கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்கக்கோரி ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னையில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.
மாநில தலைமை கூட்டுறவு வங்கி,மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்,வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனைத்து கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு கடந்த 25 ஆண்டு காலமாக கருணை ஓய்வூதியம் வழங்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்குவதில் மாநில அரசுக்கு எந்தவித நிதி இழப்பும் கிடையாது, அந்தந்த வங்கிகளின் லாபத்தில் கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக தர்ணா போராட்டம் இன்று தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவு நகர வங்கி ஊழியர் சம்மௌன துணைத் தலைவர் ஆர்.கோவிந்தன் தலைமை வகித்தார். ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் போராட்டத்தை. தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
கோரிக்கைகள்: நகர கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்றோர்களுக்கு ஓய்வுதியம் வழங்க அமைக்கப்பட்ட குழு பரிந்துரைகளின்படி, கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
அனைத்து தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தாமதமின்றி உடனே பேசி ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். வங்கி வாடிக்கையாளர்களுக்கு நவீன சேவைகளை வழங்கிடும் வகையில் மென்பொருளை மேம்படுத்த வேண்டும்.
நிறுத்தி வைத்துள்ள உரிமை விடுப்பில் ஆண்டுதோறும் பணமாக்கும் சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் அதிகாரிகள், அலுவலகப் பணியா ளர்கள் உள்ளிட்டு காலியாக உள்ள பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
பணியாற்றும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வு பெற்றுள்ள கூட்டுறவு வங்கி ஊழியர்களுடைய ஓய்வு கால பணப்பலன்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
காசோலை, வங்கிகளில் பணம் போடுதல், எடுத்தல் உள்ளிட்ட கூட்டுறவு வங்கி பரிவர்த்தனைகளுக்கு பிடித்தம் செய்யப் படும் டிடிஎஸ் வரிகள் நிறுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் க.அன்பழகன் போராட்டத்தை முடித்து வைத்து பேசுகையில், கூட்டுறவு வங்கி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான கருணை ஓய்வூதியம் வழங்குவது.
ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை உடனடியாக பேசி முடிப்பது, காலி பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளில் தீர்வு காணப்படாவிட்டால் வருகிற ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநிலம் தழுவிய தர்னா போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.