Close
நவம்பர் 22, 2024 6:17 மணி

திருவொற்றியூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு

சென்னை

திருவொற்றியூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பொதுமக்கள்.

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயில் ராஜகோபுர திருக்குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருவொற்றியூர் காலடி பேட்டையில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 2003 -ஆம் ஆண்டு நடைபெற்றது. இதனை தொடர்ந்து குடமுழுக்கு நடத்துவதற்கான அறிவிப்பு 2008 -ஆம் ஆண்டு அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து குடமுழுக்கு திருப்பணியை நடத்து வதற்காக ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் சேவா டிரஸ்ட் தொடங்கப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தன. குறைவான உயரத்தில் இருந்த ராஜகோபுரம் 5 நிலைகள் கொண்டதாக சுமார் 65 அடி உயரத்திற்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள திருக்குளம்  ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது. இதனைத் தவிர அனைத்து  சந்நிதிகளும் முழுவதுமாக சீரமைக்கப்பட்டு பளிச்சிடும் வண்ணப்பூச்சுகள் செய்யப்பட்டன.

மேலும் சந்நிதிகளை சுற்றி வரும் பகுதிகளில் கிரானைட் கற்கள் மூலம் நடை பாதைகள் அமைக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக ரூ.4 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலை 6 மணிக்கு ராஜகோபுரம், இதர சந்நிதிகளில் அமைக்கப்பட்டுள்ள கோபுர கலசங்களில் குடமுழுக்கு நடைபெறுவதற்கான பூஜைகள் தொடங்கின. டி.பி.வேதாந்த பட்டாச்சாரியார்,  கே. வெங்கட்ராமன் பட்டாச்சாரியார், ரவி பட்டாச்சாரியார் ஆகியோர் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு குடமுழுக்கு செய்தனர்.

சரியாக 7.25  மணிக்கு புனித நீர் கலசங்களில் ஊற்றப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது சிறப்பு இயந்திரங்கள் மூலம் தெளிக்கப்பட்டது.

முன்னதாக பிரம்மாண்ட வடிவிலான யாகசாலை அமைக்கப் பட்டு 32 குண்டங்களில் 22 கலச கும்பங்கள் வைத்து பூஜைகள் நடைபெற்று வந்தன.ஆமை, யானை, நாகம், ஆதிசேஷன், தாமரை வடிவில் பெருமாள் கலசம் அமைந்திருக்கும் படியாக யாகசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. பின்னர் உக்த ஹோமம், கோ பூஜ, வாஸ்து பூஜை, பஞ்சகவ்ய ஜனாதி வாசம் உள்ளிட்ட பூஜைகள் நிறைவு பெற்றன.

திருக்குடமுழுக்கு விழா நிகழ்ச்சியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அன்னதானம், மோர் பந்தல் குளிர்பானம் வழங்குதல் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு,  சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் தொழிலதிபர் ஜி. வரதராஜன், என்.துரைராஜ், மதியழகன், மாமன்ற உறுப்பினர் கவிகணேசன், திமுக வட்ட செயலாளர் வீ.சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top