Close
செப்டம்பர் 19, 2024 7:21 மணி

சமூகத்துக்கும் கல்விக்கூடத்துக்கும் உள்ள இடைவெளியை வாசிப்பால் மட்டுமே குறைக்க முடியும்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகதிருவிழாவில் பேசுகிறார், எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்

சமூகத்துக்கும் கல்விக்கூடத்துக்கும் உள்ள இடைவெளியை வாசிப்பால் மட்டுமே குறைக்க முடியும்  என்றார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் ஐந்தாம் நாள் நிகழ்வில்(செவ்வாய்க்கிழமை)  ‘வாசிப்பின் சிறகுகள்’ என்ற தலைப்பில் அவர் பேசியது:

இளைஞர்கள் படிப்பதில்லை என பெரியவர்கள் நாம் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் பெரியவர்களும் படிப்பதில்லை, ஆசிரியர்கள், பேராசிரியர்கள் படிப்பதில்லை. ஆனால், அதிகாரம் செலுத்தும் நோக்கில் இளைஞர்களை குறை சொல்லிக் கொண்டே இருக்கிறோம். பொதுவாக எல்லா மட்டத்திலும் வாசிப்பு குறைந்திருக்கிறது.

தமிழ்நாடு அரசு வாசிப்பு இயக்கத்தைத் தொடங்கியிருப்பது நல்ல தொடக்கம். எங்களைப் போன்ற எழுத்தாளர்களை வைத்து முதல்கட்டமாக 53 நூல்களை வெளியிடப்பட்டு இருக்கிறது. கல்வித்துறையின் இத்தகைய நடவடிக்கையால் 5 ஆண்டுகள் கழித்து இதற்கான விளைச்சல் கிடைக்கலாம்.

மாணவர்களைப் போல ஆசிரியர்களும் பாடப்புத்தகங்க ளைத்தான் படிக்கின்றனர். பாடப்புத்தகங்கள் ஆசிரியர்களுக்கானது அல்ல. அவர்கள் மேலும் பல நூல்களைக் கற்று மாணவர்களை வழிநடத்த வேண்டும். சமூகத்துக்கான சிறந்த மனிதர்களை கல்விக் கூடங்கள் உருவாக்குவதில்லை. சமூகத்துக்கும் கல்விக் கூடத்துக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. வாசிப்பு ஒன்றே இதைக்குறைக்கும்.

மாணவர்களின் தலையில் எதையாவது திணித்து அனுப்பும் வேலையைத்தான் கல்விக் கூடங்கள் செய்கின்றனர். உண்மை அப்படியல்ல. மாணவர்கள் படைப்பூக்கம் மிக்கவர்கள். குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது என்ற மனநிலையில் இருந்து ஆசிரியர்கள் விடுபட வேண்டும்.

அறிவு என்பது வெளிச்சம். சாதி என்பது இருட்டு. வகுப்பறையில் இருந்து வெளிச்சம் ஊருக்குள் பரவ வேண்டும். ஆனால், ஊருக்குள் இருந்த இருட்டு வகுப்பறைக்குள்ளும் வந்திருக்கிறது. சாதிப் பட்டையைக் கட்டிக் கொண்டு, ஆசிரியரை தாக்கச் செல்லும் மாணவர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான கம்பீரம் சிதைக்கப்படுகிறது. அவர்கள் மாணவர்களை வழிநடத்தும் படைப்பூக்கப்படை. ஆனால், அந்தத் துறையில் செயலர் முதற்கொண்டு அதிகாரிகளுக்கு கீழே பணியாற்றும் கடைநிலைப் ஊழியர்களாகவே பார்க்கப்படுகின்றனர். இதில் மாற்றம் வரவேண்டும்.

நூறு புத்தகங்களைப் படித்தால் நமக்கு சிறகுகள் முளைக்கும். ஆயிரம் புத்தகங்களைப் படித்தால் அறிவுலகின் விண்ணில் பறக்க முடியும். சரியான கல்வி என்பது சமூகத்தைக் கட்டுடைத்துப் பார்ப்பதுதான். காரல் மார்க்ஸும், அம்பேத்கரும், பெரியாரும் சமூகத்தைக் கட்டுடைத்துப் பார்த்தவர்கள். நல்ல வாசிப்பே சமூகத்தைக் கட்டுடைத்துப் பார்க்க நமக்கு உதவும்.

தனித்து இயங்கும் மொழியாக தமிழ் இருக்கிறது என்பதை கீழடி, ஆதிச்சநல்லூல் உள்ளிட்ட அகழாய்வுகள் நமக்கு உணர்த்துகிறது. சங்க இலக்கியத்தில் உள்ள அணிகலன்களும், பெயர்களும் கீழடியில் கிடைத்து இருக்கிறது. அதற்காக ஆதிமனிதனே தமிழன்தான் என்ற மிகையும் நமக்குத் தேவையில்லை. அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டவற்றைக் கொண்டு நம்முடைய பெருமைகளைக் கொண்டாடுவோம்.

ஆதிமனிதன் தோன்றிய இடம் ஆப்பிரிக்கா. அங்கிருந்து இடம்பெயர்ந்தவர்கள்தான் உலகில் உள்ள அத்தனை மனித சமூகமும். சிந்துசமவெளி நாகரிகத்தின் வாரிசுகள் தமிழர்கள் என நிரூபனமாகி வருகிறது. வரலாற்றை சரியாக வாசித்தால் இந்தியாவைப்பற்றி நாம் முழுமையாப் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறு தமிழ்ச்செல்வன் பேசினர்.

சிறப்பு விருந்தினர்களாக தவத்திரு தயானந்த சந்திரசேகரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சையதுஇப்ராஹிம்பாபு,  வைரம்ஸ் பள்ளி தலைவர் ரெகுபதிசுப்பிரமணியன், கோ. கிருஷ்ணன், சத்தியராம் ராமுக்கண்ணு, ரோஸ் தொண்டு நிறுவன இயக்குநர் ஏ. ஆதப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

முன்னதாக புத்தகத்திருவிழா ஒருங்கிணைப்புக்குழு ஆர். ராஜ்குமார் வரவேற்றார். அறிவியல் மாவட்ட இணைச்செயலர் க. ஜெயராம் நன்றி கூறினார்.

புத்தகத் திருவிழாக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கம்மூர்த்தி, கவிஞர் நா.முத்துநிலவன், அ. மணவாளன், முனைவர் ஆர்.ராஜ்குமார், எஸ்.டி. பாலகிருஷ்ணன், ம.வீரமுத்து, மு.முத்துக்குமார், த.விமலா, க.சதாசிவம், ஈ.பவனம்மாள்,கவிஞர் ஜீவி,கவிஞர் ராசி. பன்னீர்செல்வன், கவிஞர் எம். ஸ்டாலின் சரவணன்,கிருஷ்ண வரதராஜன், கவிஞர்  மு.கீதா உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் விழாவை ஒருங்கிணைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top