சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் தொடர்பான உண்மை நிலவரம் குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச்செயலர் பாரதி தமிழன் வெளியிட்ட அறிக்கை:
அரைகுறை உண்மையானது முழுப் பொய்யைவிட ஆபத்தானது என்பார்கள். கடந்த 52 ஆண்டு காலமாக தொடர்ந்து தொய்வின்றி இயங்கிவரும் ‘சென்னை பத்திரிகையாளர் மன்றம்‘ தொடர்பாக வெகு சிலரால் இன்று வெளியே உருவாக்கப்பட்டுள்ள பேச்சு அத்தகைய தன்மையைக் கொண்டிருப்பதாலும், நாம் மதிக்கும் முக்கியமான ஆளுமைகள் இதுகுறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதாலும், நம்முடைய மன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து நாம் எதிர்வினையாற்றுவது அவசியம் என்று வலியுறுத்தியதாலும் இந்த அறிக்கையை வெளியிடுகிறோம்.
கலைஞர் தொடக்கி வைத்த மன்றம்1972 இல் அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது சென்னை பத்திரிகையாளர் மன்றம் (Madras Press Club). 1996ஆம் ஆண்டு ‘மெட்ராஸ்’ எனும் பெயர் சென்னையாக கலைஞர் அவர்களால் மாற்றப்பட்டதை ஒட்டி,1997இல் ‘சென்னை பத்திரிகையாளர் மன்றம்‘ (Chennai Press Club) என்று தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975ன் கீழ் 403/1997 என்ற பதிவெண்ணைப் பெற்று இது பதிவு செய்யப்பட்டது.
முதல் தேர்தலும் இழுத்தடித்த வழக்கும்
1997 -இல் பதிவுசெய்யப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் முதல் தேர்தல் 08.08.1999 அன்று நடைபெற்றது. அந்தச் சமயத்தில் தேர்தலுக்குத் தடை பெற உறுப்பினர் அசுதுல்லா வழக்கு தொடர்ந்தார். தடையின்றி தேர்தல் நடந்தாலும், வாக்கு எண்ணிக்கைக்கு சென்னை 12 -ஆவது உதவி சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்தது.
தொடர்ந்து வழக்கு நடத்தப்பட்டு 2001 -இல் வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவானது. 20.03.2001 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். ஆனாலும், தேர்தல் தொடர்பான வழக்கு தொடர்ந்து நடந்தது; 01.04.2005 அன்று இந்த வழக்கை சிட்டி சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு புதிய கட்டிடம்
இதற்குப் பின் நம்முடைய சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு என்று ஒரு நல்ல கட்டிடம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்டிட புதுப்பிப்புப் பணிகள் தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றது.
2005 ஆகஸ்டு மாதம் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் அவர்களுடைய தலைமையில் 13 பத்திரிகையாளர்களைக் கொண்ட ‘மன்ற கட்டிடக் கட்டுமானக் குழு‘ உருவாக்கப் பட்டது. தொடர்ந்து, 28.09.2005 அன்று கூடிய நிர்வாக் குழுக் கூட்டத்தில், மன்ற நிர்வாகக் குழுவில் அப்போது காலியாக இருந்த பொறுப்புகளுக்குத் தீர்மானத்தின் வழியே புதிய பொறுப்பாளர்கள் சேர்க்கப்பட்டனர்.
இதனிடையே அன்றைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களைச் சந்தித்து, மன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து அன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நமது மன்றத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.
மன்ற புதிய கட்டிடம் கட்டுவதற்காகப் பலருடைய உதவியை யும் நாம் நாடிய நிலையில், எஸ்.ஆர்.எம். குழுமம் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. 2005 அக்டோபரில் இது தொடர்பான அறிவிப்பு வெளியானது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்துக்குள் அலுவலகக் கட்டுமானப் பணி தொடங்கிய நிலையிலும், சிலரால் இடையூறுகள் ஏற்பட்டன.
அவற்றையெல்லாம் கடந்து, மூன்றாண்டுகள் கட்டுமானப் பணி நடந்தது. 2009 ஏப்ரல் 14 அன்று மூத்த பத்திரிகை யாளரும், கட்டுமானப் பணிக் குழுத் தலைவருமான என்.ராம் தலைமையில், மேனாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ அப்துல்கலாம் அவர்களால் நம்முடைய புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
மீண்டும் வழக்கு
இந்நிலையில், மன்றத் தேர்தல் தொடர்பாக மீண்டும் ஒரு வழக்கு (OS No 9964 /2010) உறுப்பினர் மோகன் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் அவர்களைத் தேர்தல் அதிகாரியாக நியமித்து கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாம் உயர் நீதிமன்றத்தை நாடிய போது, சிட்டி சிவில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்குத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடந்தது.
