Close
நவம்பர் 22, 2024 1:06 மணி

த ஹண்ட் ஃபார் வீரப்பன்… திரைப்பார்வை..

அயலகத்தமிழர்கள்

தி ஹண்ட் பார் த வீரப்பன்.. வெப் சீரியல் திரைப்பார்வை

த ஹண்ட் ஃபார் வீரப்பன்… நான்கு அத்தியாயங்களை கொண்ட இந்த ஆவணத் தொடர், ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. நான்கு வருடங்களாக எடுக்கப்பட்ட இந்த தொடர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

படக்குழுவினரை பாராட்டியாக வேண்டும். ஏராளமான தகவல்களுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பயங்கரமான, இரக்கமற்ற கும்பல் பல தசாப்தங்களாக வனத்தையும் அதன் சுற்றியுள்ள பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, இரண்டு மாநில அரசுகளுக்கும் தண்ணி காட்டிக்கொண்டிருந்த சாகச கதையை திரையில் காண்கிற போது, ஒரு பயங்கரத்தில், பரபரப்பில் நம் உள் மனது உறைந்து தான் போகிறது.
சுமார் 200 நிமிடங்களை இந்த தொடரை பார்ப்பதற்கு, நேர செலவு செய்வதென்பது பயனுள்ளது என்பேன்.

வீரப்பனுக்கான வேட்டையில், வீரப்பனை பெருமைப்படுத்தும் விதமாகவோ, அவன் செய்த குற்றங்களை நியாயப்படுத்த வோ முயலாமல், இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இந்த படைப்பில் உள்ளது உள்ளபடியே கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்.

உள்ளார்ந்த ஈடுபாடு கொண்ட ஒரு நிஜக்கதைக்குபொருத் தமான தருணங்களை கொண்டிருந்தாலும், தொடர்முழுவ துக்குமான விஷயத்தைப் பற்றிய ஒரு நுணுக்கமான பார்வையாக பற்றாக்குறையாக பட்டாலும், அது பக்கச் சார்பற்றதாகவும், குறிக்கோளோடும் இருக்க முயற்சிக்கிறது. கதையுடன் இணைக்கப்பட்ட கிட்டத்தட்ட எல்லா உண்மை களையும் அடுக்கி, அவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சி பாராட்டுதலுக்குரியது.

இந்த ஆவணப்படம் வீரப்பனின் சட்டத்திற்கு புறம்பான சுரண்டல்களை அம்பலப்படுத்துவதற்கு அப்பால் சென்று, சட்ட அமலாக்க தந்திரோபாயங்கள், சமூக பதட்டங்கள் மற்றும் குற்றச் செயல்களுக்கும் நீதிக்கான தேடலுக்கும் இடையிலான நுட்பமான சமநிலையை பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தும் ஒரு கண்ணாடியாக செயல்படுகிறது.

இந்தத் தொடர் வீரப்பனின் வாழ்க்கையைத் தாண்டி பல்வேறு காரணிகள், சட்டம் மற்றும் ஒழுங்கை எவ்வாறு பாதிக்கின் றன என்பதை வெளிப்படுத்துகிறது.

சமூகம் குற்றவாளிகளை பழிவாங்க முற்படும்போது ஏற்படும் பெரிய விளைவுகள் மற்றும் நெறிமுறை கேள்விகள் பற்றி சிந்திக்க வைக்கும் இயக்குனரின் திறமையான நெறியாள்கை நம்மை வியக்க வைக்கிறது.

மனிதகுலத்தின் கொடூரமான அம்சங்களையும், குற்றத்திற்கும் நீதிக்கும் இடையே நடந்து வரும் போரில் சிக்கலான சவால்கள் இரண்டையும் வெளிப்படுத்துகிற தருணங்களில் கதைசொல்லலின் வலிமை தெரிகிறது.

வீரப்பன் ஒரு அச்சுறுத்தும் கடத்தல்காரரன் மட்டுமல்ல. அதிகார வர்க்கத்தினர் மீது, குறிப்பாக காவல்துறை மீது அவனுக்கு இருந்த ஆழமான விரோதம், அவனை ஒரு திகிலூட்டும் நபராக மாற்றியது. தனது கிராமத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர்களுக்கு பயத்தை காட்டி, அரசு அதிகாரிகளிடம் ஒத்துழைக்கத் துணிந்தவர்களை அச்சுறுத்தினான்.

