர்க்க பேதங்களைக் கடந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பாதிக்கப் பட்டவர்களுக்கு, நீதி கிடைக்கும் வரையும் , இனியும் இதுபோன்ற சம்பவம் நடக்காது என்பதை கருத்தில் கொண்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். நியாயத்திற்காக அற வழியில் போராட வேண்டும்.
நாம் வாழும் நாட்டில் நம்மைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு அக்கிரமம் நடக்கிறதே என்று ஒவ்வொரு பெண்ணும் ரௌத்திரம் கொள்ள வேண்டும். அசுரர்களை வதம் செய்த துர்கா தேவியாக இந்தியப் பெண்கள் ஒவ்வொருவரும் போராட்டத் துணியும் போது பெண்மையை போற்றும் பெண்களை மதிக்கும் ஆண்கள் அனைவரும் அவர்களின் முன்னும் பின்னும் நிற்பார்கள்.
மாதர் குலத்தின் ஆவேசத்தை பார்த்து இப்படி ஒரு படுபாதக செயலைச் செய்வதற்கு இது போன்ற இழிப்பிறவிகள் அச்சப்பட வேண்டும்.
~ஈரநெஞ்சம் மகேந்திரன் கோவை.