Close
நவம்பர் 22, 2024 12:43 மணி

புதுக்கோட்டையில் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் (25.07.2023) நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 807.10 மி.மீ. ஆகும். 2023 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வரை இயல்பான மழையளவான 243.00 மி.மீ-க்கு 320.70 மி.மீ அளவு மழை பெறப்பட்டுள்ளது. ஜூலை மாதம் வரையில் 77.70 மி.மீ கூடுதலாக மழை பதிவாகியுள்ளது.

பயிர்ச் சாகுபடி விவரம், 2023-2024 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் முடிய நெல் 4308 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 489 எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 188 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 957 எக்டர் பரப்பிலும், கரும்பு 39 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 5 எக்டர் பரப்பளவிலும் மற்றும் தென்னை 12584 எக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 224.561 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 22.357 மெ.டன் பயறு விதைகளும், 44.623 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 4.942 மெ.டன் சிறுதானிய விதைகளும், 0.230 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன.
விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் நெல் சாகுபடியில் சன்ன ரகங்களை அதிக அளவில் சாகுபடி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முன் சம்பா பட்டத்திற்கு உகந்த நீண்ட கால நெல் ரகங்களான CR1009. ADT 51 ஆகியவற்றை தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் திட்டமிடலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஜூலை 2023 மாதத்திற்குத் தேவையான யூரியா விநியோகத் திட்ட இலக்கின்படி 2090 மெ.டன்களுக்கு, இதுவரை 534 மெ.டன் யூரியா பெறப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குத் தேவையான டி.ஏ.பி. உரம் விநியோகத் திட்ட இலக்கின்படி 940 மெ.டன்களுக்கு 71 மெ.டன் வரப்பெற்றுள்ளது. பொட்டாஷ் உரம் 590 மெ.டன்களுக்கு 322 மெ.டன்களும், காம்ப்ளக்ஸ் உரங்களைப் பொறுத்தவரை விநியோகத் திட்ட இலக்கான 2470 மெ.டன்களுக்கு இதுவரை 478 மெ.டன் பெறப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 5235 மெ.டன்னும், டிஏபி 1413 மெ.டன்னும், பொட்டாஷ் 1754 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 5719 மெ.டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கத்தில் மட்டும் 1319 மெ.டன் யூரியா, 363 மெ.டன் டிஏபி, 385 மெ.டன் பொட்டாஷ், 670 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுவருகின்றது.

மோனோ அமோனியம் பாஸ்பேட் என்ற 11 சதம் தழைச்சத்து 52 சதம் மணிச்சத்துடன் தற்பொழுது விற்பனை செய்யப்படும் எம்ஏபி உரத்தினை டிஏபி-க்கு பதிலாக வாங்கி பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனால் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு தழைச்சத்து உரம் தேவையான அளவு கிடைப்பதோடு மணிச்சத்து அதிகளவில் கிடைப்பதனால் பயிர் வளர்ச்சி சீராகவும், பூச்சிநோய் தாக்குதல் குறைவாகவும், அதிக மகசூல் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் எம்ஏபி உரத்தினை வாங்கி பயன்பெறலாம்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத் துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் அமைக்கப்பட்டது. 47 தரிசு நில தொகுப்புகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது வரை 23 தரிசு நிலத்தொகுப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு 20 தொகுப்பில் பழ மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 1102 ஏக்கர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டு, 1374 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

2022-23ஆம் ஆண்டிற்குப் புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராமஊராட்சிகள்  தெரிவு செய்யப்பட்டு, அவற்றில் 79 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட 79 தரிசு நில தொகுப்புகள் அமைக்கப்பட்டு, 65 தொகுப்புகள் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு 4 தொகுப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2023 – 24 ஆம் ஆண்டு 98  ஊராட்சிகளில்  இதுவரை 17 தரிசு நிலத் தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு, மீதமுள்ள தொகுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, விவசாயிகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின்கீழ் மானியத் திட்டங்களை பெறுவதற்கு வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

நடப்பு ஆண்டு இத்திட்டத்தில் 98 கிராம ஊராட்சிகளில்  மண்மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாயிகளின் கௌரவ நிதித் திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்தின்கீழ் நேரடி சிட்டா உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000/- வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6000/- மூன்று தவணைகளாக ஏப்ரல் – செப்டம்பர், ஆக்ஸ்ட்- நவம்பர் மற்றும் டிசம்பர் – மார்ச் மாதங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தங்களது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து DBT Mode -ற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் துளி நீரில் அதிக பயிர் ௲ நுண்ணீர் பாசனத் திட்டத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி கூடுதல் பரப்பில் சாகுபடி செய்திடும் பொருட்டு வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்புநீர்ப் பாசனம் மற்றும் மழைத்தூவான் பாசனக் கருவிகள் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.

2023-2024 ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2545 எக்டர் இலக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 1352 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள், 2017-18 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மைத்துறை மூலம் மொத்தம் 21,789 விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு மாவட்டத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து 98 கிராமங்களிலும் மண்வள அட்டை வழங்கிட மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.

குடுமியான்மலையிலுள்ள மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்ய மாதிரி ஒன்றுக்கு ரூ.20/- செலுத்த வேண்டும்.தற்போது பரவலாக பெறப்படும் மழையினை பயன்படுத்தி விவசாயிகள் பசுந்தாள் உர பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு ஆகிய பயிர்களை சாகுபடி செய்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழுவதன் மூலம் மண்ணில் அங்ககச் சத்தை அதிகரிக்கலாம்.

இதனால் மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பெருக்கம் அடைந்து மண்வளம் மேம்படுகிறது. மண்ணில் நீர் நிறுத்தும் திறன் அதிகரிக்கிறது. மக்காச்சோள சாகுபடியில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்திட ஆரம்ப நிலையில் இனகவர்ச்சி பொறி ஏக்கருக்கு 5 எண்கள் வைத்து அந்து பூச்சியின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்.

நடவுக்கு முன்னதாக ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். வரப்பு பயிராக உளுந்து, தட்டைபயறு, சூரியகாந்தி, எள் மற்றும் தீவனச்சோளம் ஆகியவற்றை வளர்க்க வேண்டும்.

ஆரம்ப நிலையில் உள்ள புழுக்களை கட்டுப்படுத்த அசாடிராக்டின் 1500 PPM என்ற மருந்து ஏக்கருக்கு 1 லிட்டர் அளவு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். வளர்ந்த புழுக்களை கட்டுப்படுத்த ஸ்பைனிடோரம் 100 மிலி அளவு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்திடலாம்.

உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரம் இருப்பு விவரம், மானியத் திட்டங்கள், மானிய முன்பதிவு, உதவி வேளாண்மை அலுவலர் வருகை குறித்த தகவல், வானிலைச் செய்திகள், பயிர்க் காப்பீட்டு விவரங்கள் உள்ளிட்ட 21 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பாக திருச்சி மாநகரில் கேர் பொறியியல் கல்லூரியில் இம்மாதம் ஜூலை 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் வேளாண் சங்கமம் 2023 – வேளாண் சார்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இதில் விவசாயிகள் அனைவரும் இலவச அனுமதியுடன் கலந்துகொள்ளலாம்.

இங்கு வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, விதை மற்றும் அங்ககச்சான்றளிப் புத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தமிழ்நாடு வேளாண் கல்லூரி, வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் கருவி விற்பனை நிறுவனங்கள், நுண்ணீர் பாசன நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியன விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், மாவட்ட வன அலுவலர் தனலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top