தனக்கு சவால் விடுப்பவர்களிடமிருந்து நரகத்தை காட்டி னான். அது ஏராளமான வன அதிகாரிகள், காவல்துறை பணியாளர்கள் மற்றும் வீரப்பனை பிடிக்க அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சிறப்பு பணிக் குழுவின் உறுப்பினர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது.

வீரப்பனின் பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வருவதற் கான அரசாங்கத்தின் முயற்சிகள் மும்முரமாக தொடர்ந்து நடைபெற்றாலும், வீரப்பன் 2004 -ஆம் ஆண்டு வரை, அவனது வன்முறை மற்றும் குற்றச் செயல்கள் இறுதியாக முடிவுக்கு வரும் வரை, ஒரு தசாப்தத்திற்கு மேலாக நீடித்தது. வீரப்பனின் கதை இந்திய வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமாகும்.

இது பயங்கரவாதம், வனவிலங்கு சுரண்டல் மற்றும் சட்ட அமலாக்கத்திற்கும், சட்டவிரோதத்திற்கும் இடையிலான போராட்டம் ஆகியவற்றின் சிக்கலான கலவையாக வகைப்படுத்தப்படுத்தலாம்.

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது வனக் கொள்ளையர் களின் இருப்பிடத்தைப் பற்றிய தகவல்களைப் பெறுவதில் குறியாக இருந்த வன அதிகாரிகள், எல்லையில் வசிக்கும் பழங்குடியினரை சித்திரவதை செய்தனர் என்பதையும், தமிழகத்திலும் மனித உரிமை மீறல்கள் சகஜம் என்பதையும் நாமறிவோம்.

இந்த தேடுதல் நடவடிக்கையில் அப்பாவி மலைவாழ் மக்கள் பலரும் நாசமாக்கப்பட்டனர். தமிழக வனத்துறையின் வரலாற்றில் கறுப்பு அத்தியாயமாகிப் போன வாச்சத்தி பலாத்கார சம்பவமும் இந்த கால கட்டத்தில் தான் நிகழ்ந்தது.

பாலமுருகனின் சோளகர் தொட்டியில் விவரிக்கப்பட்ட சம்பவங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக உருவான இந்த படைப்பில், துரதிர்ஷ்டவசமாக பழங்குடியினரின் பெருந்துன்பம் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் அவ்வப்போது நேர்காணல்களில் மட்டும் மேம்போக்காக குறிப்பிடப்படுகின்றன.

வீரப்பன் வாழ்ந்த காலகட்டத்தில் பணிபுரிந்த வன அலுவலர்கள், புலனாய்வுப் பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் கர்நாடகா மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகள் என அனைவரிடத்திலும் பேட்டி எடுக்கப்பட் டுள்ளது.

வீரப்பன் கிராமத்தை சேர்ந்த மக்கள் அவர் ராபின் ஹூட் என்றும், ஆயிரம் யானைகளை கொன்ற வீரன் என்றும், காட்டு ராஜா என்றும் புகழ்ந்தாலும், வீரப்பனின் செயல்கள் மற்றும் தேர்ந்தெடுத்த போராட்ட அணுகுமுறை சார்ந்து பல பார்வைகள் இருந்து வந்தன. சிலர் அவன் செய்த செயலுக்கு எதிராகவும், மற்றவர்கள் காவல் துறையை நோக்கிய அவனது செயல்களை நியாயப் படுத்தவும் முயற்சித்தனர்.

இருப்பினும், அவனது செயல்கள் அனைத்தும் பெருமைப் படுத்தும் படியாக இல்லை. மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியது, அதன் பின் ஏற்பட்ட விளைவுகள் மிக ஆழமாக பேசப்பட்டுள்ளன. ராஜ்குமாரை விடுவிக்க தமிழ் மக்களை முன்னிறுத்தி 10 நிபந்தனைகளை வீரப்பன் முன்வைத்ததும், பின்னர் வீரப்பனின் நோக்கத்தில் பணமே பிரதானமாக இருந்ததை கொளத்தூர் மணி தன் பார்வையில் விவரிக்கும் போது நாம் அதிர்ந்து போனோம்.

