Close
நவம்பர் 22, 2024 4:08 மணி

புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் 6 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய கவிஞர் தங்கம்மூர்த்தி

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 6 -ஆவது புதுக்கோட்டை புத்தகத்  திருவிழாவில் 6 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது  வழங்கப்படுவதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழா தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் விழாக்குழு நிர்வாகிகள் கவிஞர்தங்கம்மூர்த்தி மற்றும் கவிஞர் ஜீவி, அ.மணவாளன், முனைவர் ஆர்.ராஜ்குமார், கவிஞர் ராசி.பன்னீர்செல்வன், எஸ்.டி.பாலகிருஷ்ணன், எம்.வீரமுத்து, சதாசிவம் ஆகியோர்  கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 6 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை 2023 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6  -ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்தவுள்ளன.

10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா ஒவ்வொரு நாளும் காலை 9. மணிக்குத் துவங்கி இரவு 9. மணிக்கு நிறைவு பெறும். தினசரி காலை முதல் மாலை வரை குழந்தைகளுக் கான சிறப்பு நிகழ்வுகள், கோளரங்கம், புத்தக விற்பனை, விஞ்ஞானிகள் சந்திப்பு, பிரபல எழுத்தாளர்கள், அறிஞர்கள் கருத்துரை போன்ற நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளது.

28.7.2023 அன்று காலை  10.மணிக்கு புத்தகத்திருவிழா தொடக்க விழாவு  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா   தலைமையில் நடைபெறவுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே  முன்னிலை வகிக்கிறார்.  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச்சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்  சு.திருநாவுக்கரசர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை.முத்துராஜா, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னத்துரை, விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சி.விஜயபாஸ்கர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்   தி.இராமச்சந்திரன், மூத்த வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா,

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினர்எல்.பிரபாகரன், நகர்மன்றத்தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட ஊராட்சித் தலைவர்  த.ஜெயலட்சுமி, நகர்மன்றத் துணைத்தலைவர்  மு.லியாக்கத் அலி, அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர்   ஆர்.ஆனந்த் உள்ளிட் டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

காலை அமர்வுகள்
தினசரி காலை 10. மணி முதல் மாலை 4. மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்வுகள் நடைபெற வுள்ளது.  எளிய அறிவியல் பரிசோதனைகள், அறிவியல் விளையாட்டுக்கள்,

எங்கும் கணிதம் யாவும் அறிவியல் செயல்பாடுகள், மந்திரமா தந்திரமா, கணக்கும் இனிக்கும், உயர்கல்விக்கான வழிகாட் டல், வளரிளம் பெண்களுக்கான வழிகாட்டல், அதோ அந்தப் பறவை, அறிவியலும் விவசாயமும், நூல்வெளியீடு, ஒரிகாமி ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

கருத்தாளர்களாக விஞ்ஞானி டி.வி.வெங்கடேஷ்வரன், ஸ்ரீகுமார், இந்து தமிழ் நாளிதழின் துணை ஆசிரியர் ஆதி வள்ளியப்பன், குழந்தை எழுத்தாளர் விழியன், எம் எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமுதன்மை விஞ்ஞானி ராஜ்குமார், விஞ்ஞானத் துளிர் பொறுப்பாசிரியர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், ஜந்தர் மந்தர் இதழ் பொறுப்பாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன்,

மேனாள் பொதுச்செயலாளர் அ.அமலாரஜன், பொதுச் செயலாளர் எஸ்.சுப்ரமணி, , எஸ்.ஆர்.சேதுராமன், மாநில துணைத் தலைவர் எம்.மாணிக்கத்தாய், ஆரோக்கிய இயக்க கருத்தாளர் க.உஷாநந்தினி  ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு நாள் நிகழ்விலும் மாலை அமர்வு மாலை 6. மணி முதல் 7. மணி வரை பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி யோடு துவங்கும். இரவு 7. மணிக்கு தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் சிறப்புரையாற்ற வுள்ளனர்.

வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்:

கலை இலக்கிய ஆளுமைகளுக்கான வாழ்நாள் சாதனை யாளர் விருதுகள் வழக்கப்படுகின்றன. அதில்,  புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் பா.கிருஷ்ணமூர்த்தி, வரலாற்று ஆய்வாளர் ஜெ.ராஜாமுகமது, கல்வெட்டு, தொல்லியல் ஆய்வாளர் கரு.இராசேந்திரன், மூத்த எழுத்தாளர் செம்பை மணவாளன், மூத்த தமிழறிஞர் துரை மதிவாணன், மூத்த எழுத்தாளர் ப.உமாபதி ஆகியோருக்கு வழங்கப்படு கிறது.

இவர்கள் அனைவருக்கும்    5.8.2023 சனிக்கிழமை  -அன்று நடைபெறும் நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  பங்கேற்று  விருதுகள் வழங்குவதாவும்  விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

புத்தகத்திருவிழாவின் 10 நாள் நிகழ்வுகள் விவரம் இதோ..

28.7.2023 முதல் நாள் சாகித்ய அகாதமி விருதாளர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், அறிவியல் இயக்க மாநிலத்தலைவர் பூச்சியியல் விஞ்ஞானி எஸ்.தினகரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

29.7.2022 இரண்டாம்நாள் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்   சிவ.மெய்யநாதன் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். புதுடில்லி விஞ்ஞான் பிரச்சார் முதுநிலை விஞ்ஞானி டி.வி.வெங்கடேஷ்வரன் கருத்துரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள் தலைமையில் மரபுக் கவியரங்கம் நடைபெறவுள்ளது.

