Close
நவம்பர் 22, 2024 1:33 மணி

ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போலவே கள் இறக்கும் போராட்டமும் வெற்றி பெறும்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பேட்டியளித்த விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் செ. நல்லசாமி

அரசியல் சாசனப்படி உணவு தேடும் உரிமையின் கீழ் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி வெற்றி கண்டதோ அதைப்போலவே, கள் இறக்கும் போராட்டமும் வெற்றி பெறும் என்றார் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் செ. நல்லசாமி.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர் களிடம்  மேலும் கூறியதாவது:கள்ளுக்கு தடையும் இருக்கக் கூடாது, கள்ளுக்கு கடையும் இருக்கக் கூடாது. வீடுகளில் இறக்கி அருந்தவும், விவசாயிகள் இறக்கி விற்கவும் அனுமதிக்க வேண்டும்.
கலப்படம் வந்துவிடும் என்பதால்தான் தடை விதித்திருக் கிறோம் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்வார்கள் என்றால், பிற மாநிலங்களில், பிற நாடுகளில் கலப்படம் தடுக்கப்படவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
காவிரி நதிநீர்ப் பங்கீட்டைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்தான் தவறு இருக்கிறது. நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வதில் மாதந்தோறும் கணக்கிடுவது தவறு. ஒவ்வொரு நாளும் காவிரியில் கிடைக்கும் தண்ணீரை, தமிழ்நாட்டுக்கான அளவைத் திறந்துவிட வேண்டும்.
ஒவ்வொரு நாளும் நம்முடைய பங்கு நமக்கு வந்து அணையில் இருந்தால், அணையில் தண்ணீர் இருப்பதைக் கவனத்தில் கொண்டு இங்குள்ள விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொள்வார்கள். அதேபோல, அங்குள்ள அணைகளில் தண்ணீர் இருப்பைக் கவனத்தில் கொண்டு அங்குள்ள விவசாயிகள் விவசாயப் பணிகளைப் பார்ப்பார்கள்.
தண்ணீரைத் தேக்கி வைத்த பிறகு, பங்கைக் கொடு எனக் கேட்டால் அவர்களுக்கு கொடுக்க மனம் வராது. எனவே, தீர்ப்பில்தான் தவறு இருக்கிறது. ஆனால், அந்தத் தீர்ப்பையும் 10 ஆண்டுகளுக்கு திருத்தவும் முடியாது. கர்நாடகத்தின் வடிகாலாகத்தான் தமிழ்நாடு இருக்கும். நீதிமன்றத் தீர்ப்பு கானல் நீர், ஏட்டுச் சுரைக்காய்.
அதேநேரத்தில் என்ன செய்யலாம் என்பது குறித்து கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகிறார்கள். இங்கே தமிழ்நாட்டில் அப்படி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி கருத்து கேட்பதில்லை. ஒவ்வொரு தேர்தலுக்கும் எப்படி ஆட்சியைப் பிடிப்பது என்பதைத்தான் பார்க்கிறார்களே தவிர, வேறு எதையும் அரசியல்வாதிகள் சிந்திப்பதில்லை என்றார் நல்லசாமி. பேட்டியின்போது, இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் ஜி.எஸ். தனபதி உடனிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top