‘விலங்குகள் முறையின்றி ஒன்றோடொன்று கூடும். மனிதர்களோ மண முறையை அமைத்துக்கொண்டுள்ளனர். யார் யாருடன் மணவுறவுக் கொள்ளக்கூடாது என்னும் விதிகளை ஏற்படுத்தி மண முறைகளைக் கண்டுபிடித்ததன் வழியே பண்பாடு தோன்றியது என்ற விளக்கமும் உண்டு.
மணவுறவில் உணவு வழி ஏற்படுத்தியுள்ள சிந்தனை முறை தமிழ்ச் சமூகத்தில் ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டுள்ளன. மணநிகழ்விற்குப் பிறகு நடைபெறும் ‘சம்பந்தம் கலத்தல்’ பலகாரங்களைப் பரிமாறிக்கொள்வதன் வழி உறுதி செய்கிறது.
இந்த உறவு மறுவீடு செல்லுதல், பால் காய்ச்சுதல் என வளர்ந்து தீபாவளி சீர் பொங்கல் சீர் எனத் தொடர்ந்து ஆண்டாண்டு காலம் சம்பந்தி உறவென்பது பல்வேறு பரிமாற்றங்கள் வழி தொடர்ந்து மதிப்புமிக்கதாய் பேணப்படுகிறது. இங்கு பந்தத்தைப் பிணைக்கும் உறவாகவே உணவு அமைகிறது. பக்.29.
தமிழரிடையே உணவு என்பது பசியைப் போக்கும் ஒன்று மட்டுமல்ல அது ஒரு பண்பாட்டின் அடையாளம். மேலே சொன்னது போல் உணவு உறவைப் பேணும் ஒரு அம்சம். உணவின் தன்மை, வழங்கும் முறை ஒவ்வொரு இடத்திற்கும், சமூகத்திற்குமிடையே வேறுபாட்டைக் காணலாம்.
பக்தவச்சல பாரதி தொகுத்துள்ள “தமிழர் உணவு “உணவு வரலாற்றை மட்டுமல்ல தமிழர் பண்பாட்டையும் பற்றிப் பேசும் நூல். சங்ககாலம் தொடங்கி நவீன கால மதுரை “முனியாண்டி விலாஸ் ” வரை பேசுகிறது ‘தமிழர் உணவு’
நிலமும் உணவும்,
சமூகமும் உணவும்,
சமயமும் உணவும் – என்ற மூன்று பெருத்தலைப்பில் 35 கட்டுரைகள் இந்நூலில் உள்ளது.
தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள் தங்களின் பங்களிப்பைச்சிறப்பாகத் தந்துள்ளார்கள் ‘தமிழர் உணவுக்கு ‘
சோழர் கால உணவுமுறை,
சுட்ட கருவாடு சுண்டவைத்த மீனு,
கம்மங்கஞ்சிக்கு ஏங்குது மனது,
புற்றீசல் பிடித்து பொரியாக்கி,
பரோட்டாவின் அமைப்பியல்,
கம்பங்கஞ்சியும் உளுந்தங்கஞ்சியும்,
சாப்பாட்டு மன்னர்கள்,
முனியாண்டி விலாஸ்- சில கட்டுரைத் தலைப்புகள்.
தொகுப்பாசிரியர் பக்தவச்சல பாரதி மிகச்சிறந்த “மானுடவியல்” ஆய்வாளர், பேராசிரியர். இவரின் ‘பண்பாட்டு மானுடவியல்’ (மணிவாசகர் நூலகம்)வாசிக்க வேண்டிய நூல்.
# பேராசிரியர் விஸ்வநாதன்-வாசகர் பேரவை-புதுக்கோட்டை#