Close
நவம்பர் 22, 2024 11:01 காலை

புதுக்கோட்டை பிரஹதாம்பாள் ஆலயத்தில் 30 -ஆவது ஆண்டு ஊஞ்சல் சேவை

புதுக்கோட்டை

திருக்கோகர்ணம் பிரஹதாம்பாள் கோயிலில் நடைபெற்ற ஊஞ்சல் சேவை

அருள்மிகு கோகர்ணேசுவரர் அருள்மிகு பிரகதம்பாள் அம்மன் ஆலயத்தில் அரைக்காசு அம்மனுக்கு ஊஞ்சல் சேவை 30 -ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த  அருள்மிகு  பிரஹதாம்பாள் உடனுறை  அருள்மிகு  கோகர்ணேஸ்வரர்  ஆலயம்  உருவான காலம் ஏழாம் நூற்றாண்டு(கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிட்டிருக்கிறார்கள்.

இது குடவரைக் கோயில் ஆகும்.  குடவரைக் கோயில்கள் என்பவை, செயற்கையான கட்டுமானங்கள் இல்லாமல், முழுமையான பாறைப் பகுதியை  அப்படியே குடைந்து மண்டபங்கள், இறைவன் திருமேனிகள் என்று உருவாக் கப்பட்டவை.

திருகோகர்ணம் கோகர்ணேசுவரரின் கருவறை, மலைச் சரிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.   நடுவில் தனி அறையில் பெரிய சிவலிங்கம் வடிக்கப்பட்டிருக்கிறது.  அதற்கு முன்னால் உள்ள  மண்டபப் பகுதியில் இடப்புறச் சுவரில் விநாயகரும், வடப்புறச் சுவர்ப் பகுதியில்  கங்காதரமூர்த்தியும் வடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தீர்த்தம் : கங்கா தீர்த்தம் (சுனை), மங்கள தீர்த்தம் (மகிழவன நாதர் திரு முன்பு).தலவிருட்சம் : மகிழ மரம் (காமதேனுப் பசு வழிபட்டது).

இக்கோயிலில் அரைக்காசு அம்மன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாள். ஏதேனும் பொருள் தொலைந்தால் “அரைக்காசு அம்மனுக்கு காணிக்கை’ எனக்கூறி சிறிது வெல்லத்தை எடுத்து வைத்துவிட்டு தேடினால் உடனே கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

புதுக்கோட்டை
பிரஹதாம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற ஊஞ்சல் சேவையில் பங்கேற்ற விழாக்குழுவினர்

இக்கோயிலில்அரைக்காசு அம்மன்  ஊஞ்சல் சேவை அறக்கட்டளை சார்பில்  30 -ஆம் ஆண்டு வெள்ளி விழா ஊஞ்சல் சேவை  கோயிலில்  கணபதி ஹோமத்துடன் வியாழக்கிழமை  தொடங்கியது.

ருத்ரஹோமம், துர்க்கா ஹோமத்துடன் காலை 7 மணிக்கு அபிஷேகம் ஆராதனை  நடைபெற்றது. இதையடுத்து பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இதையடுத்து மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்துடன் ஊஞ்சல் சேவை விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி  சிறப்பு பூஜை செய்யப்பட்டு உள்பிரகாரத்தில்  சுவாமி  உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஒவ்வொரு வாரமும்  அரைக்காசு அம்மனுக்கு  ஊஞ்சல் சேவை விழாவை விமரிசையாக  அறக்கட்டளை நிர்வாகிகள்  நடத்தி வருகின்றனர்.

விழாவில், ராணி சாருபாலாதொண்டைமான், நகர் மன்ற முன்னாள் தலைவர் ஆர். ராஜசேகரன், டாக்டர் எஸ். ராமதாஸ், சத்தியராம் ராமுக்கண்ணு, அருட்பணி மருத்துவர் டி.எஸ். ராமமூர்த்தி, நா. புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை
பிரஹதாம்பாள் ஆலயத்தில் நடந்த ஊஞ்சல் சேவையில் பங்கேற்ற பக்தர்கள்

விழா ஏற்பாடுகளை, அரைக்காசு அம்மன் ஊஞ்சல் சேவை அறக்கட்டளை தலைவர் சத்தியபாமா ராமுக்கண்ணு, செயலர் எஸ். ரவிஅய்யர், பொருளர் டி.எச். ராஜேந்திரன், ஆடிட்டர்  ஆர்.வி. விஜயராகவன் குழுவினர் செய்தனர்.

திருவிழாக்கள் :சித்திரை : சித்திரை பெருந்திருவிழா,

வைகாசி : வசந்த விழா,ஆனி : டோலோற்சவ விழா(ஊஞ்சல் திருவிழா)ஆடி : ஆடிப் பெருந்திருவிழா,ஆவணி : மூல நாளில் காமதேனுப் பசுவுக்கு மோட்சம் கொடுத்த விழா.புரட்டாசி : நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் நடைபெறும். பத்தாம் நாள் அம்பு போடும் விழா.

ஐப்பசி : கந்த சஷ்டி விழா, சூரசம்கார விழா, அன்னாபிசேகம், அன்னதானம் முதலியன நடைபெறும்.கார்த்திகை : திருக்கார்த்திகை பெருவிழா,மார்கழி : திருப்பள்ளி எழுச்சி விழா, திருவெம்பாவைத் திருவிழா, திருவாதிரைப் பெருவிழா.

தை : தைப்பூசத் திருவிழா, வெள்ளாற்றில் உள்ள பூசத்து றைக்கு ஏழு ஊர் சுவாமிகள் அம்பாளுடன் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் விழா,மாசி : மகா சிவராத்திரி விழா.பங்குனி : உத்திர திருவிழா ஆகிய விழாக்கள் முக்கியமானவை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top