Close
நவம்பர் 22, 2024 7:30 காலை

புத்தகம் அறிவோம்.. இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும்

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

“நல்ல மனிதன் விதைத்த விதை நல்ல பலனைத் தருகிறது. நல்ல மனிதன் அளக்கும் தானியங்கள் பன்மடங்காகப் பெருகுகின்றன. சக்தியைக் கட்டுப்படுத்த இறையுணர்வு அவசியமாகவுள்ளது. நல்லொழுக்க நெறியிலிருந்து விலகிய புனிதத்துறவிகள் கூட தங்கள் சக்தியை இழக்கின்றனர்.

மாயவித்தைகளையும், மந்திர தந்திர வேலைகளையும் செய்யும் மந்திரவாதிகள் தீய வழியில் வாழ்ந்தால் அவர்கள் மந்திர சக்தியும் வசிய சக்தியும் பயனற்றுப் போகின்றன. ஒரு புனிதத் துறவியிடமிருந்து குணப்படுத்தும் மந்திர சக்தியைப் பெற்ற குடும்பங்கள், பல மாவட்டங்களில் செல்வாக்குப் பெற்றிருந்தன. நெறியற்ற வாழ்க்கையினால் நாளடைவில் இவர்கள் தங்கள் சக்தியை இழந்தனர்.”‘இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும்’ தொகுதி-1. பக்.21.

இந்தியர்களைவிட இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டவர்கள் தான் இந்திய சமூகத்தை உன்னிப்பாகக் கவனித்துப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்திய சமயம், மக்கள், வழிபாடு, நம்பிக்கைகள், உறவுகள் என்று ஒவ்வொன்றாகக் கூர்ந்து பார்த்து, கேட்டு ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

நாம் நம் சமூகத்தைப் பற்றி அறிய அவர்களின் நூல்கள்தான் முன்னோடி. அந்தவகையில் ஜெ.அப்பாட்(J.Abbot) எழுதிய இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (Indian Ritual and Belief ) ஒரு முன்னோடி நூல். இந்த ஆங்கில நூல் தமிழில் சரவணன் என்பவரால் மூலநூல் போல அழகாக இரண்டு தொகுதிகளாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

முதல் தொகுதியில்.. வாழ்க்கையும் சக்தியும்,மனிதனின் சக்தி,பெண்ணின் சக்தி,கண்ணேறுபடுதலின் சக்தி,பூமியின் சக்தி,தண்ணீரின் சக்திஎன்று 6 பகுதிகளில் இவற்றின் நம்பிக்கை கள், சடங்குகள் யாவும் விளக்கப்பட் டுள்ளது. உதாரணத்திற்கு எச்சில்.” எச்சிலைத் துப்புவதன் மூலம் ஒரு மனிதன் தன் விருப்பங் களை அவை நல்லவைகளாயி ருந்தாலும் தீயவைகளா யிருந்தாலும் மற்றொருவருக்கு மாற்ற இயலும்” பக்.61.

இரண்டாம் தொகுதியில்.. தீயின் சக்தி,உலோகங்களின் சக்தி,உப்பின் சக்தி,கற்களின் சக்தி,காலத்தின் சக்தி ,நிறங்களின் சக்தி,எண்களின் சக்தி,இனிப்பான பொருள்களின் சக்தி,மரங்களின் சக்தி,கால நிலைஎன்று 10 தலைப்புகளில் மனிதனின் சடங்குகளும் நம்பிக்கைகளும் விவரிக்கப்பட்டுள்ளன.

“பூப்பெய்தும் பெண் தீயைத் தொடக்கூடாது. அவள் விளக்கேற்றவும் கூடாது. இத்தகைய தடை இந்துக்களாலும் முகமதியர்களாலும் நடைமுறைபடுத்தப்படுகிறது. அவளை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் அறை அடுக்களைக்கு அருகில் இருக்கக் கூடாது.” பக்.15.

“நற்பலன்களைப் பெற சில கசப்பான பொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன. வேப்பிலை கசப்பாக இருந்தாலும் மரணம் தொற்றிக்கொள்வதைத் தடுக்குமென்ற நம்பிக்கையில் பல சாதியினரும் இதைப் பயன்படுத்துகின் றனர் “. பக்.231. இந்த நூலை ஒரு நாவல் போல வாசிக்கலாம். நம் சடங்கு சம்பிரதாயங்கள் அவ்வளவு சுவாரஸ்யமானது. வெளியீடு: சந்தியா பதிப்பகம், 044-24896979.

# சா. விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top