புதுக்கோட்டை மாவட்டம்,குளமங்கலம் ஊராட்சியில், கழுமங்கலம் பெரியக்குளத்தில் ரூ.52.78 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், குளமங்கலம் ஊராட்சியில், கழுமங்கலம் பெரியக்குளம் ரூ.52.78 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியினை, சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புற மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறார். அதன்படி குளமங்கலம் ஊராட்சியில், புதுப்பித்தல், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புத் திட்டத்தின்கீழ், ரூ.52.78 லட்சம் மதிப்பீட்டில் கழுமங்கலம் பெரியக்குளம் தூர்வாரும் பணி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இக்குளம் தூர்வாரி முடிப்பதன் மூலம் மழைக்காலங்களில் அதிக அளவிலான நீரினை சேகரிக்க முடியும். இதன்மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயனடைவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற வளர்ச்சி திட்டப் பணிகளை உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும் என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்;