Close
நவம்பர் 22, 2024 8:49 மணி

வாழ்க்கையை மாற்றக் கூடிய சக்தி புத்தகங்களுக்கும் உண்டு

புதுக்கோட்டை

கூண்டுக்குள் வானம் அரங்கில் சிறைவாசிகளுக்கு நூல்கள் வழங்கப்பட்டது

 நாம் இருக்கும் இடத்திலிருந்து எங்கேயும் செல்ல முடியாத சூழலில் இருக்கும் போது புத்தக வாசிப்பு நம்மை நிறைய இடங்களுக்கு பயணிக்க வைக்கும் என்ற ஆங்கில பழமொழிக்கு ஏற்பசிறைவாசிகளுக்கு சிறைகளில் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் லட்சக்கணக்கான கைதிகள் இருக்கக்கூடிய சூழலில் குறைவான எண்ணிக்கையிலான புத்தகங்கள் தான் உள்ளன.இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் தான் முதல் முறையாக சிறைவாசிகளுக்கு புத்தகங்களை தானமாக வழங்குவதற்கு எனத் தனி அரங்கம் அமைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் நடத்தப்பட்ட   புத்தகத் திருவிழாக்களிலும் தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில் கூண்டுக்குள் வானம் என்ற தலைப்பில் சிறைவாசிகளுக்கு  புத்தகங்களைப் பெறுவதற்காக தனி அரங்கம் அமைக்கப்பட்டது.

எனது பெயர் ஈடித் ரேனா. நான் புதுக்கோட்டை மாவட்ட வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறேன்.சிறுவயதிலிருந்தே புத்தகம் வாசிப்பதிலும் புத்தகங்கள் வாங்குவதிலும் அதிக ஈடுபாடு கொண்ட எனக்கு, நான் வாங்கிய புத்தகங்களைப் படித்து முடித்த பிறகு மற்றவர்களுக்கு கொடுத்து விடும் பழக்கம் உண்டு.

படித்து முடித்த புத்தகங்கள் பயனற்று தூசு படிந்துக் கிடப்பதிலோ அலங்காரமாக அலமாரிகளில் அடுக்கி வைப்பதிலோ எனக்கு உடன்பாடு இல்லை.

புத்தக வாசிப்பில்ஆர்வமுள்ள நண்பர்களுக்கோ மாணவர் களுக்கோ கொடுத்து விடுவது வழக்கம். ஏற்கனவே போட்டித் தேர்வுக்காக வாங்கியப் புத்தகங்களை இலவச போட்டித் தேர்வு மையத்திற்கும் என் மகன் படிப்பதற்காக வாங்கிய குழந்தை இலக்கிய நூல்களை அரசு ஆரம்பப் பள்ளிக்கும் கொடுத்துவிட்டேன்.

இது தவிரவும் நிறைய கவிதை கட்டுரை கதை தொகுப்புகள், அரசியல் மற்றும் தத்துவ நூல்கள் என்னிடம் இருந்தன.அவற் றை பிறருக்கு பயன்படும் விதமாக எங்கே கொடுப்பது என்று தெரியாமல் இருந்தேன்.

சமீபத்தில் தஞ்சை புத்தகத் திருவிழாவில் இது போன்ற அரங்கு அமைக்கப்பட்டதையும் அங்கு பலரும் சிறைவாசிகளுக்குப் புத்தகங்களை தானமாக வழங்கியது பற்றியும் கேள்விப்பட்டதிலிருந்து புதுகை புத்தகத் திருவிழாவிற்காக ஆர்வத்துடன் காத்திருந்தேன்.

கடந்த 30.07.2023 மாலை 6 மணி அளவில் என்னிடம் இருந்த புத்தகங்களை ஒரு பெரிய கட்டை பையில் போட்டு எடுத்துக்கொண்டு என் மகனுடன் சென்றிருந்தேன்.எடை தாங்காமல் கட்டைப்பை பிய்ந்து கொள்ளவே சற்று சிரமத்துடனே அந்தஅரங்கிற்கு புத்தகங்களை தூக்கிச் சென்றோம்.அதன் முகப்பில் எழுதி வைக்கப்பட்டுள்ள கூண்டுக்குள் வானம் என்ற வாசகம் நம்மை ஈர்க்கும் விதமாக இருக்கிறது.

