Close
நவம்பர் 22, 2024 12:37 மணி

முதல்வர் கோப்பை.. மாநில அளவில் வென்ற வீரர்களுக்கு ஆட்சியர் மெர்சி ரம்யா பாராட்டு

புதுக்கோட்டை

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வென்ற புதுக்கோட்டை வீரர்களை வாழ்த்திய ஆட்சியர் மெர்சி ரம்யா

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றிபெற்ற புதுக்கோட்டை மாவட்ட வீரர், வீராங்கனைகளுக்கு  மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான  முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றிபெற்ற புதுக்கோட்டை மாவட்ட வீரர், வீராங்கனைகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஆட்சியரி மெர்சி ரம்யா (02.08.2023) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

30.06.2023 முதல் 25.07.2023 வரை மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொது பிரிவு ஆண்கள் கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் பரிசு தொகையினை வென்றுள்ளனர். இப்போட்டிகளில் முதலிடம் பெற்றவர் களுக்கு ரூ.1 இலட்சமும், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.75,000 மும், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.50,000 மும் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்றவர்கள் விவரம்: சிலம்பம் பள்ளி பிரிவில் மான் கொம்பு வீச்சில் டி.கிருஷ்ணன் வெண்கல பதக்கமும், கல்லூரி பிரிவில் இரட்டைக் கம்பு வீச்சில் எஸ்.பிரியதர்ஷினி வெள்ளியும், மான் கொம்பு வீச்சில் எம்.ரங்கசாமி வெண்கலமும், கம்பு வீச்சு மற்றும் அலங்கார வீச்சில் எஸ்.கீர்த்தனா வெண்கலமும், பொதுப்பிரிவில் மான் கொம்பு வீச்சில் ராஜா வெள்ளியும், இரட்டைக் கம்பு வீச்சில் கார்த்திகேயன் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.

மேலும், பளுதூக்குதல் போட்டிகளில் பள்ளி பிரிவில் இ.விஸ்வநாதன் தங்கப்பதக்கமும், கல்லூரி பிரிவில் பிரியா வெள்ளியும், சண்முகப்பிரியா வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். தடகளம் கல்லூரி பிரிவில் 1,500 மீட்டர் ஓட்ட போட்டிகளில் லாவண்யா வெள்ளியும், வட்டு எறிதலில் எஸ்.கோகுல் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.

பொதுப் பிரிவு தடகளம் 3,000 மீட்டர் ஓட்ட போட்டிகளில் ஜி.லட்சுமணன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இறகு பந்து இரட்டையர் பள்ளிப் பிரிவில் ராகுல் மற்றும் தவுபீக் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.

இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட வீரர், வீராங்கனை கள் மொத்தம் 14 பதக்கங்களை வென்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள் என  ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top