Close
செப்டம்பர் 19, 2024 7:16 மணி

ஜெயிலர்… திரைப்பார்வை..

தமிழ்நாடு

ஜெயிலர்- திரைப்பட விமர்சனம்

இந்த விமர்சனத்தை தொடங்கும் முன், இது மற்ற பிராந்திய மொழிகளில் பிரபலமான நடிகர்கள்- கேமியோக்களால் (நட்சத்திர அந்தஸ்து கொண்ட புகழ் பெற்ற நடிகர் சிறு பாத்திரம் எடுத்து நடிப்பது) நிரம்பிய ஒரு முழுமையான ரஜினி படம் என்பதை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதனால் அந்த நட்சத்திர நடிகர்களுக்கான பெரிய இடத்தை பெரிய திரையில் எதிர்பார்க்க வேண்டாம்.

ரஜினி திரும்பி வந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ரஜினியின் கடந்த சில திரைப்படங்களில் பல தவறுகள் நடந்துள்ளன, மேலும் ‘பீஸ்ட்’ மூலம் ஒரு பெரிய பாடம் கற்றுக் கொண்ட நெல்சன் அதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதை உறுதி செய்துள்ளார்.

இரண்டாம் பாதி மந்தமான தருணம் என்று சொல்வதற் கில்லை. குறிப்பாக மோகன்லால் அனைத்து விசில்களையும் கைதட்டல்களையும் பெற்றுவிடுகிறார். மேத்யூவாக அவரது பாத்திரம் பெரும் கவனத்தைப் பெறுகிறது. நரசிம்மனாக சிவராஜ் குமார் தனது தோற்றத்தாலும், உடல் மொழியாலும் கொளுத்துகிறார்.

சுனில் தனது வெகுளியான பாத்திரம் மூலம் திரையில் சற்று கூடுதலாக பளிச்சிடுகிறார். நெல்சன் இந்த நம்பிக்கைக்குரிய தொழிற்முறை கலைஞர்களை முழுமை யாகப் பயன்படுத்தியிருக்கிறார். இது அவர்களுக் கான படம் இல்லை, ஆனால் ரஜினி என்கிற சூப்பர் ஸ்டாருக்காக உழைத்திருக்கின்றனர்.

ரஜினிகாந்துக்கு ஜெயிலர் மிகவும் வித்தியாசமான படம். அவர் தனது பாணியை மிகுதியாக வெளிப்படுத்தி, உடல் மொழி மற்றும் நடிப்பு மூலம் வித்தியாசத்தைக் கொண்டு வந்திருப்பது சிறப்பம்சம். அவரது வயதுக்கேற்ற பாத்திரத்தை கொடுத்து அவை அனைத்தும் மிகவும் நுட்பமான முறையில் செய்யப்பட்டிருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் கூட இதை மிகவும் சிறப்பித்துக் காட்டுகின்றன.

இளம் வயது ரஜினிக்கு என வைக்கப்பட்ட சாகச காட்சிகளை தவிர்த்து, ஒரு நிலைக்கு மேலே செல்லாதபடி, அவரது தசைகளை நெகிழச் செய்யாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளன, ஆனால் அதில் அவருக்கான ரசிகர்களுக்கு ஏற்றபடி வைக்கப்பட்ட, காட்சிகளின் உயரத்தை உணரமுடிகிறது.

ஆரம்பம் முதலே, ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் இருந்து கொண்டு, வெகுஜன மக்களுக்கான வசீகரத்தையும் வெளிப்படுத்துகிறார். இரண்டாம் பாதி அவர் தனது வழக்கமான பாணியில் ஆக்கிரமிக்கிறார். சூப்பர் ஸ்டாரின் கடைசி சில படங்களில், ஜெயிலர் என்பது ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான மற்றும் தனித்துவமான வெளியீடாகும்.

இது அவர்களுக்கு ஒரு விருந்தாகவும், வழக்கமான சினிமா ரசிகனுக்கு சுமார் மூன்று மணி நேர கொண்டாட்டமாக இருக்கும். முதல் பாதியில் ரம்யா கிருஷ்ணாவுக்கு பெரிய பங்கு இல்லை. அவர் இடைஇடையே வந்து போவது அழகு. ஆனால் நினைவில் நிற்கும் படியாக இல்லை.

ஒரு எளிய பழிவாங்கும் திரைவடிவம் என்பதால், திரைக்கதை நிதானமாக கொண்டு செல்லப்பட வேண்டும் என்பது அவசியம். ஒரே பாடலில் பாத்திரங்களை உருட்டி புரட்டி காண்பிக்காமல், இயக்குனர் முக்கிய கதாபாத்திரங்களையும் நிறுவ நேரம் எடுத்துக்கொள்கிறார். மையக் கதையுடன் தொடர்புடைய ஒட்டுமொத்த சமாச்சாரங்களைகூட்டியோ குறைத்தோ காட்டாமல், எல்லாமே நுட்பமாக செய்யப்பட்டு ஒரு புதிய அதிர்வை உருவாக்குகிறது.

