Close
நவம்பர் 22, 2024 6:39 காலை

29 ஆண்டுகளாக கண்தான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் 92 வயது இளைஞர்…!

புதுக்கோட்டை

கண்ணப்ப நாயனார் கண்தான பிரசார இயக்க நிறுவனத் தலைவக் டாக்டர் கோவிந்தராசன்

புதுக்கோட்டையில் கடந்த 29 ஆண்டுகளாக  ஓய்வின்றி கண் தான விழிப்புணர்வு  பிரசாரம் செய்து வருகிறார்  ஓய்வு பெற்ற ஆசிரியர், 92 வயது இளைஞர் டாக்டர் கோவிந்தராசன்.

அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கோவிந்தராசன். கல்யாணம், காதுகுத்து, கொண்டாட்டங்கள், இசைவிழா என எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் கோவிந்தராசனின் கையில், கண் தானம் செய்வதற்கான உறுதிமொழிப் படிவங்கள்  இருக்கும். கிடைக்கும் அந்தச் சிறு இடைவெளியிலும் நான்கு பேரிடம் கண் தானம் குறித்து நயமாக பேசி, அதில் இரண்டு பேரையாவது கண் தான உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்து போட வைத்து விடுவார் கோவிந்தராஜன். இப்படி இதுவரை சுமார் 15,000 பேரிடம் கண் தான உறுதிமொழிப் படிவங்களை வாங்கி இருக்கிறார்.

ஆகஸ்டு 25 முதல்    செப்டம்பர் 8 -ஆம் தேதி கண் தான இரு வாரவிழா நடைபெறுகிற இத் தருணத்தில்  அவரிடம் பேசியதில் கிடைத்த சில துளிகள் உங்கள் பார்வைக்கு ..1959 -ல் புதுக்கோட்டை நகராட்சிப் பள்ளியில் ஆசிரியர் பணியைத் தொடங்கினேன். அப்போதே, கலைநிகழ்ச்சிகள் மீது அதிக ஆர்வம். வகுப்பில்கூட கலைகளோடு ஒப்பிட்டுத் தான் மாணவர்களுக்கு பாடம் நடத்துவேன். அரசு சார்பில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சி களுக்கு முதல் ஆளா போயிருவேன்.

ஒருமுறை, கண் தானம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்துக்கு போயிருந்தேன். ‘விபத்து, நோய், உயிர்ச்சத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் பார்வையிழப்பு ஏற்படுகிறது. கண்களில் உள்ள கார்னியா என்ற பகுதி பாதிக்கப்படுவதால் பார்வை இழப்பு ஏற்படுகிறது.
கண்தானம் மூலமாக கிடைக்கும் கார்னியாவைப் பொருத்தி, பார்வையற்றவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்யலாம். ஒருவர் இறந்த பிறகும் அவரது கண்கள் 6 மணி நேரத்துக்கு உயிருடன் இருக்கும்.
அதற்குள்ளாக அந்தக் கண்களை எடுத்து பார்வையற்ற வர்களுக்கு பொருத்தி விடலாம். வீணாக மண்ணில் புதைந்து மக்கும் கண்களை தானமாக தரலாம். இதற்கு மக்கள் மத்தியில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு வரணும்’னு சொன்னாங்க.
அந்தப் பிரசாரத்தை கேட்டுட்டு வீட்டுக்கு வந்ததும், கண்ணை மூடிக்கிட்டு நடந்து பார்த்தேன். அஞ்சு நொடிக்குள்ள நாலு இடத்துல முட்டிக்கிட்டேன். அப்பத்தான் கண் தெரியாத வங்களோட கஷ்டம் தெரிஞ்சுது. அன்னைக்கு மனசுல உதிச்ச யோசனைதான் இன்னைக்கி கண்ணப்ப நாயனார் கண்தான பிரசார மையம்  வளர்ந்து நிக்குது.
புதுக்கோட்டை
தொழிலதிபர் எஸ். ராமச்சந்திரனிடம் பாராட்டு பெற்ற கோவிந்தராசன்

ஆசிரியர் பணியில இருந்து 1994-ல் ஓய்வு பெற்றதுமே இந்த இயக்கத்தை தொடங்கிட்டேன். ஆரம்பத்துல இந்த அமைப்பை எல்லோரும் வேடிக்கையாத்தான் பார்த்தாங்க. சிலர் கேலியா பேசிச் சிரிச்சாங்க. அதுக்காக சோர்ந்து போகவில்லை. கோயில் திருவிழா, நவராத்திரி விழா, உழவர் சந்தை, ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், கல்லூரி, பேருந்து நிலையம் என அத்தனை இடங்களிலும் கண் தானம் குறித்து பிரசாரம் செய்யறேன்.

