Close
செப்டம்பர் 20, 2024 3:54 காலை

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் தென்பட்ட அரை வட்ட வடிவ செங்கல் கட்டடம்..!

தமிழ்நாடு

பொற்பனைக்கொட்டை அகழாய்வில் தென்பட்ட செங்கல் கட்டுமானம்

பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில்  3.8 செமீ ஆழத்தில் அரை வட்ட வடிவ செங்கல் கட்டடம் ஒன்று வியாழக்கிழமை வெளியில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், பொற்பனைக் கோட்டையில், தமிழ்நாடு நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கடந்த 20.05.2023- சனிக்கிழமை  அகழாய்வுப் பணியை தொடக்கி வைத்தனர்.
பொற்பனைக்கோட்டை அகழாய்வானது 3.11 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனைத் திடல் வாழ்விடப் பகுதியில் இதுவரை 5 மீட்டர் நீள அகலத்தில் 8 குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. அகழாய்வு தொடங்கி சில நாட்களிலேயே ஒரு குழியில் 19 செமீ ஆழத்திற்குள் ஒரு செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டது
தமிழ்நாடு
பொற்பனைக்கோட்டை அகழாய்வில் தென்பட்ட செங்கல் கட்டுமானம்
மேலும், இதுவரை வட்டச் சில்லுகள்-  49, கென்டி மூக்குகள்- 2, கண்ணாடி வளையல்கள்- 4, கண்ணாடி மணிகள்- 95, சுடுமண் விளக்கு- 1, தக்களிகள்- 2, காசு- 1, சூதுபவள மணி- 1, மெருகேற்றும் கற்கள்- 2 என 159 தொல்பொருட்களும், கீறல் குறியீடு இரண்டும் கிடைத்துள்ளன. தொடர்ந்து ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி அல்லது தோடு ஒன்றும், எலும்பு முனை கருவி மற்றும் வட்ட வடிவ சிவப்பு நிறமுடைய கார்னீலியன் பாசி மணி ஒன்றும் கிடைத்துள்ளது.
பெரிய அளவிலான கட்டுமானங்கள் எதுவும் இதுவரை அறியப்படாத நிலையில், அகழாய்வின் முக்கியத் திருப்பமாக சுமார் 8 அடி சுற்றளவில் செங்கல் கட்டுமானத்துடன் கூடிய வட்டவடிவ அமைப்பு வெளிக்கொணரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
பொற்பனைக்கோட்டை அகழாய்வுப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
இது, சுமார் 2500 ஆண்டுகள் பழைமையான வீடு அல்லது தானியக் கிடங்கின் அடிக்கட்டுமானமாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வட்டவடிவக் கட்டுமானத்தைச் சுற்றிலும், வடிகால் போன்ற செங்கல் கட்டுமானங்களும் தெரியவந்துள்ளன.
பொற்பனைக்கோட்டையில் வெளியான செங்கல் கட்டுமானம் பற்றி தொல்லியல்துறை வெளியிட்ட தகவல்:
பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில் வியாழக்கிழமை வெளிக்கொணரப்பட்டுள்ள செங்கல் கட்டுமானம் குறித்து தொல்லியல் துறை வெளியிட்ட தகவல்:
தமிழ்நாடு
பொற்பனைக்கோட்டை அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள்
அகழாய்வுக் குழியில் 3.8 செமீ ஆழத்தில் அரை வட்ட வடிவ செங்கல் கட்டடம் ஒன்று வெளிப்பட்டுள்ளது. இந்கக் கட்டட அமைப்பு, வடமேற்குப் பகுதியில் தொடங்கி தென்கிழக்கு பகுதி வரை நீண்டு, மூன்று அடுக்கினைக் கொண்டுள்ளது. இதன் விட்டம் 230 செமீ ஆகும்.
இவற்றுடன் வடகிழக்குப் பகுதியில் 57 செமீ ஆழத்தில் வாய்க்கால் போன்று செங்கல் கொண்டு அமைக்கப்பட்ட நீர்வழித்தடம் ஒன்று கிடைத்துள்ளது. இதன் நீளம் 255 செமீ ஆகும். மேலும் மற்றொரு குழியில் வாய்க்கால் போன்ற நீர்வழித்தடம் ஒன்று கண்டறியப்பட்டது.
மற்றொரு அகழாய்வுக் குழியில் 32 செமீ ஆழத்தில் வடகிழக்குப் பகுதியில் இருந்து வடக்கு- தெற்காக இரண்டு செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
கிழக்குப் பகுதியில் உள்ள கட்டுமானத்தின் நீளம் 200 செமீ ஆகும். இரண்டு செங்கல் கட்டுமானத்தின் இடைவெளி 80 செமீ உள்ளது. ஒரு கட்டடத்தின் அகலம் 40 செமீ ஆகும் என  குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.ராஜேந்திரன்  ஆகியோர் கூறியதாவது: சங்க காலத்தைச் சேர்ந்த வட்ட வடிவிலான கோட்டை, கொத்தளம் இருந்ததற்கான கட்டுமானம் உள்ளது. மேலும், அகழிகளும் உள்ளன. இப்பகுதியில் மிகவும் பழமையான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், களிமண் அணிகலன்கள் ஏராளமாகக் கிடைத்த துடன், இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்ட தற்கான கட்டமைப்பும் உள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2021-ல் இந்தப் பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில்,  பழங்காலத்தில் பயன்படுத்திய மண் கிண்ணங்கள், கிண்ணங்களின் மேல் மூடி குமிழ், பெண்கள் விளையாடிய வட்ட சில் போன்ற பல சுடுமண் பொருட்கள் கிடைத்தன. இதை யடுத்து கடந்த மே மாதம் மத்திய அரசின் அனுமதியுடன் தொல்லியல் துறையினர் அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், தற்போது அகழாய்வுக் குழியில் 3.8 செமீ ஆழத்தில் அரை வட்ட வடிவ செங்கல் கட்டடம் ஒன்று வெளிப்பட்டுள்ளது. மேலும் பல கட்டுமானங்கள் வெளிப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கீழடிக்கு இணையான சான்றுகள் பெரிய அளவிலான கட்டுமானங்கள் கிடைக்கத் தொடங்கியிருப்பதால் பொற்பனைக்கோட்டை மாநில அளவில் கூடுதல் கவனம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top