புதுக்கோட்டை
புத்தகங்கள்

அங்கு புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக காவல் நிலையங்களில் இருப்பது போல சிகப்பு வர்ண கட்டங்கள் போன்ற வடிவமைப்பில் ஒரு பெரிய பெட்டி வைக்கப் பட்டுள்ளது அதில் புத்தகங்களை போடுவதற்காக ஒரு பெரிய துவாரம் இடப்பட்டிருக்கிறது.

அங்கே புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காகநியமிக்கப் பட்டிருந்த சிறைத் துறையைச் சார்ந்த காவலர் ஒருவர் நம்மை இன்முகத்துடன் வரவேற்கிறார்.நாம் வழங்கும் புத்தகங்களுக்கு சிறைத்துறை சார்பில் பாராட்டு மற்றும் பதிவு சீட்டும் (Appreciation cum Acknowledgement) கொடுக்கிறார்கள்.

பிளஸ் 2  வகுப்பு படிக்கும் என்னுடைய மகன் ரேவந்த் கையால் சென்ற ஞாயிறு அன்று அரங்கில் பணியில் இருந்த சிறைக் காவலர் ராமச்சந்திரன் என்பவரிடம் எங்களிடமிருந்த 76 புத்தகங்களை கொடுத்து அதற்குரிய செலுத்துச் சீட்டினை பெற்றுக் கொண்டோம்.

இது போன்ற அரங்கு அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதால் இது குறித்த விழிப்புணர்வுபெருமளவில் இல்லை. உங்களிடமும் புத்தகங்கள் இருந்தால் அல்லது புத்தகத் திருவிழாவில் புதிய புத்தகம் ஒன்றை வாங்கியோ கூட சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்யலாம்.

நிறையப் புத்தகங்களைத் தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை. கொடுக்க வேண்டும் என்ற மனமும் பணமும் உள்ளவர்கள் ஆளுக்கு ஒரு புத்தகத்தை வாங்கி இங்கு புத்தக தானம் செய்யலாம். புதிய புத்தகங்களை தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை நாம் ஏற்கெனவே வாங்கி படித்து முடித்த புத்தகங்களையோ வாங்கி படிக்காமலேயே வைத்திருக்கும் புத்தகங்களையோ  கொடுக்கலாம்.

அரங்கில் புத்தகங்களைப் பெறும் பணியில் இருந்த காவலர் ராமச்சந்திரனிடம் பேசும் போது “ஏற்கெனவே சிறைகளில் உள்ள நூலகங்களில் சிறைவாசிகளின் பலரும் புத்தகங்களை எடுத்துச் சென்று வாசிக்கின்றனர்.

சிறை வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாகவும் அவர்கள் மனதில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் விதமாகவும் புத்தகங்கள் பயன்படும் என்றும், புத்தக வாசிப் பில் ஆர்வம் உடைய கைதிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்றும் கூறினார்.

குற்றம் செய்துவிட்டு சிறைக்கு சென்றவர்களும் உண்டு. குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க இயலாமல் சிறை வாழ்க்கையை அனுபவிக்க கூடிய சூழ்நிலைக் கைதிகளும் உண்டு.

குற்றவாளியாக சென்றவர் மனம் திருந்தி குற்றமற்றவராக வருவதற்கும், தவறே செய்யாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறைக்கு சென்று குற்றவாளியாக திரும்பி வராமல் இருப்பதற்கும் புத்தக வாசிப்பு ஒரு சிறந்த காரணியாக அமையும்.

சிறையில் அவர்கள் தீய பழக்கங்களுக்கு ஆளாகிவிடாமல் குற்ற எண்ணங்களில் இருந்து விடுபடப் புத்தகங்கள் உதவியாக இருக்கும்.இதன் மூலம் சமூகத்தில் நல்லதொரு மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.இது நல்லதொரு வரவேற்கத்தக்க முயற்சி. பொதுமக்கள் இதற்கு
ஆதரவளித்து நிறைய புத்தகங்கள் வழங்கும்போது இந்த திட்டம் ஆரம்பித்தற்கான நோக்கம் முழுமை பெறும்.

#ஈடித் ரேனா#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top