இந்த நிலையில், 04.10.2015 அன்று நம்முடைய பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழுவில் தேர்தல் தொடர்பான வழக்குகளைத் திரும்பப் பெற மூத்த பத்திரிகையாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்ட து; புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு 05-11-2015 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இப்படி வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,807. இது மிக அதிகமான ஓர் எண்ணிக்கை என்பதால், மன்ற விதிகளின் படி விண்ணப்பங்களைப் பரிசீலித்து, ஏற்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பல கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு 328 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு 23.02.2016 அன்று இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தேர்தல் அறிவிப்பு
2016-2018 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க ஏதுவாகத் தேர்தல் அதிகாரியாக மூத்த பத்திரிகையாளர் கு.கீதப்பிரியன், துணைத் தேர்ந்தல் அதிகாரிகளாக மூத்த பத்திரிகையாளர்கள் சாவித்ரி கண்ணன், ம.வி.ராஜதுரை இருவரும் நியமிக்கப்பட்டனர். தேர்தல் அதிகாரியான மூத்த பத்திரிகையாளர் கு.கீதப்பிரியன் 27-03-2016 அன்று தேர்தல் என்ற அறிவிப்பை 09-03-2016 அன்று வெளியிட்டார்.
இந்த நிலையில், அப்போது உறுப்பினராக இருந்த செல்வராஜ் தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக (OS.No. 150 /2016) திட்டமிட்ட படி நாம் தேர்தல் நடத்த இயலவில்லை.
இந்த வழக்கில் 29.08.2016 அன்று தீர்ப்பளித்தது சென்னை உயர் நீதிமன்றம். மேனாள் நீதிபதி கே.சந்துரு அவர்களைத் தேர்தல் அதிகாரியாகவும் உதவித் தேர்தல் அதிகாரியாக வழக்கறிஞர் பாலன் அவர்களையும் நியமித்து, தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
இதன்படி நீதியரசர் கே.சந்துரு அவர்கள் தேர்தல் அதிகாரியாகப் பொறுப்பேற்றதும், 10.09.2016 அன்று அவரிடம் நம் வசம் இருந்த மொத்த விண்ணப்பங்கள், அவற்றில் உறுப்பினர்களாக ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் என்று அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன.
இதன் இடையே நீதிமன்றத் தீர்ப்பை சீராய்வு செய்யும் மனு ஒன்றை செல்வராஜ் (O.A No. 5729 of 2016 in C.S.No.150/2016 ) தாக்கல் செய்தார். இதற்கு 23.12.2016 அன்று நம்முடைய மன்றத்தின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், 24.01.2017 அன்று நீதியரசர் கே.சந்துரு அவர்கள் தேர்தல் அதிகாரியாகத் தொடர தனக்கு விருப்பம் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார்.
புதிதாகத் தேர்தல் அதிகாரியை நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் இன்றளவும் நிலுவையில் உள்ளது.இதுதான் சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் தொடர்பான வழக்குகளின் சுருக்கம்.
ஜனநாயகபூர்வ மாற்றமே நோக்கம்
எந்த ஒரு பத்திரிகையாளருக்குமான அடிப்படைப் பண்பு ஜனநாயகம். அதுவே நம்முடைய சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் அடித்தளமும் ஆகும்.இங்கே அடிப்படையான பிரச்னை என்னவென்றால், பத்திரிகையாளர்கள் நமக்கு இடையேயான ஒற்றுமையின்மையும், அதன் விளைவான நீதிமன்ற வழக்குகளும். சட்டரீதியாக ஏதேனும் ஒரு வகையில் மன்றத்தை முடக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வந்தன.
ஓர் உதாரணம், 07.05.2017 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை CR.P.C 145 பிரிவின் கீழ் முடக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி. சட்டரீதியாகவே நாம் இதை முறியடித்தோம்.
