வீட்டிலும், வயல்வெளிகளிலும் உழவர்கள் பேசிப்பேசித்தான் காலம்காலமாக தமிழை காப்பாற்றி வந்துள்ளனர் என்றார் கவிஞர் நந்தலாலா.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் ‘வணக்கம் வள்ளுவா’ என்ற தலைப்பில் திங்கள்கிழமை அவர் மேலும் அவர் பேசியதாவது:
வள்ளுவன் வாழ்ந்த காலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கலாம். ஆனால், நமக்கு திருக்குறள் படிக்கக் கிடைத்தது வெறும் 211 வருடங்களுக்கு முன்புதான். திட்டமிட்டு தமிழ்ப் பனுவல்கள் எரிக்கப்பட்ட காலத்தில், சமையற்காரர் கந்தசாமிப்பிள்ளையின் கையில் திருக்குறள் ஓலைச்சுவடி கிடைத்தது.
அது அப்போதைய ஆங்கிலேய கவர்னர் எல்லீஸிடம் கொடுக்கப்பட்டது. அவரால்தான் அச்சுவடிவில் நமக்குக் திருக்குறள் கிடைத்தது. எல்லீஸ் இல்லையென்றால் இப்போது நாம் கொண்டாடும் திருக்குறள் இல்லை.
நம்மை ஆண்ட பல மன்னர்கள் ஆங்கிலம், தெலுங்கு, உருது மொழிகளைத்தான் ஆட்சிமொழியாக வைத்திருந்தனர். அப்படியென்றால் இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் எப்படி வாழ்கிறது. வயல்வெளியில் உழுதுகொண்டிருந்த உழவர்கள் பேசிப் பேசித்தான் தமிழ்மொழியை காலம் காலமாகக் காப்பாற்றி வந்துள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த வேர்ச்சொற்கள் இன்னும் உயிரோடு இருப்பதற்கு அதுவே காரணம்.
பிறரின் துன்பத்தை தன் துன்பமாகக் கருதுவதுதான் அதிகபட்ச அறிவு என்பது. தனக்கு துன்பம் செய்பவன் வெட்கப்படும் வகையில் அவருக்கு நன்மை செய்துவிடச் சொன்னவர் திருவள்ளுவர்.
மனதால் செய்வதுதான் பெரிய குற்றம் என்ற மேற்குலக நாடுகள் வடிவமைத்த சட்டங்களுக்கு முன்பே அதனைச் சொன்னவர் திருவள்ளுவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற ஆகப்பெரிய சமூக நீதியைச் சொன்னவர் அவர்.
குடும்பத்தினர்கூட ஏதோ ஒருவகையில் நிபந்தனைக்குள் பட்டுத்தான் அன்பைத் தருபவர்களாக இருக்கின்றனர். பயன் எதையும் எதிர்பாராமல் கொடுக்கும் அன்புக்குப் பெயர்தான் கருணை என்பதை அப்போதே சொன்னவன் வள்ளுவன்.
திருக்குறள் என்பது வெறுமனே மனப்பாடப் பாடல் அல்ல, தமிழ்ச் சமூகத்தின் சிந்தனை முறையை தமிழுக்குத் தந்தவர் திருவள்ளுவர். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ போன்றநவீன சிந்தனைகளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முப்பே தந்த வள்ளுவனால் நல்லது செய்பவன் துன்பப்படுவதும், கெட்டது செய்தவன் சந்தோசமாக இருப்பது எப்படி என விடைதெரியாமல் தவித்தான். அதற்குக் காரணம் சுரண்டல் என்ற கண்டுபிடித்துச் சொன்னவன் காரல் மார்க்ஸ்.
புத்தகத் திருவிழா நடத்துவதே ஒருவகையான அரசியல். அறிவு பரவினால் வாக்கு வங்கி சரியும் என்று சில அரசியல் கட்சிகள் பயப்படுகின்றன. அறிவு பரவினால் வாக்குவங்கி அதிகரிக்கும் என்று நம்பும் அரசு இங்கே இருப்பது ஆரோக்கியமானது. மொழியை எப்போதும் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். உலகச் சிந்தனைகளை உங்களுக்கு கொண்டு வந்து தருவது இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள்தான் என்றார் கவிஞர் நந்தலாலா .