Close
நவம்பர் 22, 2024 12:30 காலை

புத்தகம் அறிவோம்… விளக்குகள் பல தந்த ஒளி.. லில்லியன் ஈஷ்லர் வாட்சன்

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

 ஜூலை 27, ‘மக்கள் குடியரசு தலைவர்‘ என்று அழைக்கப்பட்ட “பாரத ரத்னா”டாக்டர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (இப்படித்தான் டி.என்.சேஷன் ஒவ்வொரு முறையும் கலாமை அழைப்பாராம் – கலாம் சொன்னது. ஆங்கிலத்தில் 31 எழுத்துகள்) நினைவு நாள் இன்று.

கலாம் ‘எனது பயணம்’ என்ற நூலில் என்னைக் ‘கவர்ந்த புத்தகங்கள்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் “எண்ணற்ற புத்தகங்களைப் படித்துள்ளேன். ஆனால் என் மனதிற்கு மிகவும் பிடித்த அல்லது என் மனத்தை ஆழமாக பாதித்த புத்தகங்கள் எவை என்று என்னிடம் கேட்கப்பட்டால் நான் மூன்று புத்தகங்களை குறிப்பிடுவேன்” என்று சொல்லி, முதலாவதாக Lillian Eichler Watson எழுதிய ” Lights from many Lamps” (விளக்குகள் பல தந்த ஒளி- லில்லியன் ஈஷ்லர் வாட்சன் -கண்ணதாசன் பதிப்பகம்) என்ற நூலை புத்தகத்தைக் குறிப்பிடுகிறார். மற்ற இரண்டு நூல்கள் திருக்குறள்,
Man the Unknown by Alexis Carrel (மனிதன் – புரியாத புதிர்-அலெக்ஸிஸ் கேரல் – முல்லை பதிப்பகம்)

“1953 ஆம் ஆண்டு சென்னை மூர் மார்க்கெட் புத்தகக் கடையில் இப்புத்தகத்தை முதன்முதலில் பார்த்தேன்.(ஓர் ஒடுக்கமான புத்தகக்கடையில் நின்று புத்தகங்களைப் புரட்டுவதிலும் இது போன்ற அரிய பொக்கிஷங்களைத் தற்செயலாகக் கண்டுபிடிப்பதிலும் கிடைக்கின்ற பெரும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது).

பல வருடங்களாக நான் அதன் பக்கங்களை மீண்டும் மீண்டும் படித்து வந்துள்ளதால் அப்புத்தகத்தை நான் எனக்கான துணையாக நினைக்கிறேன். இலக்கியத்தரம் வாய்ந்ததாக வும் உத்வேகமூட்டுவதாகவும் கருதப்படுகின்ற’லைட்ஸ் ஃபரம் மெனி லேம்ப்ஸ்’ புத்தகம், பல் வேறு நூலாசிரியர்களின் படைப்புகளின் தொகுப்பாகும்.

வெவ்வேறு எழுத்தாளர்களின் உத்வேகமூட்டும் கட்டுரை களையும், கதைகளையும், கவிதைகளையும் அப்புத்தகத்தின் ஆசிரியர் தொகுத்துள்ளார். இக்கதைகள் எவ்வாறு எழுதப்பட்டன என்பதையும், அவற்றிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் குறிப்பிட்டுள்ளது மிகவும் உதவிகரமானதாக உள்ளது.

இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகள் நான் வருத்தமாக இருந்த நேரங்களில் எனக்கு நிம்மதியைக் கொடுக்கவும், எனக்கு அறிவுரை தேவைப்பட்ட நேரத்தில் என்னை கை தூக்கி விடவும் ஒரு போதும் தவறியதே இல்லை. நான் எனது சொந்த உணர்ச்சிகளால் திக்குமுக்காடிப் போகும் ஆபத்தான சூழலில் இருக்கும்போது இப்புத்தகம் என் சிந்தனையில் ஒரு சமநிலையைக் கொண்டு வருகிறது.

என்னிடமிருந்த இப்புத்தகத்தின் பழைய பிரதி பல முறை பைண்ட் செய்யப்பட்டு நைந்துபோன நிலையில் சில வருடங்களுக்கு முன்பு என் நண்பர் ஒருவர் தேடிக் கண்டுபிடித்து வாங்கி எனக்குப் பரிசளித்த போது நான் பேரானந்தம் அடைந்தேன்” என்கிறார் கலாம்.

வாழ்வின் சந்தோஷ அனுபவம்,
நம்பிக்கை மனஅமைதி,
தைரியம் , பயத்தை வெற்றிகொள்வது,
நம்பிக்கையும் சாதனையும்,
சுய கட்டுப்பாடு ஒழுக்கத்தில் மேம்படுதல்,
தனிப்பட்ட குணம் மற்றவர்களுடனான உறவு ,
இதயத்தில் மனத்தில் அமைதி,
அன்பும் குடும்பவாழ்வும்,
இறுதி வருடங்களில் திருப்தி,
எதிர்காலத்துக்கான நம்பிக்கை
என்று 10 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது இந்த புத்தகம்.
ஒவவொரு பாகத்திலும் பலருடைய வாழ்க்கை மற்றும் படைப்புகளையும், அது தொடர்பாக வேறு பலர் சொல்லியிருக்கும் கருத்துகளையும் மிக அழகாக தொகுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

ஆசிரியரின் பல வருட உழைப்பில் உருவான நூல் இது.
பாகம் ஒன்றிலிருந்து..”மனத்தை ஒருவன் வைத்திருக்கும் நிலையைப் பொருத்தே அவன் அடையும் சந்தோஷம் இருக்கும்”- ஆபிரகாம் லிங்கன்.

“எதையாவது செய்வது, எதையாவது நேசிப்பது, எதையாவது நம்புவது இவைதான் வாழ்வில் சந்தோஷத்திற்கான அடிப்படைத் தேவைகள்.”-ஜோசப் அடிசன்

” தன்னிடம் இல்லாததற்காக வருந்தாமல், தன்னிடம் இருப்பதற்காக சந்தோஷமாக இருப்பவனே புத்திசாலி”
– எபிக் டேடஸ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top