Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

புத்தகம் அறிவோம்…கொடுங்கோளூர் கண்ணகி ஏன் தெறி பாடுகின்றாள்?

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

கொடுங்கோளூர் கண்ணகி ஏன் தெறி பாடுகின்றாள்? நூல் விமரிசனம்..

சிலப்பதிகாரம் காப்பியம், தமிழர் அடையாளத்தை முன்னிறுத்துகிற கதையாடல் மூலம் இன்றைக்கும் பேசுபொருளாக இருக்கிறது. சென்னை மெரினாக் கடற்கரையில் கையில் சிலம்புடன் தலைவிரி கோலமாக கோபத்துடன் நீதி கேட்ட கண்ணகி சிலை, காப்பியப் பாத்திரத்திற்கு அப்பால் வேறு ஒன்றாகத் தோன்றியதால்தான், அந்தச் சிலை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவினால் நள்ளிரவில் அப்புறப்படுத்தப்பட்டது.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் எமனாகும் என்பதுதான் சிலை அகற்றப்பட்டதற்குக் காரணமா? காப்பிய நாயகி கண்ணகியின் சிலையைக் கண்டு முதலமைச்சர் பயந்த சம்பவம் மாந்திரிக யதார்த்தக் கதையாடல் போலஇருக்கிறது.

மதுரை நகரை எரித்த கண்ணகி, வையை ஆற்றங்கரை யோரம் நடந்து சென்று இறந்தார். சேர மன்னனால் சிலை நிறுவப்பட்டுப் பத்தினி தெய்வமாக வழிபடப்பட்ட கண்ணகி வீற்றிருக்கிற கேரள மாநிலத்திலுள்ள கொடுங்கோளூர் பகவதிதான், கண்ணகி என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது.

கொடுங்கோளூர்த் திருவிழாவின்போது கேரளப் பழங்குடி யினர் கெட்ட சொற்கள் நிரம்பிய தெறிப் பாடல்களைப் பாடியவாறு ஆவேசமுற்று ஆடுகின்றனர். தெறிப் பாடல்களில் ஏன் இவ்வளவு கெட்ட வார்த்தைகள் என்ற கேள்வி தோன்றுகிறது; ஆச்சரியமாக இருக்கிறது.

நூலில் இடம் பெற்றுள்ள தெறிப் பாடல்கள் இனவரைவியல் நோக்கில் ஆய்விற்குரியன. ஏன் தெறி பாட வேண்டும் என்று யோசித்த சத்தியப் பெருமாள் பாலுசாமியின் நோக்கம் கொடுங்கோளூர் கண்னகி ஏன் தெறி பாடுகின்றாள்? என்று நூல்வடிவம்பெற்றுள்ளது.

சிலப்பதிகாரம், கண்ணகி என்று அரசியல்ரீதியில் பிரதியை அணுகியுள்ள சத்தியப் பெருமாள், வைதிக சநாதனத்தின் ஆதிக்கத்தைப் பக்கம் தோறும் தோலுரித்துள்ளார். திராவிட அரசியல் நோக்குடன் விமர்சித்துள்ள சத்தியப் பெருமாள் நேரடியாக உரையாடுவதன்மூலம் வாசகருடன் நெருங்கி உறவாடுகிறார்.

தமிழ்ப் பேராசிரியர்களின் மரபான விமர்சனத்தில் இருந்து விலகி, தெறிப்பான மொழியில் நூல் எழுதப்பட்டுள்ளது. 265 பக்கங்களில் சொல்லாடலை முன்வைத்துள்ள சத்தியப் பெருமாள், விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயி ரியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

அவர் கண்ணகி கதையை இளைய தலைமுறையினருக்குக் கடத்தி செல்கிற பணியைச் செம்மையாகச் செய்துள்ளார்.
சிலம்புப் பிரதியை மறுவாசிப்புச் செய்துள்ள சத்தியப் பெருமாளும் நடுகல் பதிப்பகம்மூலம் நூலை வெளியிட்டுள்ள நண்பர் வா.மு.கோமுவும் அருமையான பணியைச் செய்துள்ளனர்.

 புத்தகத் திருவிழாவில் தேடிச் சென்று அவசியம் வாங்கி வாசிக்க வேண்டிய நூல்:கொடுங்கோளூர் கண்ணகி ஏன் தெறி பாடுகின்றாள்?நடுகல் பதிப்பகம், வாய்ப்பாடி. தொடர்புக்கு: 79047 48374

#விமர்சகர்- முனைவர் ந. முருகேசபாண்டியன்#9443861238#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top