எத்தனையோ சங்கடங்களை இந்த இடைப்பட்ட காலகட்டத் தில் எதிர்கொண்டோம். 2014ஆம் ஆண்டில் பதிவுத் துறையில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி எவ்வித விளக்கமும் கேட்காமல் தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975 -இன் நூற்றுக்கணக்கான அமைப்புகளைப் பதிவுப் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தனர்.
நம்முடைய சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்திருக்கிறது. சட்டப்படி நம்மிடம் கேட்கப்பட வேண்டிய விளக்கமும் கேட்கப் படவில்லை. முறையான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இச்சூழலில், 2021 -இல் குற்றப்பின்புலம் கொண்ட சிலர் மோசடியாக தென் சென்னை பதிவு மாவட்டத்தில் ஆங்கிலத்தில் ‘ Chennai Press Club ‘ என்று நம்முடைய அமைப்பின் பெயரை பதிவுசெய்து, நமது மன்ற அலுவலக வளாகத்திலும் அத்துமீறி நுழைந்தனர்.
காவல் துறையில் உரிய புகாரளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து பதிவுத் துறையுடன் பல்வேறு நிலைகளில் இந்தப் பிரச்னையை விளக்கி, தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டம் 1975 சட்டத்தின் படி தமிழக அரசின் உதவியுடன் நமது சென்னை பத்திரிகையாளர் மன்றம் என்ற பெயர் மீண்டும் பதிவில் ஏற்றப்பட்டது .
தேர்தல் நடத்துவதற்கோ, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, புதிய நிர்வாகிகள் தேர்வுக்கோ இப்போதைய நிர்வாகிகள் எந்த வகையிலும் தடையாக இல்லை. சொல்லப்போனால், எல்லாத் தரப்பினரும் கூடி ஒரு பேச்சுவார்த்தை நடத்தி, நீதிமன்ற வழக்கினை முடிவுக்கு கொண்டு வந்து தேர்தல் நடத்துவதோடு மன்றத்தை அடுத்துவரும் காலத்துக்கு ஏற்ப முன்னெடுத்துச் செல்வதை இன்றைய அவசியத் தேவையாக வே நாம் கருதுகிறோம்.
ஆனால், இது ஏற்கெனவே இருக்கும் அமைப்பை மேலும் பிளப்பதாகவும் பத்திரிகையாளர்களுக்கு என்று தமிழகத்தில் உள்ள ஒரே பலமான அமைப்பைச் சீர்குலைத்திடுவதாகவும் அமைந்திடக் கூடாது.
பத்திரிகையாளர்களின் நம்பிக்கை
உழைக்கும் பத்திரிகையாளர்களின் உரிமைகள் இந்தக் கால் நூற்றாண்டு காலத்தில் எவ்வளவோ நசுக்கப்பட்டுவிட்டன. பணிப் பாதுகாப்பும், குறைந்தபட்ச உத்தரவாத ஊதியமும்கூட இல்லாமல் பத்திரிகையாளர்கள் வதைபடும் நாட்கள் இவை.
ஆட்சியாளர்களின் அடக்குமுறைகள் ஆகட்டும், நிறுவனங்கள் தரும் அழுத்தம் ஆகட்டும், ஒரு பத்திரிகையாளர் எதிர்கொள் ளும் எந்தச் சங்கடத்துக்கும் உடனடி எதிர்வினை ஆற்றுவது இங்கே நம்முடைய மன்றம் மட்டுமே. பத்திரிகையாளர்கள் பணியை இழக்கும்போதோ, பொருளாதார ரீதியாக நலியும் போதோ அவர்கள் உரிமையோடு உதவி கேட்கும் இடத்திலும் இங்கே நம் மன்றமே உள்ளது.
கல்வி உதவி, மருத்துவ உதவி எனப் பல நூறு பேருக்குப் பல நூறு உதவிகளைச் செய்துள்ள மன்றம் இது.கொரோனா காலக்கட்டத்தில் நம் மன்றம் ஆற்றிய பணிகள் அளப்பரியவை.
இப்படி ஓர் அமைப்பைப் பாதுகாப்பது பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரின் கடமை. இந்த இலக்கோடு நம்முடன் பேச வரும் எவருடனும் உரையாட நம்முடைய மன்றம் திறந்த மனதுடனேயே இருக்கிறது. ஒற்றுமையாக நாம் செயல்படுவோமானால் வியத்தகு மாற்றங்களை நம்மால் இணைந்து உருவாக்க முடியும் என அதில் தெரிவித்துள்ளார்.