புத்துணர்வு தரக்கூடியவை புத்தகக் கண்காட்சிகள்தான் என்றார் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
புதுக்கோட்டையில் 6 -ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாள்(29.7.2023) நிகழ்வில் பங்கேற்று புத்தக அரங்குகளை பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்திட அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 6 -ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்புத்தகத் திருவிழா வானது, புதுக்கோட்டை நகர்மன்றத்தில் 28.07.2023 முதல் 06.08.2023 வரை 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகத்துடன் அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்துகின்றன. இது ஏதோ பெயரளவுக்கு நடத்துவதைப் போல இல்லாமல் அர்ப்பணிப்புடன் இந்த புத்தகத் திருவிழாவை ஒருங்கிணைப்பாளர்கள் நடத்து கின்றனர் என்பதை உணரமுடிந்தது.
இங்கு அமைந்துள்ள புத்தக அரங்குகளை சுற்றிப்பார்த்து வைக்கப்பட்டிருக்கின்ற புத்தகங்களையும் பார்த்தபோது நம்மை அறியாமல் புத்துணர்ச்சி ஏற்பட்டது. அப்படிப்பட்ட இப்புத்தகத் திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 75 பதிப்பகங்களிலிருந்து சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது அறிவு, அறிவியல், அரசியல், கவிதைகள், வரலாறுகள் உட்பட எண்ணற்றத் தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் 112 அரங்குகளில் வைக்கப்பட்டுள்ளது.
நம் குழந்தைகள் ஒவ்வொருவர் கையிலும் செல்போன் கொடுத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், புத்தகங்களைக் கொடுக்க வேண்டிய கால மாற்றத்தை செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமை.
சாதி, மதம் கடந்து மக்களை மனிதர்களை நேசிக்கும் பழக்கத்தை புத்தக வாசிப்பு தர வேண்டும். அதற்கு இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் பயன்படும். ஆலங்குடி தொகுதியில் ரூ. 1.75 கோடியில் நூலகத்தை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியிருக்கிறேன்.
பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும், இப்புத்தக திருவிழாவினை பயன்படுத்திக் கொண்டு, புத்தகங்கள் வாங்கி பயன்பெறலாம் என்றார் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் .
விழாவை,புத்தகத் திருவிழா விழாக் குழு தலைவர் /மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கம்மூர்த்தி,
கவிஞர் நா.முத்துநிலவன்,அ. மணவாளன், முனைவர் ஆர்.ராஜ்குமார்,எஸ்.டி. பாலகிருஷ்ணன், மு.முத்துக்குமார், த.விமலா,க.சதாசிவம், ஈ.பவனம்மாள்,
கவிஞர் ஜீவி,கவிஞர் ராசி. பன்னீர்செல்வன்,கவிஞர் எம். ஸ்டாலின் சரவணன்,கிருஷ்ண வரதராஜன், கவிஞர் மு.கீதா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
நிகழ்வுக்கு. பாரதிகல்வி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். இதில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை ,
வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், நகர்மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் ம.வீரமுத்து வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்ட துணைச்செயலர் ஆர். பிச்சைமுத்து நன்றி கூறினார்.