Close
நவம்பர் 22, 2024 5:52 மணி

புத்தகம் அறிவோம்… இமயம் முதல் குமரி வரை

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்.இமயம் முதல் குமரி வரை

நாம் ‘விபூதி என்பதை வங்காளிகள்’பிபூதி’ என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் புகழ் பெற்ற ஊர் வேலூர். வங்காளத்தின் புகழ் பெற்ற ஊர் பேலூர். வேலூர் மருத்துவ வசதி மூலம் உடலுக்கு அமைதி தருகிறது. பேலூர் இராமகிருஷ்ணரின் அறிவுரைகள் மூலம் அமைதி தருகிறது.’பக்.1

காவிரியை’ பொன்னி’ என்கிறோம். பிரம்மபுத்ராவை அசாமியர் சிவப்பு நதி என்று சொல்கிறார்கள். காரணம்? சிவப்பு அபாயத்தின் அறிகுறி. பிற ஆறுகள் ஆட்களைத்தான் விழுங்கும். பிரம்மபுத்ரா ஊர்களை ,பெரிய நகரங்களைக்கூட விழுங்குகிறது.பல ஆறுகள் பெண்ணாக மதிக்கப்பட்ட போதிலும் பிரம்மபுத்ராவை அசாமியர் ஆணாக – கொடிய ருத்ரனாகக் கருதுகிறார்கள். பக்.19.

இப்படி ‘சோமலெ‘ என்கிற சோம.லட்சுமணன், பங்காளம் (வங்காளம்) தொடங்கி தமிழ்நாடு வரை, இந்தியாவின் 25 மாநில மற்றும் நகரங்களைப் பற்றி எழுதியுள்ள நூல்தான் “இமயம் முதல் குமரி வரை “இந்த நூல் ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள். பண்பாடு, கோயில், வழிபாடு, நதிகள், நகரங்கள் என்று அவைகள் தொடர்புடைய, பல நூல்களைப் படித்தும் தெரிந்துகொள்ள முடியாத, அரிய செய்திகளைத் தேடித்தந்திருக்கிறது இந்த நூல்.

மேலும் தமிழ்நாட்டோடு ஒவ்வொரு மாநிலத்தையும் இணைத்து எழுதியிருப்பது இந்த நூலின் சிறப்பு. இது புத்தகங்களைப் படித்து எழுதப்பட்ட நூல் அல்ல. ஒவ்வொரு இடங்களுக்கும் நேரில் சென்று பார்த்து வரைந்த நூல். 1977 -ல்
முதலில் வெளிவந்தது என்றாலும், உள்ளடக்கம் எக்காலத்திலும் மாறாதது.

ஏ.கே. செட்டியாரை உலகம் சுற்றிய (முதல்) தமிழர் என்றால் ‘சோமலெ’யும் அவர் அடியொற்றி பயணம் செய்து எழுதி ‘உலகம் சுற்றிய தமிழர்’ என்ற பெருமை பெற்றவர். பயண இலக்கியங்களின் முன்னோடிகளில் ஒருவர்.

அவருடைய தமிழ்நாடு மாவட்ட நூல் வரிசையை வாசித்தால் தமிழ்நாட்டின் பண்பாடு நாகரீகத்தை முழுமையாக அறிய முடியும். செட்டிநாடும் செந்தமிழும் அவரின் மிகச்சிறந்த நூல்களில் ஒன்று.120 -க்கும் மேற்பட்ட அவரின் நூல்களில் ஒன்றுதான் ‘இமயம் முதல் குமரி வரை’.அரசுப் பணி போட்டித் தேர்வுக்கு தயாராகும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய நூல்.மணிவாசகர் பதிப்பகம்,சென்னை.

# வாசகர் பேரவை விஸ்வநாதன்-புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top