Close
நவம்பர் 22, 2024 8:55 காலை

சென்னை துறைமுகம்  ரூ. 156 கோடி லாபம் ஈட்டி சாதனை… துறைமுக தலைவர் சுனில் பாலிவால்  தகவல்

சென்னை

சென்னை துறை முகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியேற்றி வைத்த துறைமுகத்தலைவர் சுனில் பாலிவால்

கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் ரூ.156 கோடி லாபம் ஈட்டி படைத்துள்ளது என துறைமுக தலைவர் சுனில் பாலிவால் செவ்வாய்க்கிழமை சென்னையில் தெரிவித்தார்.

77 -ஆவது சுதந்திர தின விழா சென்னை தண்டையார்பேட்டை யில் உள்ள சென்னை துறைமுகத்தின் ஸ்ரீ பாபு ஜெகஜீவன் ராம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில்  துறைமுகத் தலைவர்  தலைவர் சுனில் பாலிவால் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட சுனில் பாலிவால் கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட துறைமுக ஊழியர்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள், தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

அப்போது துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பேசியது,  142 ஆண்டுகள் பழமையான சென்னை துறைமுகம் இம்மாநகரத் தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி உள்ளது. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இத்துறை முகம் இருந்து வருகிறது.

துறைமுகத்தினை சீரான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல துறைமுகம் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக  கடந்த நிதி ஆண்டில் ரூ. 156 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இத்துறை முகம் தற்போது செயல்பாட்டில் உள்ள முக்கிய திட்டங்களை விரைவாக முடித்திட அனைத்து அதிகாரிகளும் உறுதுணையாக இருந்து பணியாற்றி வருகின்றனர்.

மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்:

சென்னை துறைமுகத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் வரை அமைக்கப்பட உள்ள ஈரடுக்கு மேம்பால திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும். ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேட்டில் ரூ. 1400 கோடி மதிப்பீட்டிலான பல்நோக்கு சரக்குகள் கையாளும் முனையம் அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

உல்லாச பயணிகள் கப்பல்:

உல்லாச பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு சென்னை துறைமுகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு மாதங்கள் இயக்கப்பட்ட இக்கப்பலுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து நடப்பாண்டிலும் சர்வதேச உல்லாச பயணிகள் போக்குவரத்து கப்பல் முன்னதாகவே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

12 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு:

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சென்னை துறைமுகத்தில் சுமார் 12 ஆயிரம் மரக்கன்றுகள் புதிதாக நடவு செய்யப் பட்டுள்ளன.  மேலும் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடைபாண்டில் நடவு செய்யப்படும்.  இதன் மூலம் இத்துறைமுகம் பசுமை துறைமுகமாக மாற்றப்படும்.

ரூ.52 கோடியில் வாகன நிறுத்த முனையம்:

கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் துறைமுகத்தின் முதல் நுழைவாயில் அருகே ரூ.52 கோடி செலவில் கூடுதல் லாரிகள் வாகன நிறுத்த முனையம் அமைக்கப்பட உள்ளது. சென்னை துறைமுகம் மாநகர மக்களின் வசதிக்காக பல்வேறு செயல் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

தண்டையார்பேட்டை பள்ளி வளாகம் மேம்படுத்தப்படும்:

தண்டையார்பேட்டையில் துறைமுக நிர்வாகம் நடத்தி வரும் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மூன்றில் இரண்டு பங்கு குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாணவனின் ஆண்டு கல்வி கட்டணம் ரூ. 15 ஆயிரத்திலிருந்து சுமார் ரூ.5 ஆயிரமாக ஆக குறைக்கப்பட்டுள்ளது .

மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப் படும் விலையில்லா பொருள்கள், சீருடைகள்,  புத்தகங்கள், காலணிகள் உள்ளிட்டவைகள் இப்பள்ளி மாணாக்கர்களுக்கு துறைமுகம் சார்பில் வழங்கப்படுகிறது.

இவ்வாறான சலுகைகள் மூலம் கடந்த கல்வியாண்டில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 484 என்ற நிலையிலி ருந்து தற்போது மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 780 ஆக உயர்ந்துள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் ஆசிரியர்களுக்கு சென்னை துறைமுக நிர்வாகம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளி:

வடசென்னையில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு  தனியார் தொண்டு நிறுவனத் துடன் இணைந்து சிறப்பு பள்ளி ஒன்று தண்டையார்பேட்டை பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலதன செலவிடனத்திற்காக காமராஜர் துறைமுகம் சார்பில் ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது . சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவுகள் உள்ளிட்டவைகளுக்காக ஆண்டு தோறும் ரூ. 30 லட்சம் காமராஜர் துறைமுகம் சார்பில் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.

ரூ.2.75 கோடியில் மருத்துவ உபகரணங்கள்:

சென்னை துறைமுக மருத்துவமனையில் ஊழியர்கள், ஓய்வு பெற்றோர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் என சுமார் 21 ஆயிரம் பேர் பயன் பெற்று  வருகின்றனர். இம்மருத்துவ மனையை நவீனப்படுத்தும் வகையில் வகையில் ரூ. 2.75 கோடி செலவில் புதிய உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.

துறைமுக ஊழியர்களின் நலனுக்காக சென்னையில் உள்ள 19 தனியார் மருத்துவ மனைகளுடன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. 5 நவீன பரிசோதனை கூடங்கள் அங்கீகரிக்கப் பட்டுள்ளன. 2 புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன. மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் கட்டணத் தொகை விரைவாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற பல்வேறு  நடவடிக்கைகள் மூலம் மூலம் சென்னை துறைமுகத்தின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த ஓராண்டுக்கு முன் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி முடிக்கப்படும் என்றார் சுனில் பாலிவால்.

இந்நிகழ்ச்சியில் துறைமுகத்தின் துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், எண்ணூர் காமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குனராக பதவி ஏற்க உள்ள ஐரிஸ் சிந்தியா, தலைமை கண்காணிப்பு அலுவலர் முரளி கிருஷ்ணன், துறை தலைவர்கள் கிருபானந்தசாமி, இந்திரனில் ஹசிரா, ராமச்சந்திர மூர்த்தி, ஜெயசிம்மா, டாக்டர் பத்மா, மில்டன் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top