Close
செப்டம்பர் 19, 2024 11:08 மணி

புதுக்கோட்டையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா

புதுக்கோட்டை

உலக தாய்ப்பால் வார நிறைவு விழாவில் செல்லப்பிள்ளை ஆலோசனை மையத்தில் பயன்பெற்ற குழந்தைகளுக்கு, புதிய கணக்கு அட்டையையும், ஊட்டச்சத்துப் பெட்டகத்தையும் வழங்கிய ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில்  ‘உலக தாய்ப்பால் வார நிறைவு விழா” மற்றும் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைக் கற்பிப்போம்”என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை இராணியார் அரசு மருத்துவமனையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து ‘உலக தாய்ப்பால் வார நிறைவு விழா” மற்றும் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைக் கற்பிப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா (07.08.2023) தொடக்கி வைத்தார்.

பின்னர், செல்லப்பிள்ளை ஆலோசனை மையத்தில் பயன்பெற்ற குழந்தைகளுக்கு, புதிய கணக்கு அட்டையையும், ஊட்டச்சத்துப் பெட்டகத்தையும் வழங்கினார.

மேலும் சீம்பால் (ம) தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்தும், ‘செல்லப்பிள்ளை” திட்டம் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். இச்செல்லப்பிள்ளை திட்டமானது கடந்த ஆண்டு தாய்ப்பால் வார விழாவில் தொடங்கப்பட்டு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு இராணியார் மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் சிகிச்சை மேற்கொண்டு, ஓராண்டு நிறைவு செய்த 16 பெண் குழந்தைகளுக்கு ‘செல்வமகள்” சேமிப்பு திட்டத்தின் கீழ் ரூ.1000- முதல் தவணை செலுத்தப் பட்ட கணக்கு புத்தகம், ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மரக்கன்றையும்  ஆட்சியர் வழங்கினார்.

பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் புத்தாடை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் ஊட்டசத்து கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.

 நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு உயர்தரத்திலான கல்வியினை அளிக்க வேண்டும். மேலும் நமக்கு கிடைக்காத சூழலையும் கல்விக்காக நமது குழந்தைகளுக்கு நாம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இதன்மூலம் கல்வி கற்று சமுதாயத்தில் சிறந்த குடிமகனாக விளங்க முடியும். மேலும் குழந்தைகளை எந்த விதமான ஏற்ற தாழ்வுகளும் இல்லாமல் வளர்க்க வேண்டும். மேலும் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் குழந்தை திருமணங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

எனவே பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகள் மீது முழு அக்கறை கொண்டு அவர்களது எதிர்காலம் சிறப்பானதாக அமையும் வகையில், அவர்களுக்கு தேவையான சூழலை உருவாக்கிட வேண்டும் என்றார் ஆட்சியர் மெர்சி ரம்யா.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) மரு.ராஜ்மோகன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவர்  இந்திராணி, வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top