Close
செப்டம்பர் 20, 2024 3:46 காலை

யோகியின் காலில் ரஜினி விழுந்தது வருத்தம் அளிக்கிறது : ஈ. வி. கே. எஸ். இளங்கோவன்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ். இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ  ஈவிகேஎஸ் ,இளங்கோவன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரை நடக்காத மிகப்பெரிய ஊழலை மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்துள்ளது.ஆட்சிப் பொறுப்பேற்ற பின் இந்த 9 ஆண்டுகளில் சாலை போடும் பணிகளுக்காக மட்டும் ரூ. 3 லட்சம் கோடி லஞ்சமாக பெற்றுள்ளது.

அது மட்டுமல்ல, சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்கம் வசூலித்த வகையில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. 88 ஆயிரம் பேரின் பெயர்களை பயன்படுத்தி காப்பீடு திட்டம் என்ற பெயரால் பெரும் பண மோசடி நடைபெற்றுள்ளது.

விரைவில் இதற்கெல்லாம் பதில் சொல்லக்கூடிய காலம் வரும். பிரதமர் மோடி சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெறுவார். உச்சநீதிமன்ற நீதிபதிகள், தாங்களாக முன்வந்து மோடியின் அரசு மீது வழக்கு தொடர வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள் ஏனென்றால் மத்திய தணிக்கை குழு இது குறித்து மிக விவரமாக தனது தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழகத்திற்கு “கலெக்டராக” (ஆளுநராக) நியமிக்கப் பட்டுள்ள ரவி என்பவர்  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்லாட்சி வழங்கி வரும் ஸ்டாலினுக்கு தேவையில்லாத இடைஞ்சலை ஏற்படுத்தி வருகிறார்.

திமுகவில் உள்ள நிர்வாகிகள் உணர்ச்சி பிழம்பு போன்ற வர்கள்.  அவர்கள் முதல்வர் ஸ்டாலினின் சொல்லுக்கு கட்டுப்பட்டு பொறுமையாக இருந்து வருகிறார்கள்.ஆளுநரின் இத்தகைய ஜனநாயக விரோத போக்கு தொடரும் பட்சத்தில் அவருக்கு  தமிழக மக்களே வெகுண்டு எழுந்து போராட வேண்டிய  சூழ்நிலை ஏற்படும்.

தமிழக மக்களைப் பற்றி ஆளுநர் பலகீனமாக நினைத்துக் கொள்ளக் கூடாது. தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இல்லை என்றால்  வேறு மாதிரியான சூழ்நிலை உருவாகும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையத்தின்(TNPSC) தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் எடுத்திருப்பது மிக நல்ல முடிவு ஆகும். ஆனால் அதற்கு தடையாக ரவி இருந்து வருகிறார். அவர் மீது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய அளவில் கோபம் இருக்கிறது.

தமிழர்களை கேவலமாகவும் அவர்களை என்ன வேண்டுமா னாலும் செய்யலாம் என்ற மனோபாவத்திலும் ஆளுநர் இருக்கிறார். கண்டிப்பாக இதற்கு ஒரு முடிவு வரும். சைலேந்திரபாபு ஒரு நல்ல அதிகாரியாகதான் இருந்திருக் கிறார் அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை.

காவிரி நீர் பிரச்னையில் கர்நாடகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டதை போல தமிழகத்திலும் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தை நடத்துவார் என்று நான் நம்புகிறேன்.ஏனென்றால் எந்த ஒரு பிரச்னை என்றாலும் கூட்டணி கட்சியோடு கலந்து ஆலோசித்து முடிவை எடுக்கும் நல்ல பழக்கத்தை ஸ்டாலின் வைத்திருக்கிறார்.

கர்நாடகாவில் இருந்து ஏற்கனவே 15,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தில் மழை அதிகமாக பெய்தால் கூடுதலாக தண்ணீர் திறப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அண்ணாமலையை பொறுத்த வரை வாயை திறந்தால் பொய்யை தவிர வேற எதுவும் வருவதில்லை. அண்ணாமலை மேற்கொண்டிருப்பது நடைபயணம் அல்ல; பஸ் பயணம். அவர் கூறும் கருத்துகளுக்கு எல்லாம் முக்கியத்துவம் தரத் தேவையில்லை.