30.7.2023 மூன்றாம் நாள் மக்களிசை கலைஞர்கள் டாக்டர் செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி ஆகியோரின் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

31.7.2023 நான்காம் நாள் வழக்கறிஞர் த.இராமலிங்கம்  சொற்களால் வாழும் உலகு என்ற தலைப்பிலும், வணக்கம் வள்ளுவா என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

01.8.2023 ஐந்தாம் நாள் வாசிப்பின் சிறகுகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன், வாசிப்பை வளர்த்தெடுத்த அறிவொளி என்ற தலைப்பில் பேரா வெ.பா.ஆத்ரேயா  ஆகியோர் பேசுகின்றனர்.

2.8.2023 ஆறாம் நாள் கதைகளின் கதை எழுத்தாளர் பவா செல்லத்துரை, சுற்றுச்சூழலும் புதுக்கோட்டையும் என்ற தலைப்பில் எழுத்தாளர் நக்கீரன் , என்னை வழி நடத்திய புத்தகங்கள் என்ற தலைப்பில் மேனாள் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா  சிறப்புரையாற்றவுள்ளனர்.

3.8.2023 ஏழாம் நாள் நோக்கும் திசையெல்லாம் நூலின்றி வேறில்லை என்ற தலைப்பில்  கவிதா ஜவஹர்  உரையாற்றுகிறார். இதே நாளில் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் சுழலும் கவியரங்கம் நடைபெறவுள்ளது.

4.8.2023  எட்டாவது நாள் சமூக மாற்றத்தை பெரிதும் சாத்தியமாக்குவது பேச்சா .? எழுத்தா.? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. இப்பட்டிமன்றத்தில் கவிஞர் நா.முத்துநிலவன், கவிஞர் ஜீவி, முனைவர் மகாசுந்தர், கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி ஆகியோர் பங்கேற்று பேசவுள்ளனர்.

5.8.2023 ஒன்பதாம் நாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  “ தெற்கிலிருந்து தொடங்கினோம் என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளனர்.

6.8.2023 நிறைவுநாளில் சென்னை மாநகர வளர்ச்சிக்குழும தலைமைச் செயல் அலுவலர்  கவிதா ராமு , திரைப்பட நடிகர் சமூக ஆர்வலர் நடிகர் தாமு,  ஏட்டுச்சுரைக்காய் என்ற தலைப்பிலும், குழந்தை எழுத்தாளர் விழியன்  உரையாற்ற வுள்ளனர்.
கோளரங்கம்:
மாணவர்களின் சிறப்பு நிகழ்வாக தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் சார்பாக அறிவியல் கண்காட்சி வாகனம், கோளரங்கம், தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல் போன்ற நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
பதிப்பகங்கள்:
100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பிரபலமான பதிப்பகங் கள் கலந்துகொள்ளவுள்ளனர். பாரதி புத்தகாலயம், நியூசென்சுரி புக் ஹவுஸ், காலச்சுவடு, நக்கீரன், ஆனந்தவிகடன், தேசாந்திரி, அகநி வெளியீடு, கிழக்குப் பதிப்பகம், இந்துதமிழ் திசை, சாகிதய அகாதமி, புக் வேர்ல்டு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் லட்சக்கணக்கான தலைப்புகளி லான புத்தகங்களோடு கலந்துகொள்கிறார்கள். குழந்தைக ளுக்காக 10 க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்கின்றன.

விழிப்புணர்வு நிகழ்வுகள்:
புத்தகத் திருவிழாவை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் 25.7.2023 அன்று காலை 10.மணிக்கு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பொது அலுவலக வளாகத்தில் இருந்து நகர்மன்றம் நோக்கி புத்தகத் திருவிழா விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது.

அப்பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைக்கவுள்ளார். மாவட்டம் முழுவதிலுமுள்ள ஒன்றிய தலைமையிடங்களில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர் கள் பங்கேற்கும் புத்தகத் திருவிழா பேரணிகள் நடைபெற வுள்ளன.
ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகள், பொதுமக்களுக் கான  சிறப்பு போட்டிகள்:
30.7.2023 அன்று மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சதுரங்கப்போட்டி நகர்மன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. 6.8.2023 அன்று 1 -ஆம் வகுப்பு முதல் 5 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெறவுள்ளது.

மாவட்ட, ஒன்றிய அளவில் 200 -க்கும் மேற்பட்டோரைக் கொண்டு வரவேற்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், அறிவியல் இயக்க நிர்வாகிகள் இணைந்துள்ளனர். கடந்த ஆண்டைப்போல  ரூ. 2 கோடிக்கு மேலான  புத்தகங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்புக்குழுவினர் தெரிவித்தனர்.

இப்புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் தலைமையில், கவிஞர் தங்கம்மூர்த்தி, கவிஞர் ந.முத்துநிலவன், கவிஞர் ஜீவி, அ.மணவாளன், முனைவர் ஆர்.ராஜ்குமார், கவிஞர் ராசி.பன்னீர்செல்வன், எஸ்.டி.பாலகிருஷ்ணன், எம்.வீரமுத்து, எம்.முத்துக்குமார், க.சதாசிவம், ஸ்டாலின் சரவணன், கிருஷ்ணவரதராஜன். கவிஞர் கீதா,  விமலா,  பவனம்மாள் ஆகியோர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top