ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி கோரிக்கை மாநாடு
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்ற போது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை கோரிக்கை மாநாடு நடைபெற்றது.
புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற மாநாட்டிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினர் மு.மாதவன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், ஆ.இராஜேந்திரன், மருத.பெரியசாமி, அ.கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி வரவேற்றார்.
மாநாட்டில் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர் த.இந்திரஜித், விவசாயத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் எஸ்.சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கோரிக்ககைளை விளக்கி இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி, விதொச மாநிலக்குழு உறுப்பினர் க.சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள் என்.குணசேகரன், சௌந்தர்ராஜன், பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர்.
மாநாட்டில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்ற போது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் உற்பத்தி பொருட்களுக்கு ஆதார விலையை சட்டமாக்க வேண்டும். மின்சார திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். லக்கிம்பூர் கேரியில் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.