ரஜினி மீது எனக்கு எப்போதும் நல்ல அபிப்பிராயம் உண்டு. அவர் மலைக்கு செல்வதும் சுவாமியை தரிசனம் செய்வதும் அவரது ஆன்மீகப் பயணத்தின் ஒரு பகுதி தான். ஆனால் எனக்கு ஒன்று மட்டும் ஆச்சரியமாக உள்ளது.

காவி உடை அணிந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் அவர் விழுந்தது தான் ஆச்சரியமாக உள்ளது. நான் மத்திய அமைச்சராக இருந்தபோது யோகி ஆதித்யநாத் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

அப்போது அவர் மீது 7 கொலை வழக்குகள் இருந்தன. அப்படிப்பட்ட ஒரு கிரிமினல் காலில் ரஜினியைப் போன்று எல்லா மக்களாலும் விரும்பப்படும் ஒருவர் காலில் விழுந்தது தான் மன வருத்தமாக உள்ளது.

எடப்பாடி புரட்சித் தமிழரா?  ஈவிகேஎஸ். இளங்கோவன்  புது விளக்கம்

ஈரோடு

மதுரையில் அதிமுக நடத்தியதை நான் மாநாடு என்றே சொல்ல மாட்டேன். என்னை பொறுத்த வரை அது ஒரு புளியோதரை மாநாடு என்றுதான் கூறுவேன்.ஏனென்றால் அந்த மாநாட்டில் 15 லட்சம் பேர் கூடியதாக கூறுகிறார்கள்.

ஆனால் இது அப்பட்டமான பொய். மீறி போனால் ஐம்பதாயிரம் பேர் அந்த மாநாட்டில் பங்கேற்றிருப்பார்கள். ஆனால் 15 லட்சம் பேர் பங்கேற்றதாக கூறுவது மக்களின் காதில் பூ சுற்றுவது ஆகும்.

அந்த மாநாடு 5 மணி நேரம் கூட நடந்ததாக தெரியவில்லை. ஏனென்றால் அதில் பல கலை நிகழ்ச்சிகள்தான் நடைபெற்றன. நாள் பூராவும் கலை நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்திய அவர்கள் உருப்படியாக மாநாட்டில் எதையும் செய்ததாக தெரியவில்லை.

நீட் தேர்வை காங்கிரஸ் தான் கொண்டு வந்தது என்று கூறுகிறார்கள்; ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதில் ஒரு முக்கியமான சாராம்சம் உள்ளது. நீட் தேர்வை விரும்பாத மாநிலங்கள் அதை அமல்படுத்த தேவையில்லை என்ற ஷரத்து அதில் இருந்தது.

ஆனால் இப்போது பாஜகவால் அமல்படுத்தப்பட்ட நீட் தேர்வை எல்லா மாநிலங்களும் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று அடாவடியாக கூறுகிறார்கள்.அதுதான் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் பட்டத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்த பட்டத்தை ஏற்கெனவே எனது நண்பர் சத்யராஜுக்கு வழங்கப்பட்டு விட்டது.சத்யராஜை புரட்சி தமிழர் என்று சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஏனென்றால், அவரை பொருத்தவரையிலும் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு சுயமரியாதையும் தன்மானமும் மிக்கவராக அவர் இருக்கிறார். டேபிளுக்கு அடியில் சென்று யார் காலிலும் விழாதவர் என்ற காரணத்தால் சத்யராஜுக்கு தான் புரட்சித்தமிழர் என்ற பட்டம் பொருத்தமாக உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவராக யாரை நியமிப்பது என்பதை பொதுச் செயலாளர் கார்கேயும் சோனியாவும் ராகுல் காந்தியும் தான் முடிவு செய்வார்கள். என்னை பொருத்தவரை நான் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்று கருதுபவன். எனவே எனக்கு அந்த பதவி மீது ஆசை இல்லை என்றார் ஈவிகேஎஸ். இளங்கோவன்.

பேட்டியின் போது மாநகர மாவட்ட பொறுப்பாளர் திருச் செல்வம், மாநகர கவுன்சிலர் ஈ.பி.ரவி, ஜாபர் சாதிக், ராஜேஷ் ராஜப்பா, பாட்ஷா  உடன் இருந்தனர்.

செய்தி: மு.ப. நாராயணசுவாமி – ஈரோடு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top