Close
நவம்பர் 22, 2024 9:42 காலை

கடனில் மூழ்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் (டான்ஜெட்கோ) பகிர்மான கழகம்

தமிழ்நாடு

கடனில் மூழ்கும் மின்சாரத்துறை

டான்ஜெட்கோவின் கடன் சுமை ரூ. 1 லட்சத்து 59 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. புதிய மின் திட்டங்களை அமல்படுத்தாததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் (டான்ஜெட்கோ) தொடர்ந்து தனியாரிடம் இருந்து மின்சாரத்தை வாங்கி மின் நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்வதால் அதன் கடன் சுமை ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (டான்ஜெட்கோ) மூலமாக தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 15,000 மெகாவாட் மின்சாரம் மின் நுகர்வோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கோடை காலத்தில்  ஏ.சி. போன்றவற்றின் பயன்பாடு அதிகரிப்பால் இந்த ஆண்டில் அதிகபட்சமாக ஏப். 20ஆம் தேதி 19,437 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. தற்போதைய நிலையில் குந்தா, பைகாரா போன்ற நீர்மின் திட்டங்களின் மூலமாகவும், மேட்டூர், வடசென்னை அனல்மின் நிலையங்கள் மூலமாகவும், கதவணை நீர்மின் திட்டங்களின் மூலமாகவும் 8,000 மெகாவாட்டுக்கும் குறைவாகவே டான்ஜெட்கோ மூலம் மின் உற்பத்தி ஆகிறது.

மீதமுள்ள பற்றாக்குறை மின்சாரத்தை தனியார் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும், சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும் டான்ஜெட்கோ அதிகவிலை கொடுத்து கொள்முதல் செய்து மின்நுகர் வோருக்கு மின் விநியோகம் செய்து வருகிறது.

அந்த வகையில் நாளொன்றுக்கு 6500 மெகாவாட்  வரையிலும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து டான்ஜெட் கோ கொள்முதல் செய்து விநியோகித்து வருகிறது. இதற்காக செலவிடும் தொகை ஆண்டுதோறும் அதிகரிப்பதால் டான்ஜெட்கோவின் கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடன் சுமை அதிகரிப்பதற்கான காரணம் என்ன..
2014 -இல் எண்ணூர் அனல்மின் நிலையம் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். அதன் பின் 2022 வரையிலும் அந்தப்பணிகள் செய்யாமல் காலதாமதம் செய்து வந்த நிலையில் அந்த பணிகளை செய்து வந்த ஒப்பந்த நிறுவனத்துக்கு மின்வாரியம் நோட்டீஸ் வழங்கி தற்போது பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இதுபோன்று அரசால் அறிவிக்கப்பட்ட பல அனல் மின் திட்டங்களும்  நீர்மின் திட்டங்களின் பணிகளையும் கிடப்பில் போடப்பட்டதால் புதிய மின் உற்பத்தி அலகுகள் தொடங்காமல் தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்யும் நிலைக்கு டான்ஜெட்கோ தள்ளப்பட்டது.

கடந்த 9 ஆண்டுக்கும் மேலாக மின் உற்பத்தி திட்டங்கள் எதையும் செயல்படுத்தாததால் தொடர்ந்து தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்து மின் நுகர்வோ ருக்கு விநியோகிப்பதால் தான் டான்ஜெட்கோவின் கடன் சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் தமிழகம் முழுவதும் காற்றாலைகள் மூலம் நாளொன்றுக்கு 10,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஒரு யூனிட் மின்சாரம் கூட  டான்ஜெட்கோ மூலம் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதேபோல சூரிய சக்தி மின் உற்பத்தி செய்வதற்கான திட்டம் எதுவும் டான்ஜெட்கோவிடம் இல்லை.

இதன் காரணமாக கிடைக்கும் மொத்த வருவாயில் 80 % தொகையை தனியாரிடம் கொள்முதல் செய்யும் மின்சாரத்துக்கு தர வேண்டிய நிலை ஏற்படுகிறது. மீதமுள்ள 20 % தொகையை வைத்து தான் ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதுபோன்ற காரணங்களால் டான்ஜெட்கோவின் கடன் சுமை 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து விட்டது. இதேநிலை நீடித்தால் கடன்சுமை அதிகரித்து டான்ஜெட்கோ மூழ்கும் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் எச்சரிக்கின்றனர்.

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் கடன்சுமை !!
டான்ஜெட்கோ, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கடந்த 2021 மார்ச் வரை ரூ. 47,000 கோடிக்கு மின்சாரம் கொள்முதல் செய்திருந்த நிலையில் 2022ல்  ரூ.49,000 கோடியாக அதிகரித்து விட்டது.

2023 -க்கான கணக்கீடு செப்டம்பர் இறுதியில் தான் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இம்முறை ரூ.52,000 கோடியை தாண்டும் என மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தளவிற்கு தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான காரணம் குறித்து மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், டான்ஜெட்கோ மூலம் கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் வடசென்னை அனல் மின் நிலையத்தின் இரண்டாம் அலகில் 600 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்வதற்கான திட்டம் தொடங்கப்பட்டது.

அதற்கு பின் கடந்த 9 ஆண்டுகளில் ஒரு மின் உற்பத்திக்கான அலகு கூட தொடங்கப்படவில்லை. ஆண்டுதோறும் மின் உற்பத்தி நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஈடாக மின் உற்பத்தி அலகை தொடங்கு வதற்கு அரசு எந்த முன்னெடுப்பு நடவடிக்கை களையும் மேற்கொள்ளவில்லை என்பதே கசப்பான உண்மை.

பற்றாக்குறை மின்சாரத்தை தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யும்போது அன்றைய தினத்தில் தனியாரால் நிர்ணயிக் கப்படும் விலையை கொடுத்து தான் கொள்முதல் செய்யும் கட்டாயத்துக்கு  டான்ஜெட்கோ தள்ளப்படுகிறது.

பெரும்பாலான தனியார் மின்உற்பத்தி நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவைதான் என்றாலும், கோடை காலங்களில் அதிகரிக்கும் மின்தேவையை ஈடுகட்ட குறுகிய கால மின் கொள்முதல் என்ற பெயரில் கூடுதல் விலையை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

மின் தேவை அதிகரித்த போதிலும், மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்களைத் தொடங்க டான்ஜெட்கோ முன்வருவதில்லை. மாறாக, தனியாரிடம் இருந்து கூடுதல் விலையை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதற்கே முன்னுரிமை தருகிறார்கள்.

இதன் காரணமாக ஆண்டுதோறும் மின்வாரியத்தின் நஷ்ட கணக்கு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டுவதால் டான்ஜெட்கோ தடுமாறும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமானால் புதிய மின் உற்பத்தி திட்டங்களை அரசு உருவாக்கி, தனியாரிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்வதை டான்ஜெட்கோ கைவிட வேண்டும் என்கின்றனர் தொழில் சங்க நிர்வாகிகள்.
கடனில் தத்தளிக்கும் டான்ஜெட்கோவை கைதூக்கி விட தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்…

#செய்தி: ஈரோடு மு.ப.நாராயணசுவாமி#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top