இந்த ஆவணப்படத்தில் வீரப்பனின் சில மறு வடிவமைக்கப் பட்ட படங்களும் இடம் பெற்றுள்ளன, மிகவும் தெளிவாக உள்ளது, இந்த மாதிரியான குற்றங்களை செய்த நபர், இந்த மனுஷன் தானா என நம்மை ஆச்சரியப்படுத்துகிற விதமாக இருக்கிறது அவரது பிம்பம். வேதனையையும் பயத்தையும் ஏற்படுத்துகிற நிஜ சம்பவமாக உணர்கிற போது, இப்படியான ஒரு நபர் இருந்ததை கற்பனை செய்வது கூட சற்று கடினம்.

தன் மனைவிக்கு வீரப்பன் அனுப்பிய ஒலிநாடாவில் அவர் தன் மனைவி, குழந்தைகளோடு ஒரு முறையாவது காரில் செல்ல வேண்டும் என்று ஆசையை வெளிப்படுத்துவது , சராசரி மனிதனாக வீரப்பன் வாழ விரும்பியதை காட்டுகின்றன.

“அக்கிரமமா எல்லாம் நடந்திருச்சு. யார்தான் என்ன செய்ய முடியும். அவங்களுக்கு ஒரு சட்டம் இருந்தா நம்மளுக்கும் ஒரு சட்டம் இருக்குது!” என்ற வீரப்பனின் நியாய வாதக் குரலோடும், “அந்த ஆகாய வாணிக்கும், கடவுளுக்கும் நான் கும்புடுற காட்டுத் தேவர்களுக்கும் உண்மை தெரியும். எனக்கு ஒரு பாவமும் தெரியாது!” என்ற வீரப்பனின் பரிதாபக் குரலோடும் இறுதி அத்தியாயம் முடியும்போது வீரப்பன் செய்ததை நியாயப்படுத்தி, நாயகனாக்கி அவனது வாழ்க்கையைக் கொண்டாடும் ஒரு படைப்பாக மாறிவிட்ட தோ என்று நினைக்கத் தோன்றலாம். அது அல்ல.

மெலிந்த தேகம். படிப்பறிவில்லை. கூச்ச சுபாவம். காடுகளில் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், பிற்காலத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 18 ஆயிரம் சதுர கிலோமீட்டர் காடுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்து, வனத்துறை, அதிரடிப்படை மற்றும் காவல் துறையினர் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டி ருந்தான் என்றால் நமது நிர்வாக சீர்கேடு, ஊழல் தான் முதற்காரணம்.

பிழைக்க வழி தேடிய போது , சந்தன மரங்களை வெட்டி தங்களிடம் ஒப்படைத்தால் செலவுக்குப் பணம் கிடைக்கும் என வனத்துறையினரால் வழிகாட்டப்பட்ட வீரப்பன், அவர்களை மீறி தனியாக செயல்பட்டதால் அதுவரை நண்பனாக இருந்தவன் காவல் துறை, மற்றும் வனத் துறையின் சில கறுப்பு ஆடுகளுக்கு எதிரியாகிப் போனது நிஜம்.

ஆனால் இத்துடன் நில்லாமல் மிகப்பெரிய குழுவைச் சேர்த்துக் கொண்டு, தந்தங்களுக்காக ஆயிரக்கணக்கான யானைகளை வேட்டையாடியும் , பணத்துக்காக ஆட்களைக் கடத்தியும், தேடிய காவல், மற்றும் வனத்துறையினரைப் படுகொலை செய்தும், உளவு சொன்னதாக சந்தேகப்படும் நபர்களை இரக்கமின்றி கொன்றும், தனது குற்றங்களை வானளாவ ஆக்கிக் கொண்டதும் உண்மை.

சில கறுப்பு ஆடுகள் வளர்த்து விட்ட காட்டுப்புலி மாய்ந்து விட்டது.., அதன் ஆட்டம் ஓய்ந்துவிட்டது. ஆனால் பல கறுப்பு ஆடுகள் உயிருடன் நடமாடிக் கொண்டு தான் இருக்கிறது.

முழுக் கதையின் ஒற்றை மையப்புள்ளியாக வலியுறுத்தப் படுவது, மீண்டும் ஒரு வீரப்பன் உருவாகிவிட கூடாது என்கிற எண்ணத்தை தான்.

#இங்கிலாந்திலிருந்து  சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top