Close
செப்டம்பர் 20, 2024 4:22 காலை

புத்தகம் அறிவோம்… நவகாளி யாத்திரை..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

மணிப்பூர் நிலவரத்தில் திக்கு திசை தெரியாமல் இருக்கும் நம் பிரதமருக்கு வாசிக்க இந்த நூலை அனுப்ப இயலாது என்பதால் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

“இது ஏது, இந்த நாய்?” “நவகாளி ஜில்லாவிலுள்ள நோவாகாலா என்ற ஒரு சிறு கிராமத்தில் பெரிய இந்துக் குடும்பம் ஒன்று இருந்தது. ஆண் பெண் அடங்கலாக ஒன்பது பேர்.அந்த ஒன்பது பேரும் வெறிகொண்ட காலிக் கூட்டத்தினரின் வாளுக்குப் பலியாகிக் கூண்டோடு கைலாசமாக எமலோகத்திற்கு அனுப்பப்பட்டார்கள். அந்த குடும்பத்தைச் சேர்ந்த நாய் தான் இது.”

“காந்திஜி மேற்படி கிராமத்திற்கு போயிருந்த சமயம் இந்த நாய் அவரைப் பார்த்து விட்டு ஓடி வந்து அவரைச் சுற்றி சுற்றி வந்தது. பிறகு தன்னுடைய குடும்பத்தார் வெட்டிப் புதைக்கப் பட்டிருந்த இடத்திற்கு மகாத்மாஜியை அழைத்துச் சென்றது. அங்கே சென்றதும் புதைக்கப்பட்ட இடத்தை மோப்பம் பிடித்துப் பிடித்துக் காட்டியது.

காந்திஜி மேற்படி நாயின் நன்றி விசுவாசத்தையும். எஜமான பக்தியையும் அபூர்வ அறிவையும் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனார். அன்று முதல் இந்த நாய் மகாத்மாஜி செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.பக்.26-28.

இன்றைய மணிப்பூர் அன்றைய வங்காளத்திலிருந்த நவகாளியை கொஞ்சம் நினைவூட்டுகிறது.நவகாளி, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட கலவரத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம். காலத்தால் மறக்கமுடியாத ஒரு பெயர் நவகாளி. இந்தியா, சுதந்திரக் கொண்டாட்டத்தில் இருந்தபோது மகாத்மா காந்தி, இரத்த ஆறு ஓடிக்கொண்டி ருந்த நவகாளியில் அமைதியை நிலைநாட்டஅச்சமின்றி
“வெறும் காலுடன்”நடந்து கொண்டிருந்தார்.அந்த நடையை, நேரில் பார்த்து, இரண்டு நாட்கள் உடன் பயணித்து, கல்கியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் ” நவகாளி யாத்திரை”.
இதில் உள்ளதுதான் மேலே கண்ட செய்தி.

இன்று விலை உயர்ந்த காலணி அணிந்து கொண்டு நல்ல சாலையில் நடக்கும் நடையல்ல அது. முள்ளும் கல்லும் நிறைந்த பாதையில், வயல் வரப்பில் புண்பட்ட காலோடு சமய ஒற்றுமைக்காக, தேசத்தின் அமைதிக்காக நடந்த நடை அது.

இந்த கட்டுரைகள் நூலாக 1948 ல் வந்த போது காந்திஉயிருடன் இல்லை. அதை இந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய கல்கி மிகவும் துயரத்துடன் எழுதியிருக்கிறார்.நவகாளியில் கோரச் சம்பவங்கள் நடந்த இடங்களிற்குச் சென்று பார்த்து கலங்கி நின்ற காந்திஜியை நம் கண்முன்னே கொண்டு வருகிறது சாவியின் எழுத்துகள்.

மதக்குருமார்களை காணும்போதும்,மகான்களை தரிசிக்கும் போதும் மட்டுமே, இஸ்லாமிய பெண்கள் மரியாதையாக” லூலூ ” என்று குரல் எழுப்புவதை ,காந்தி யின் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்த இஸ்லாமிய பெண்கள் காந்தியைப் பார்த்து அதேபோன்று குரல் எழுப்பியதை, காந்தியை தங்கள் இஸ்லாமிய மகான்களுக்கு இணையாக போற்றியதை உணர்வு பொங்க எழுதியுள்ளார் சாவி.

இதேபோல பல சம்பவங்களை சுவையாகவும், துயரத்துடனும் சமயங்களில் நகைச்சுவையோடும்சித்திரமாக்கியிருக்கினார் சாவி. இறுதியாக, காந்தியை தரிசிக்க போனது போது நடந்த உரையாடலை எழுதுகிறார் சாவி..

“சென்னையிலிருந்து கல்கி பத்திரிக்கையின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். தங்களுடன் சுற்றுப்பயணம் செய்து தென்னிந்தியாவிற்கு செய்தி அனுப்பப்போகிறேன். தங்கள் உத்தரவு வேண்டும்” “உனக்கு ஹிந்தி தெரியுமா?” “தெரியாது” “வங்காளி தெரியுமா?”” தெரியாது””சென்னையிலிருந்து வர எவ்வளவு செலவாயிற்று?” “முந்நூறு ரூபாய்””வீண் தண்டம்; அந்தப்பணத்தை ஹரிசன நிதிக்கு கொடுத்திருக்கலாமே. சரி நாளை மறுதினம் போய்விட வேண்டும். என்ன?””அப்படியே “

இரண்டே தினங்கள் தான் மகாத்மாவுடன் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு தினங்களுக்குள் நான் அடைந்த அனுபவங்கள் என் வாழ்நாளில் எப்போது கிட்டும்.சந்தியா பதிப்பகம்-சென்னை.

# சா.விஸ்வநாதன்-வாசகர் பேரவை-புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top