புதுக்கோட்டை மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் சார்பில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் (23.08.2023) நடைபெற்றது.
பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழக அரசால் ஓய்வூதியர்களின் குறைகளை போக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கருவூலத்துறை அலுவலர்களை கொண்டு ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்களுக்கான குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஓய்வூதியர்களிடமிருந்து ஓய்வூதிய பலன்கள் வழங்கக் கோரியும், ஊதிய நிர்ணயம் செய்து திருத்திய ஓய்வூதியம் வழங்கக் கோரியும், சிறப்பு சேமநல நிதி, கொரோனா தொற்று மருத்துவ சிகிச்சை தொகையை மீள பெறுதல் மற்றும் விடுப்பு ஊதியம் வழங்கக் கோரியும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன.
இம்மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் கடந்த காலங்களில் வரப்பெற்ற 36 கோரிக்கை மனுக்களின் மீது மேற்கொள் ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களால் ஓய்வூதியதாரர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் உடனுக்குடன் கால தாமதமின்றி நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்அரசு கூடுதல் செயலாளர், ஓய்வூதிய இயக்கக இயக்குநர் து.ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ஸ்ரீகாந்த், மாவட்ட கருவூல அலுவலர் இராஜலெட்சுமி, அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.