Close
செப்டம்பர் 20, 2024 3:41 காலை

புதுகைப் புத்தகத் திருவிழாவில் ரூ. 2.50 கோடிக்கு விற்பனை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா நிறைவு விழாவில் பேசிய திருச்சி தொகுதி எம்பி திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய 6 -ஆவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஆக. 6)  பிற்பகலில் நிறைவடைந்தது.

10 நாட்கள் நடைபெற்ற இந்தப் புத்தகத் திருவிழாவில் மொத்தம் ரூ. 2.50 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையானதாக மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அறிவித்தார்

புதுக்கோட்டை  டவுன்ஹாலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு தலைமை வகித்து அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர்  ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழாக்கள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டதன் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து
நடத்தும் 6 -ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை 28.07.2023 முதல் 06.08.2023 வரை 10 நாட்கள் சிறப்பாக நடத்தியுள்ளது.

புதுக்கோட்டை
விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

இப்புத்தகத் திருவிழாவில் 107 அரங்குகள் அமைக்கப்பட்டு 92
பதிப்பகங்களிலிருந்து பல்வேறு தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. இப்புத்தகத் திருவிழாவை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகைதந்து சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான புத்தகங்கள் வாங்கிசென்றுள் ளனர்.10,500 மாணவர்கள் கோளரங்க நிகழ்வுகளைக் கண்டுகளித்துள்ளனர்.

மேலும்,  புத்தகத் திருவிழாவில்  புதுக்கோட்டை மாவட்ட சிறையில் நூலகம் உருவாக்கும் வகையில் அமைக்கப் பட்டிருந்த  ‘கூண்டுக்குள் வானம்‘ என்ற புத்தகங்கள் தானமாகப் பெறும் அரங்கின் மூலம் கடந்த 10 நாட்களில் மொத்தம்  3 ஆயிரம் புத்தகங்கள் பார்வையாளர்களால் தானமாக அளிக்கப் பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவில்  750 தன்னார்வலர்கள் பணியாற்றியுள்ளனர்.

இப்புத்தகத் திருவிழாவை சிறப்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினரும், மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடு செய்து மக்களிடையே ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

10 நாட்கள் நடைபெற்ற இப்புத்தகத் திருவிழாவிற்கு வந்து சென்ற அனைவரும் மிகபெரிய செல்வமான கல்வி செல்வத்தை தங்களது இல்லத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் செய்யுளின் இறுதி சொல்லை அடுத்த செய்யுளின் தொடக்க சொல்லாக அமைத்து பாடப்படும் அந்தாதியை போல் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள இப்புத்தகத் திருவிழாவை அடுத்த ஆண்டிலும் சிறப்பாக நடத்தப்படும்  என்றார் ஆட்சியர் மெர்சி ரம்யா.

திருச்சி மக்களவை உறுப்பினர் சு. திருநாவுக்கரசர்  நிறைவுரையாற்றி பேசுகையில், நம்மைத் தூங்கவிடாமல் செய்வதுதான் நல்ல புத்தகங்களாகும். அதேபோல பயணங்களின் போது நல்ல வழித்துணையாக இருப்பவை புத்தகங்கள்தான்.

கல்வி தான் உண்மையான சொத்து. நாடு விடுதலை ஆவதற்கு முன்பு 7 சதவிகிதம் தான் கல்வியறிவு இருந்தது. விடுதலைக் குப்பிறகு 90 சதவிகித கல்வியறிவு பெற்ற நாடாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டில் கல்விக்கு முதல்வர் ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்தி, நிதி ஒதுக்கீடு செய்து கண்காணித்து வருகிறார் என்றார் திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள்  ஆட்சியரும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மைச் செயல் அலுவலருமான கவிதா ராமு பேசுகையில்,பெண்களுக்கான சுதந்திரத்தின் அவசியம் குறித்து புத்தகங்கள் மூலமாக
அறிந்துகொள்ளலாம்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் பேசிய சென்னை பெருநகர வளர்ச்சி குழும முதன்மை செயல் அலுவலர் கவிதா ராமு

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின்சுதந்திரத் திற்காகவும் பல்வேறு தலைப்புகளின்கீழ் புத்தகங்கள் வெளிவந்துள்ளன.இதன்மூலம் பெண்கள் அனைவரும் தங்களிடமுள்ள திறமையை வெளிகொணர்வதன் மூலம் ஆண்கள் அனைவரும் பெண்களின் மீது உரிய மரியாதையை வளர்த்துக் கொள்ளவும் முடியும்.

மேலும் பெண்கள் அனைவரும் தங்களிடையே உள்ள திறமை யின்மீதுமுழுநம்பிக்கை கொண்டு செயல்பட வேண்டும். இதற்கு சமுதாயம், தங்கள் குடும்பத்தில்உள்ள ஆண்கள் என்ன நினைபார்களோ என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். மேலும் பெண்கள் அனைவரும் வாழ்வில் முன்னேற புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும் என்றார்  சென்னை பெருநகர வளர்ச்சி குழும  முதன்மை செயல் அலுவலர்  கவிதா ராமு.

புதுக்கோட்டை
விழாவில் பேசிய நடிகர் தாமு

திரைப்பட நடிகர் தாமு  ஏட்டுச்சுரைக்காய் என்ற தலைப்பில்  பேசினார்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாக்குழு தலைவர் / மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கம்மூர்த்தி, கவிஞர் நா.முத்துநிலவன், அ. மணவாளன், முனைவர் ஆர்.ராஜ்குமார், எஸ்.டி. பாலகிருஷ்ணன், ம.வீரமுத்து, மு.முத்துக்குமார், த.விமலா, க.சதாசிவம், ஈ.பவனம்மாள்,கவிஞர் ஜீவி,கவிஞர் ராசி. பன்னீர்செல்வன், கவிஞர் எம். ஸ்டாலின் சரவணன், கிருஷ்ண வரதராஜன், கவிஞர் மு.கீதா ஆகியோர் புத்தகத் திருவிழா வை ஒருங்கிணைத்தனர்.

இப்புத்தகத் திருவிழாவில், அறிவியல், அரசியல், கவிதை, வரலாற்றுக் கதைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்து. பத்து நாள்கள் கோலாகலமாக நடந்த புதுக்கோட்டை புத்தகத்திருவிழா இனிதே நிறைவடைந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top