கண் தான உறுதிமொழிப் படிவங்கள்ல கையெழுத்தும் வாங்க ஆரம்பிச்சேன். முன்னெல்லாம் அம்பது பேரு என் பிரசாரத்தைக் கேட்டாங்கன்னா, அதுல ரெண்டு பேராவது கண்களை தானம் செய்ய முன்வருவாங்க. இப்ப நிலைமை எவ்வளவோ மாறிடுச்சு.
பலபேரு அவங்களாவே என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு  தானே முன்  வந்து கண் தான உறுதிமொழிப் படிவத்துல கையெழுத்துப் போட்டுக் குடுத்துட்டுப் போறாங்க. திருமண விழாக்களிலும்  என்னோட பிரசாரத்தைக் கேட்டு  கண் தானம் பண்ணியிருக்காங்க.    உறுதி மொழிப் படிவங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல வந்ததுமே ஆட்சியரிடம்   கொண்டுபோய் கொடுத்துட்டு வந்துடுவேன்.
புதுக்கோட்டை
இசை நிகழ்ச்சி மூலம் கண்தான பிரசாரம் மேற்கொள்ளும் கோவிந்தராசன்

மனுஷனா பொறந்த எல்லோருக்கும் இறப்புங்குறது நிச்சயம். ஆனா, கண் தானம் கொடுக்குறவங்க. யாரோ ஒருவரோட பார்வை மூலமா இறந்த பிறகும் இந்த உலகத்துல வாழறாங்க. இந்த உண்மையை உணராதவங்க கண் தானம் செய்யத் தயங்குறாங்க.

அதனால, விலை மதிப்பில்லாத கண்களை மண்ணுக்குக் குடுத்துட்டு இருக்காங்க. இந்த நிலைமை மாறணும். எல்லாரும் கண் தானம் கொடுக்க முன்வரணும். இறுதி மூச்சு இருக்கும் வரை என்னுடைய இந்தப் பிரசாரம் தொடர்ந்துக் கிட்டே இருக்கும். அழுத்தம் திருத்தமாய் கூறினார் கோவிந்தராசன்.

புதுக்கோட்டை
உயர்நீதிமன்ற நீதியரசர் அரங்க மகாதேவனிடம் விருது பெறுகிறார் கோவிந்தராசன்

மேலும்  நமது பல வினாக்களுக்கு அவர் விளக்கமளித்தார். அவற்றையும் பார்க்கலாம்..

கருவிழி பாதிப்பால் பார்வை யிழந்த வர்களுக்குப் பார்வையை எப்படித் திரும்பக் கொடுப்பது?

கண் தானம் பெறப்படும் கருவிழியை, கருவிழி பாதிப்பால் பார்வையிழந்தவர்களுக்குக் கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சை (Corneal Transplantation) மூலம் பார்வையைத் திரும்பக் கொடுக்கலாம்.

யார் கண் தானம் செய்யலாம்?

ஒரு வயதுக்கு மேல் உள்ள யாரும் கண் தானம் செய்யலாம். நாம் வாழும்போதே கண்களைத் தானம் செய்ய விருப்பப் படிவம், உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.

நம்முடைய விருப்பத்தை உறவினர்களிடம் கூறி நம் வாழ்நாளுக்குப் பிறகு கண்களைத் தானமாகக் கொடுக்கலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் தானம் செய்யலாமா?

நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு நோய், இதய நோய் உள்ளவர்கள் கண்களைத் தானமாகக் கொடுக்கலாம்.

கண்களில் நரம்பு பாதிப்பு (Optic nerve disease), விழித்திரை பாதிப்பு (Retinal disease) உள்ளவர்கள்கூடக் கண் தானம் செய்யலாம்.

கண்புரை அறுவை சிகிச்சை (Cataract surgery) செய்து கொண்டவர்களும், கிட்டப்பார்வை, தூரப்பார்வை கண்ணாடி அணிந்திருப்பவர்களும் கண் தானம் செய்யலாம்.

யாரால் கண்களைத் தானம் செய்ய இயலாது?

காரணம் தெரியாத இறப்பு, கண்ணில் கிருமி பாதிப்பு உள்ளவர்கள், கருவிழி பாதிப்பு உள்ளவர்கள் (Corneal disease), கருவிழி அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், வெறி நாய்க் கிருமி நோய் (Rabies), எய்ட்ஸ் நோய், சிபிலிஸ் நோய், மஞ்சள்காமாலை கிருமி நோய் உள்ளவர்கள் (Hepatitis), புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், நச்சுக்குருதி நோய் (Septicemia) தாக்கியவர்கள் கண்களைத் தானம் செய்ய இயலாது .

இறந்தவர்களின் கண்களைத் தானமாக எடுக்கும்போது அவர்கள் ரத்த மாதிரிச் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு எச்.ஐ.வி., மஞ்சள்காமாலை கிருமி, மற்றக் கிருமிகள் உள்ளனவா எனப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகுதான் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும்.

இறந்த பிறகு எத்தனை மணி நேரத்துக்குள் கண்களை எடுக்க வேண்டும்?

ஒருவர் இறந்த ஆறு மணி நேரத்துக்குள் கண்கள் எடுத்துப் பாதுகாக்கப்படவேண்டும்.

கண் தானம் செய்ய, நாம் செய்ய வேண்டியவை என்ன?

