Close
செப்டம்பர் 20, 2024 6:42 காலை

புத்தகம் அறிவோம்… எமதுள்ளம் சுடர் விடுக..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

சமூகத்தின்பால் அன்பு கொண்ட படைப்பாளிகள் தான் சமூக பொறுப்புமிக்க படைப்பாளிகளாக உருவெடுக்கிறார்கள். அத்தகைய படைப்பாளிகள்தாம் வரலாற்று மனிதர்களையும் அசாத்திய நிகழ்வுகளையும் படைப்பாக்கம் செய்து உலவவிடுகிறார்கள்.

இந்த அரிய படைப்புகள் காலத்தின் கொடையாக போற்றப் பட வேண்டியவை.எமதுள்ளம் சுடர் விடுக என்ற பெயரில், அறியப்படாத வரலாற்றுப் படைப்புகளையும் அரிய மனிதர்களையும் தமிழ் வாசகர்கள் தரிசிக்க எழுதினேன்.அது ஒரு அற்புத பொக்கிஷமாக உருவெடுத்து இந்நூலின் வழியாக நிலைபெற்றுள்ளது – எமதுள்ளம் சுடர் விடுக நூலின் முன்னுரையில் பிரபஞ்சன் கூறுகிறார்.

சாகித்ய அகாதமி விருதாளர் மறைந்த பிரபஞ்சன்  இந்து தமிழ் திசையில், புதன் பொக்கிஷம்  என்ற பகுதியில் “எமதுள்ளம் சுடர்விடுக” என்ற தலைப்பில் அறிமுகப்படுத்திய 44 அரிய, எல்லோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்களின் தொகுப்புதான் இது.

பாரதியுடன் பழகிய வ.ரா எழுதிய ‘மகாகவி பாரதியார்,’
உ.வே.சாவின் ‘ என் சரித்திரம்’,நாட்டியதாரகை “பாலசரஸ்வதி -அவர் வாழ்வும், கலையும், “நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின்” என் கதை”,ஊரன் அடிகளின் “இராமலிங்க அடிகள் வரலாறு “,அவ்வை சண்முகம் அவர்களின்” எனது நாடக வாழ்க்கை”,ராமசந்திர வைத்தியநாத் எழுதிய “சென்னைப் பட்டினம்-மண்ணும் மக்களும்”,

ஆர்.பாலகிருஷ்ணனின் “சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்”,தேன்மொழி தொகுத்த “வரலாற்றை எழுதும் பெண்கள் “,பா.ஜீவசுந்தரி எழுதிய “மூவாலூர் ராமாமிர்தம்- வாழ்வும் பணியும் “பழ.அதியமானின் “சேரன்மாதேவி- குருகுல போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்”.

சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய கல்வி அமைச்சர் எழுதிய ” இந்திய விடுதலை வெற்றி”,சமகால வரலாற்றாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவரான ஆ.இரா.வெங்கடாசலபதி எழுதியுள்ள” ஆஷ்அடிச்சுவட்டில் அறிஞர்கள், ஆளுமைகள் “.

தன்னம்பிக்கை எழுத்தாளர் நாகூர் ரூமியின் “சூஃபி வழி”,
பாரதி ஆய்வாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் தொகுத்த பாரதியைப் பற்றி பாரதி காலத்தில் வாழ்ந்தவர்கள் எழுதிய குறிப்புகளின் தொகுப்பு”பாரதி விஜயம்”,

சு.வெங்கடேசனின் “வைகை நதி நாகரீகம்”,இறையன் புவின்” இலக்கியத்தில் மேலாண்மை” ,எஸ்.ராமகிருஷ்ணனின்” உலக இலக்கிய பேருரைகள்”, சீனி. வேங்கடசாமியின் “தமிழும் சமணமும், “

முத்துராமன் எழுதிய “என்.எஸ்.கே-கலைவாணரின் கதை”, டாக்டர் தி.செ.சௌ. ராஜனின் “நினைவு அலைகள்” (பதிவின் நீளம் கருதி சில புத்தகங்களை குறிப்பிடவில்லை) ஆகிய நூல்கள் மிகச்சிறப்பாக அறிமுகப்படுதப்பட்டுள்ளது.

நூலாசிரியரின் வாழ்க்கைக் குறிப்புகள், நூல் சொல்லும் செய்திகள் யாவும் எளிய நடையில் அழகுற அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு அறிமுகத்தையும் வாசிக்கும்போது மூல நூலை வாங்கி வாசிக்கத் தூண்டுகிறது. அது பிரபஞ்சன் எழுத்தின் சக்தி.இந்து தமிழ் திசை வெளியீடு.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை-புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top