இசையும் நகைச்சுவையும் படத்திற்கு பலத்தை கூட்டு கின்றன. ஜெயிலரில் மிகுதியாகக் காணப்படும் தனித்து வமான நகைச்சுவை காட்சிகள், மூலம் இயக்குன ருக்குள் இயல்பாக இருக்கும் நகைச்சுவை உணர்வு வெளிப் பட்டிருக்கிறது.

ஜெயிலரின் நீரோடையான முதல் பாதி, காட்டாற்று வெள்ளமான இரண்டாம் பாதிக்கான முன்னுரையை எழுதிவிடுகிறது. இடைவேளைக்குப் பிந்தைய வரிசைக்கிரமான காட்சிகளில் நாயகனின், அதிரடி நடவடிக்கைகளும், திருப்புமுனைக்காட்சிகளும் நம்மை உற்சாக உட்சத்தில் உட்கார வைத்து விடுகிறது.

ஒரு திருப்பம் மற்றும் சில உணர்ச்சிகரமான காட்சிகளுடன் இறுதியில் நியாயமான திரைக்கதை, தனது பாதைக்கு திரும்புகிறது. அந்த கட்டத்தை அடையும் போது, நீளம் ஒரு பிரச்சனையாக தெரிகிறது.அதற்கு முழு முக்கிய காரணம் கீரிடம் தொடர்பாக கோர்க்கப்பட்ட காட்சிகள் தான். அதில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

முக்கிய குணச்சித்திர கலைஞர்களால் நிரப்பப்பட்டு இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை இரண்டாம் பாதியில் மட்டுமே காணப்படுகின்றன. மணிரத்னம் தன் படங்களில் அளவெடுத்த வசனங்கள் வைப்பது போல, இந்த படத்தில் நகைச்சுவை வசனங்கள் நறுக்கென்று வைக்கப்பட்டிருக்கின்றன.

யோகிபாபு சூப்பர் ஸ்டார் இணைந்து வரும் காட்சிகள், நம்மை வாய்விட்டு, பக்கத்து இருக்கையில் அமர்திருப்பவரின் தொடையை தட்டி சிரிக்குமளவிற்கு இருக்கிறது.உரையா டல்கள், நகைச்சுவை வசனங்கள், திரைக்கதை, நெறியாள்கை அனைத்திலும் நெல்சன் இறங்கி வேலை செய்திருக்கிறார்.

மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக நடித்து, தனது முத்திரையை அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார். தமன்னா சிறிது நேரம் காவால பாடல் மூலம், பார்வையாளர்களை வைத்த கண் விலக்காமல் பார்த்துக்கொள்கிறார். அவர் ஆடிய பாடலுக்கான இசையும் நடன அமைப்பும் உள்ளூர் ஊடகம் முதல் உலக ஊடகம் வரை பிரபலம்.

அனிருத் ரவிச்சந்தர் பாடல்களை வழங்குவதிலும், பின்னணி இசையமைப்பிலும் தனது திறனை திறம்பட வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் வரும் பாடல்கள் கதைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது.

பின்னணி இசை நுட்பமாக, படத்தின் காட்சிகளுக்கு ஒரு புதிய உணர்வைத் தருகிறது. தொழில்நுட்ப ரீதியாக திரைப்படம் மென்மையாய் இருக்கிறது, அது கதைக்களத்திற்கேற்ப போதுமான அளவு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும், ஆர்.நிர்மலின் எடிட்டிங் உதவியும் ஜெயிலரை பெரிய திரையில் வசீகரிக்கும் தயாரிப்பாக வெளிக் கொணர்ந்திருக்கிறது.

சில பகுதிகள் இழுத்தடிப்பது போல் இருந்தது, இரண்டாம் பாதி இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம்.ரஜினிக்கான ஆடை வடிவமைப்பு, ஒப்பனை இரண்டும் மிக அருமை. அந்த இரு கலைஞர்களையும் பாராட்ட வேண்டும்.

போன முறை கமல் + லோகேஷ் கனகராஜ் கூட்டணியை கொண்டாடி தீர்த்தது போல், ரஜினி + நெல்சன் கூட்டணியை இந்த முறை கொண்டாடலாம்.

படத்தை பார்த்துட்டு சொல்லுங்கன்னு சொல்லிட்டு இமய மலை சென்று விட்டார் ரஜினி. அவரது தனிப்பட்ட விருப்பம் அது. இருப்பினும் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் ஆர்ப்பரிப்பை, ஆரவாரத்தை உள்ளூரில் இருந்து ரசித்திருக்க வேண்டும். உமக்கள் போற்றும் கலைஞன், மக்களோடு இருப்பது தான் மகத்துவம்.

படம் முழுக்க பல ஜோடனைகள் இருந்தாலும், கடைசியில் ஜொலித்து நிமிர்ந்து நிற்பதெல்லாம் ரஜினிகாந்த் தான்.

#இங்கிலாந்திலிருந்து  சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top