கண்களைத் தானம் செய்ய விருப்பம் இருந்தால், அதற்கான விருப்பப் படிவத்தை அருகில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கண் வங்கியில் பெற்றுப் பதிவு செய்துகொள்ள வேண்டும். நம் பதிவு செய்த விவரத்தை, நம் விருப்பத்தைக் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

அந்தக் கண் வங்கியின் தொலைபேசி எண் நமக்கும், நம் குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். நாம் இறக்க நேரிட்டால், குடும்ப உறுப்பினர்கள் உடனடியாகக் கண் தான வங்கிக்குத் தொடர்பு கொண்டால், அவர்கள் நம் கண்களைத் தானமாகப் பெற்றுக் கொள்வார்கள்.

மருத்துவமனை கருவிழி வேட்டை (Hospital Corneal Retrieval) என்றால் என்ன?

மருத்துவ மனைகளில் விபத்து, அவசரச் சிகிச்சைப் பிரிவு, இதய அவசரச் சிகிச்சைப் பிரிவுகளில் ஆபத்தான தறுவாயில் உள்ள நோயாளிகள் இறக்க நேரிட்டால், அங்குள்ள கண் தான ஆலோசகர்கள் இறந்தவரின் குடும்பத்தினரிடம் கண் தானம் பற்றி விளக்கிக் கருவிழியைத் தனமாகப் பெறும் செயலே மருத்துவமனை கருவிழி வேட்டை (Hospital Corneal Retrieval). மருத்துவமனைகளில் மூளை சாவு ஏற்பட்டு உடல் தானம் செய்யும்போதும் கண்களைத் தானமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

கண் தானம் எடுப்பதற்கு முன் நாம் செய்ய வேண்டியது என்ன?

கண் தானம் பெறுவதற்கான அரசு, அரசு உதவி பெறும் கண் வங்கியிலிருந்து மருத்துவக் குழு வருவதற்கு முன் இறந்தவர்களின் கண்களின் இமைகளை மூடி இருக்கும்படி வைக்க வேண்டும்.

கண்களின் மீது ஈரமான பஞ்சை வைத்து மூடி வைக்க வேண்டும்.இறந்தவர்கள் அருகில் இருக்கும் மின்விசிறியை அணைக்க வேண்டும்.தலைப் பகுதியை அரையடி உயர்த்தி வைக்க வேண்டும்.

கண்களை எடுத்த பிறகு எப்படிப் பாதுகாக்கிறார்கள்?

எடுக்கப்பட்ட கண்களைக் கண் தான மையம் (Eye donation centre) அல்லது கண் வங்கியில் (Eye Bank) கிருமி தொற்று இல்லாத அறையில் கண்களின் கருவிழியை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து, பாதுகாக்கக் கூடிய திரவத்தில் வைத்துக் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்துகி றார்கள். கருவிழியை ஒரு வருடம் வரை கண் வங்கியில் பாதுகாத்து வைக்க முடியும்.

கண் தானம் மூலம் கிடைத்த கண்களை எப்படி அறுவைச் சிகிச்சைக்குப் பயன் படுத்துகிறார்கள்?

தானம் பெற்ற கண்ணின் கருவிழி, கண்ணின் வெளிப்புற வெண்படலம் (sclera) மட்டுமே பயன்படுத்தக் கூடியவை. கருவிழியால் ஏற்படும் பார்வையிழப்பை மட்டுமே கருவிழி மாற்று அறுவைசிகிச்சையால் சரிசெய்ய இயலும்.

கண்ணின் வெளிப்புற வெண்படலம் (sclera) செயற்கை கண் பொருத்தும் அறுவைசிகிச்சையில் பயன்படுத்தப்படும். கருவிழியைத் தவிரக் கண்ணின் மற்ற பகுதிகள் ஆராய்ச் சிக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

கருவிழி மாற்று அறுவைசிகிச்சை மூலம் ஒருவருக்கு நிச்சயம் பார்வை கிடைக்குமா?

இந்தியாவில் கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. அவர்களில் 90 சதவீதம் பேருக்குப் பார்வை திரும்பக் கிடைக்கிறது. ஒருவர் தானம் செய்யும் ஒரு ஜோடிக் கண்கள் மூலம், பார்வையற்ற இருவருக்குப் பார்வை கிடைக்கிறது என்றார் கோவிந்தராசன்.

 கண் தான பிரசாரம் செய்யும் கோவிந்தராசன் அவர்களை    கல்வியாளர்கள்பல்வேறு பொது அமைப்பினர் சமூக ஆர்வலர்கள் இன்றும் பாராட்டி வருகின்றனர்.

  கடவுளுக்கே தனது கண்களைக் கொடுத்தவர் என்று கண்ணப்ப நாயனாரைப் பற்றிச் சொல்வார்கள். அவரது பெயரில் கண் தானம் குறித்த ஒரு இயக்கமே நடத்திக் கொண்டிருக்கிறார் புதுக்கோட்டை ஓய்வு பெற்ற ஆசிரியர் கோவிந்தராசன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top